முகத்தில் சிரிப்பு… மூளையின் தெறிப்பு…
இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு ..”
நீங்களும் இப் பாடலைக் கேட்டு இரசித்திருக்கக் கூடும். வயிறு குலங்கச் எம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டே சாகச் சரிப்பென்றும், சங்கீதச் சிரிப்பென்றும், அசட்டுச் சரிப்பென்றும், ஆணவச் சிரிப்பென்றும், சிரிப்பை வகைப்படுத்திக் காட்டியவர் மூத்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் ஆகும். அத்துடன் நின்றுவிடாது சிரிப்பின் சிறப்புகளையும் சிரித்துக் கொண்டே தனது பாட்டூடே எடுத்து காட்டியிருக்கிறார்.
விஞ்ஞான உலகு இப்பொழுதுதான் விழித்துக் கொண்டு சிரிப்புப் பற்றிப் பல ஆய்வுகளைச் செய்து அதன் சிறப்புகளை கண்டறிய முற்படுகிறது.
சிரிப்பு ஒரு சமூக செயற்பாடு
சிரிப்பு என்பது சொற்களின் பங்களிப்பற்ற மனிதத் தொடர்பாடலின் ஒரு வடிவம் எனலாம். மனிதர்கள் தினமும் சராசரியாக 17 தடவைகள் சிரிக்கிறார்களாம். ஆனால் குழந்தைகள் 350 தடவைகளுக்கு மேல் சிரிக்கிறார்களாம்.
‘நீங்கள் எதற்கெல்லாம் சிரிக்கிறீர்கள்’ என்று வினவப்பட்டால் விடை என்னவாக இருக்கும்? நகைச்சுவைகளைக் கேட்டுச் சிரிக்கின்றோம் என்கிறார்கள் பலர். ஆனால் அது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை.
இதற்குக் காரணம் என்ன? தனியேயிருந்து ஒரு ஜோக்கை படித்து அல்லது பார்த்துச் சிரிப்பதைவிட, மற்றவர்களுடன் உரையாடும்போதே மனிதர்கள் அதிகம் சிரிக்கிறார்கள் என்கிறார் நரம்பியல் விஞ்ஞானியான Robert Provine.
அதாவது சிரிப்பானது தன்னளவானது என்பதை விட சமூக ஊடாடலுடன் கூடிய செயற்பாடாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஒரு விடயத்தையிட்டு நாம் தனியாக இருக்கும்போது சிரிப்பதைவிட மற்றவர்களுடன் கூடியிருக்கும்போது முப்பது மடங்கு அதிகமாகச் சிரிக்கின்றோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்;.
எத்தகையவர்களுடன் நாம் கூட இருக்கின்றோம் என்பதும் சிரிப்பின் அளவைத் தீர்மானிக்கிறது. எமக்கு விரும்பமானவர்களுடன் சேர்ந்திருக்கும்போதும், எம்மை அவர்கள் விரும்ப வேண்டுமென நாம் நினைப்பவர்களுடனும்
கூடியிருக்கும்போதும் சிரிப்பு அதிகமாக வருகிறது.
சிரிக்க சிரிக்க ஆய்வு
இவ்வருட Summer
Science Exhibition 2012 ல் இது பற்றிய ஆய்வு நடைபெற்றது. எதிரொலி எழும்பாத முiயில் அமைக்கப்பட்ட அறையிலேயே இது நிகழ்த்தப்பட்டது. பல்வேறு விதமான, வித்தியாசமான சிரிப்புகளை இங்கு ஆய்வு செய்தார்கள். தன்னிச்சையாக எழுகின்ற சிரிப்பு, ஒருவர் தான் சிரிக்க விரும்பாத வேளையிலும் சிரித்தல், வலுக்கட்டாயமாகச் சிரித்தல், சிரிப்பதாக வெளிக்காட்டும் தோரணை (posed laughter), போன்ற பல வகையான சிரிப்புகள் இங்கு ஆய்வு செய்யப்பட்டது.
உங்களுக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் செய்து உளமாரச் சிரியுங்கள் என பங்கு பற்றியவர்களுக்குச் சொல்லப்பட்டது. பிற்பாடு தாங்கள் சிரிப்பதாக மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் வண்ணம் சிரிக்கவும் வேண்டப்பட்டனர்.
உள்ளே என்ன நடக்கிறதெனத் தெரியாமல் வெளியிலிருந்து இச் சிரிப்புகளைப் பார்த்தவர்களால் எது உண்மையான சிரிப்பு, எது போலியான சிரிப்பு என்பதை பெருமளவு சரியாக இனம் காண முடிந்திருக்கிறது. இதற்குக் காரணம் உண்மையான சிரிப்பில் இருக்கக் கூடிய சில தனித்துவமான வெளிப்பாட்டுத் தன்மைகள்தான் என்கிறார்கள்.
“…மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு..” என எமது கலைவாணர் அன்றே பாடி வைத்தார். இவர்கள் இப்போதுதான் ஆராய்கிறார்கள் என எள்ளுகிறீர்களா?
இப்பொழுது நவீன கருவிகளின் உதவியுடன் விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது. ஆனால் ஆதி மனிதனால் கூட உளம் நிறைந்த சிரிப்பையும், வெளிப்பூச்சுச் சிரிப்பையும் தெளிவாக இனம் காண முடிந்திருக்கிறது என்பது உண்மைதான்.
இந்த ஆய்வின் மற்றொரு பகுதியும் சுவார்ஸமானது. இது தரும் செய்தி மேலும் கவனத்திற்குரியது. அச் செய்தி என்ன?
போலிச் சிரிப்பை துருவி ஆராயும் பார்த்திருக்கும் மனம்
‘கவனம்! போலியாகச் சிரியாதீர்கள்.
உங்களுடன் உரையாடிக் கொண்டிருப்பரின் மூளையானது ஏன் இவர் அவ்வாறு போலிச் சிரிப்பில் இறங்கியிருக்கிறார் என்பதை கூர்மையாக ஆராயும். அவரது உள்ளெண்ணம் என்ன என்பதை பகுத்தறிய முனையுமாம்.
இதை எவ்வாறு கண்டறிந்தார்கள். fMRI (Functional magnetic resonance
imaging) ஸ்கான் மூலம்தான். இரண்டு விதமான சிரிப்புகளையும் அவதானித்துக் கொண்டிருந்தவர்களின் மூளையின் செயற்பாடுகளை நுணுக்கமாக ஆராயப்பட்டது. வெளிப்படையாகத் தெரியும் மனித நடத்தையின் உள்நோக்கத்தைக் கண்டறியும் மூளையின் குறிப்பிட்ட பகுதியானது போலிச் சிரிப்பை அவதானித்துக் கொண்டு இருந்தவர்களில் அதீதமாகச் செயற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. போலிச் சிரிப்பிற்கான காரணத்தைத் தேடுவதற்காக அந்தப் பகுதி அதிகமாக உழைக்க நேர்ந்திருக்கிறது.
ஆம் மனம்விட்டுச் சிரிப்பது மற்றவர்களை சந்தேகப்பட வைக்காது, உளம் மலர வைக்கும்.
அதே நேரத்தில் போலிச் சிரிப்பானது மற்றவர்களின் மூளையைச் சிந்திக்க வைக்கும்.
போலிச் சிரிப்பு கேடானதா?
நாம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சிரிப்பதானது நாம் மகிழ்ச்சியுடன் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. அவர்களை விரும்புகிறோம் என்பதையும் நாம் அவர்களோடு மனதார இணைந்திருக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
. அது மற்றவர்களுக்குப் போலியாகத் தெரிந்தாலும் அதற்குள் மகிழ்ச்சியளிக்க வேண்டும் என்ற நேர்சிந்தனைச் செயற்பாடு இருப்பதை நினைவு கொள்ள வேண்டும்.
மனித இடைவெளிகளை நிரப்புவது சிரிப்பு
சிரிப்பு என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு என்கிறார்கள் பலர். ‘மனிதனின் முதற் சிரிப்பானது ஆபத்திலிருந்து தப்பி வந்தவன் தன் மன ஆறுதலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆரம்பித்திருக்கலாம் என்கிறார் தத்துவஞானியான John Morreallசிரிக்கும்போது பிறக்கின்ற உளஅமைதியானது உயிரினங்களில் இயல்பாக உள்ளுறைந்திருக்கும் சண்டையிடும் உணர்வைத் தளர வைக்கிறது.
இக் கருத்தின் நீட்சியாகவே சிரிப்பு என்பது மனித அல்லது உயிரினங்களிடையே உறவுகளை ஏற்படுத்துவதையும், வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்கிறார்கள் இன்றைய ஆய்வாளர்கள்.
இதைத்தான் ‘சிரிப்பென்பது இருவர்களுக்கு இடையேயான மிகக் குறைந்த இடைவெளி’ என Victor Borgeசொன்னார் போலும்.
மனித இனத்திற்கே சொந்தமானதா சிரிப்பு
அது சரி. ‘..மனித இனத்திற்கே சொந்தமானது சிரிப்பு..’ என்றும் பாடினாரல்லவா கலைவாணர்.
அது உண்மைதானா?
சில மிருகங்கள் சிரிப்பதுண்டு என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எலிகள், குரங்குகள் மற்றும் நாய்கள் எழுப்புகின்ற சில ஒலிகள் அவை சிரிப்பதை எடுத்துக் காட்டுகின்றன.
உதாரணமாக எலிகள் ஒன்றோடு ஒன்று விiயாடும்போது உணர்ச்சிப் பெருக்கில் உச்ச ஸ்தாயில் கீச்செனெச் சத்தமிடுவது சிரிப்பதின் அறிகுறிதான். குரங்குகளும் அவ்வாறே விளையாடும்போது சத்தமிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
நாய்களின் சிரிப்பை நீங்களே அவதானித்திருகக் கூடும். உங்களோடு விளையாடும்போது அல்லது தன் எஜமானைக் கண்ட மகிழ்ச்சியில் இருக்கும்போது அது வாலைக் குலைத்துக்கொண்டு ஒலி எழும்புகிறது அல்லவா? அதுதான் அதனுடைய சிரிப்பு எனலாம் அல்லவா?
இருந்தபோதும் மிருகங்கள் மனிதனைப்போல போலியாகச் சிரிப்பது அறியப்படவில்லை.
மருந்தாகும் சிரிப்பு
Laughter is the best medicine என ஆங்கிலத்தில் சொல்வார்களே. அது உண்மையா?
சிரிப்பதானது மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என்பதை பல மருத்துவ ஆய்வுகள் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனால் அதைப் பற்றி இங்கு பேச அவகாசமில்லை.
இருந்தபோதும்…
“.சிரி.. சிரி.. சிரிசிரியெனச் சிரி….” என ஆளவந்தானில் கமல் பாடுகிறாரே.
அதுபோல ‘கலகலவெனச் சிரி கண்ணில் நீர் வரச் சிரி…’;
சிரித்திருப்போம். மகிழ்ந்திருப்போம். நலமடைவோம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey),
DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்
0 comments:
Post a Comment