அற்புதம்...அற்புதம்....அற்புதம்

 சத்குருவின் விளக்கம்

உலகெங்கும், முக்கியமாக இந்தியாவில், கடவுளின் அவதாரங்கள் என்று தங்களைப் பிரகடனப் படுத்தி, பக்தர்களுக்கு ஆசி வழக்குவதாகக் கூறிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்  எண்ணற்ற சுவாமிமார்கள், அற்புதங்கள் செய்வதாகக் காட்டிக்கொண்டு  இருக்கின்றார்கள். இந்த அற்புதங்களினால்  தங்களுக்கு எந்தவொரு நன்மையையும் கிடைக்காது என்று அவர்களின் பக்தர்கள் அறிந்திருந்தும், எதோ நம்ப முடியாத என்னவோ நடந்துவிட்ட்தாக எடுத்துக்கொண்டு மேலும், மேலும் பக்த அடிமைகள் ஆகிவிடுகிறார்கள். 

சத்குரு சொல்கிறார், அப்படி ஒருவிதமான அற்புதங்களும் உலகில் நடைபெறுவது இல்லை என்று. நடப்பது எல்லாமே இயற்கையாகவே நடக்கின்றன. எந்தவொரு 'விளைவு' க்கும் விளக்கமான ஒரு 'காரணி' இருந்துகொண்டே இருக்கும். இந்த விளக்கத்தை புரிந்து விளங்குவதற்கான மூளைத்திறன் இல்லாது, அறிவு குறைவாக இருப்பதே அதை 'அற்புதம்',  'அதிசயம்' என்று அவர்கள் நம்புவதற்கு காரணம் ஆகும்.

ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பொத்தானை அமுக்கினால் இருண்ட வீடு வெளிச்சமாகும் என்று ஒருவர் காட்டியிருந்தால் அவரைக் கடவுள் ஆக்கி இருப்பார்கள். 20 ஆயிரம் கிலோமீடடர் தூரத்தில் இருப்பவருடன் நேரில் பார்த்துக்  கதைத்திருந்தால் அவர் தெய்வம் ஆகி இருப்பார். ஆகாயத்தில் பறந்திருந்தாலும் அவரும் தேவனே!

வரும் காலத்தில் நடைபெற இருக்கும் தொழில்நுட்ப  சாதனைகள் பலவும் தற்போது உள்ள நம்மறிவுக்குப் புலப்பட மாடடா. ஒரு நாள்,   எங்கோ இருக்கும் மனிதனோ, உணவோ அல்லது வேறு எந்தப் பொருளோ எங்கள் முன், 'அங்கே மறைந்து, இங்கே தோன்றி',  கணப்பொழுதில் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகள் வரலாம். இப்படி ஒரு விடயம் இப்போது நடைபெற்றால் அது 'அற்புதம்'. ஆனால் வரும் காலத்தில் அது வெறும் இயற்கை நிகழ்வு மட்டுமே! 

நமக்கு ஒரு விடயம் விளங்கவில்லை என்றால் அதற்கு கடவுள் முலாம் பூச முனைவது வெறும் அறியாமையே ஆகும். 

இந்தப் பூமியில் எப்படித்தான் பொருளை மேலே எறிந்தாலும் அது கீழே திரும்பவும் வந்து விழுகிறதே, இது அற்புதம் இல்லையா? நம் பூமி, அசுர வேகத்தில் சுழன்றுகொண்டு, அசுர வேகத்தில் சூரியனையும் சுற்றிக்கொண்டு,  அசுர வேகத்தில் அண்டத்தில் விரைந்து செல்லும்போது நாம் ஒன்றும் தூக்கி வீசப்படாமல் அப்படியே பூமியில் இருக்கிறோமே, இது அதிசயம் இல்லையா? பல விதமான உயிர் இனங்களும் சிக்கலான கலங்கள், உறுப்புகளுடன் பிறந்து, வாழ்ந்து  மடிகின்றனவே; இவை ஆச்சரியம் இல்லையா?  கழிவு, குப்பைகளில்  இருந்து மரம் வளர்ந்து இனிய பழங்கள் வருவதில்லையா? இவை எல்லாம் இயற்கையாகவே நடக்கும் அற்புதங்கள்தான்!

ஒரு புறாவை, சட்டைப் பையில் இருந்து எடுத்துத் தந்து அற்புதம் காட்டிட  இயலுமா என்ற கேள்விக்கு சத்குரு சொன்ன பதில்: "இந்தச் செயலால் எனது சடடைப்பை அழுக்காகும், உங்கள் கையில் ஒரு புறா இருக்கும். இதைத் தவிர இந்த அற்புதத்தால் உலகில் உள்ள எவருக்கும் ஒரு துளி அளவிலும் நனமை இல்லையே! நன்மை இல்லாத ஒரு அற்புதம் தேவைதானா?"

நோய் மாறுவது, பூ விழுவது, கதிரைச் சீலை சுருங்குவது, மாலை வளர்வது, வீபூதி கொட்டுவது, சிலையில் கண்ணீர் வழிவது, முடவர் எழுந்து நடப்பது  என்று  எல்லாமே ஒவ்வொரு காரணியின் நிமித்தம் நடைபெற்ற விளைவுகளே அன்றி அற்புதம் ஒன்றும் இல்லை.  சிலர் இப்படியான விளைவுகளை ஏமாற்று வித்தை மூலமும் கொண்டுவந்து புகழ் சேர்ப்பார்கள். அப்படித்தான் இவைகள் எல்லாம் அற்புதம் என்று வைத்தாலும் இதனால் மனித குலத்துக்கோ (அல்லது எறும்புக்கோ) ஒரு துளி அளவு நன்மைதானும் இல்லையே! இப்படி ஒரு அற்புதம் நடந்தால் என்ன,நடக்காது விடடால் என்ன, எவருக்கு வேண்டும்?

பூ மேலே போனால்தான் அற்புதம்; கீழே விழுவதையும் அதிசயம் என்று கூவித்திரிபவர்களை என்னவென்றுதான் அழைப்பது!

இப்படியான அற்புதங்களை நடத்துபவர்கள், விபூதிக்குப் பதிலாக ஒரு 10 தொன் ஆட்டா  மாவினை தினசரி உருவாக்கினால் இந்தியாவின் உணவுப் பிரச்சனை நீங்கி விடுமே! அத்தோடு, வைத்திய சாலைகள் எல்லாவற்றிலும் ஒரு 'வார்ட் ரவுண்ட்' தினசரி செய்துவிட்டு வரலாமே! சும்மா ஏன் ஓர் உயர்ந்த கதிரையில் ஜடங்கள் போல் உட்க்கார்ந்து கொண்டு இருக்கின்றார்கள்?

ஆதலால், அவர் சொல்கிறார், உலகில் எல்லாமே இயற்கையாக நடக்கும் அற்புதங்கள் என்று.

மனிதனே ஓர் அற்புதம். அவனின் மனம் தேவை இல்லாது கடவுள், சொர்க்கம் என்று அலைந்து திரிகின்றது.

உண்மையில், இந்த மனத்தின் சக்தியினால், அவன் மிருக குணம் உள்ளவனாகவோ, தெய்வீக குணம் கொண்டவனாகவோ மாறக்கூடிய அற்புதம் ஒன்றை நிகழ்த்த இயலும்.

                                 :  selvahurai , santhiragasan :                                
ohmSai Baba of Shirdi

3 comments:

  1. பூநகரி சிதம்பரம்Saturday, October 21, 2017

    மனிதனுக்கு பேராசை அளவுகடந்து போனதாலேயே கண்ட நீண்ட கண்கட்டி வித்தைக்காரர்களை எல்லாம் கடவுளாக நம்பி காலில் விழுந்து தம்மை படைத்தவனை மிதிக்க ஆரம்பித்து விட்ட்னர். மந்திரவாதிகளையும் ,தந்திரவாதிகளையும் நம்பும் இவர்கள் கடவுளை நம்பாத நாத்திகர்களே.

    ReplyDelete
  2. சீனிவாசன்Saturday, October 21, 2017

    உந்தச் சாமிமார்கள் மற்றும் இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ மத குருமார்கள் எல்லாம் தங்களுக்கு வரும் நோய்கள், கஷ்டங்களில் இருந்து தங்களை முதலில் காப்பாற்றிக் காட்டட்டும். பின்னர் பக்தர்களின் குறைகளைத் தீர்க்க வெளிக்கிடலாம். இறைவனை வேண்டிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  3. தேவராசாSaturday, October 21, 2017

    அன்று,2005 ம் ஆண்டு.சந்திரிகா புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து இலங்கையில் சற்று அமைதிகண்ட வேளையில் இங்குள்ள மதம்பரப்பும் பத்திரிகைகள் '''ஜீசஸ் இப்போது இலங்கையில் நிற்கிறார்.தமிழர்க்கு விடிவு கிடைக்க அவர் அங்கு விஜயம் செய்திருக்கிறார் எனப்பல வாறு புலம்பினர்.அதன் பின் எவ்வளவோ சொல்லொணாநடந்து கொண்டிருக்கின்றன .அவர் இரட்ஷகர் எங்கு மறைந்தாரோ தெரியவில்லை.

    ReplyDelete