எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:08

திருமதி டெனிஸ்  ஸ்சமாண்டட் -பெஸ்ஸர்ட் [Mrs Denise Schmandt-Besserat, a French-American archaeologist and retired professor of art and archaeology of the ancient Near East] ,என்ற தொல் பொருள் ஆய்வாளர் எழுத்து முறைகள் நாலு கட்டங்களில் ,10 ,000 ஆண்டு கால இடைவெளியில், சரித்திர காலத்திற்கு முந்திய முற்பண்புகளில் அல்லது முந்தைய வடிவத்தில் இருந்து இன்றைய அகரவரிசைக்கு [prehistoric antecedent to the present-day alphabet] பரிணாம வளர்ச்சி அடைந்ததாக பரிந்துரைக்கிறார். முன்பு நாம் சுட்டிக் காட்டிய ஐந்து  சுயாதீனமான எழுத்து முறைமைகளில், கி மு 3200 ஆண்டு அளவில் கண்டு பிடிக்கப் பட்ட  சுமேரியன் ஆப்பு எழுத்து மட்டுமே, இந்த காலத்தில் எந்த ஒரு தொடர்ச்சியின்மையும் இல்லாமல், சீராக தொடர்ந்ததை அடையாளம் காட்ட கூடியதாக உள்ளது. இந்த நாலு கட்டங்களாவன:

(அ) கி மு 8000–3500 ஆண்டுகளில், களி மண் டோக்கன்கள் ,ஒரு அலகு பொருட்களை பிரதிநிதித்துவம் செய்து [ clay tokens representing units of goods],குறிப்பிட்ட பொருட்களை அல்லது கால்நடைகளை கணக்கிடுவதற்குப் பாவிக்கப் பட்டமை ;

இக்கால கட்டத்தில்,டோக்கன்கள் [tokens], எண்ணிகளாக பாவிக்கப் பட்டு பொருட்கள், கால்நடைகள் கணக்கிடப் பட்டு கண்காணி க்கப்பட்டன. ஒவ்வொரு டோக்கன் உருவமும் ஒரு குறிப்பிட்ட  பண்டம் அல்லது விற்பனைப் பொருள்களை குறிக்கும் குறிகாட்டிகளாக இருந்தன. உதாரணமாக, ஒரு கூம்பு வடிவ டோக்கனும், ஒரு கோள வடிவ டோக்கனும் [a cone and a sphere], சிறிய பெரிய தானிய அளவை குறித்தன. அவ்வாறே  நீள்வட்ட [முட்டைவடிவ/ovoids]  வடிவ டோக்கன் எண்ணெய் ஜாடிகளை குறித்தன. அங்கு காணப்பட்ட  300 வேறுபட்ட டோக்கன்கள், பல வகை பொருட்களை கணக்கிட, போது மானவையாக இருந்தன. (Schmandt-Besserat 1992).இது [டோக்கன்], பேச்சு மொழியில் உள்ள ஒரு சொல் போல, ஒரு கருத்தை அல்லது செய்தியை கொண்டிருந்தது. எனினும் பேச்சு போல் இல்லாமல், டோக்கன், சரக்கு அல்லது பண்டம் போன்ற உண்மையான பொருட்களின் செய்திகளை மட்டுமே தரவல்லது. மேலும் ,டோக்கன் முறை,பேச்சு மொழி போல், சொற்புணர்ச்சி [சொற்றொடரியல்/ syntax] புரிவதில்லை. சொற்றொடரியல் அல்லது தொடரியல் (syntax) என்பது, ஒரு சொற்றொடரில், சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையைக் கட்டுப்படுத்துகின்ற, விதிகள், அல்லது ஒழுங்கமைந்த தொடர்புகள் பற்றிய விதிகள் ஆகும். இது, வெவ்வேறு சொற்கள் எவ்வாறு இணைந்து துணைத்தொடர்களாகவும் (clauses), அவை இணைந்து எவ்வாறு சொற்றொடர்கள் (sentences) ஆகவும், உருவாகின்றன என்பது பற்றிக் கவனத்தில் கொள்கிறது. எனவே, டோக்கன் முறையில் டோக்கன் அடுக்கப் படும் வரிசை முக்கியம் இல்லை.அது எங்கிருந்தாலும் ஒரே கருத்தையே கொண்டிருக்கும். உதாரணமாக மூன்று கூம்பு, மூன்று நீளுருளை,எப்படியும் பரவி அங்குமிங்குமாக வைத்தாலும் அதன் கருத்து ஒன்றே ஒன்று தான், அதாவது மூன்று கூடை தானியம் மற்றும் மூன்று எண்ணெய் ஜாடிகள் ஆகும். மேலும் ஒரே மாதிரியான, ஒரே வடிவான டோக்கன்கள் அண்மைக் கிழக்கு (Near East) பகுதியில் பெரும்பாலான இடங்களில் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இப் பகுதிகளில் ஒன்றிற்கு மேற் பட்ட பல பேச்சு மொழிகள் புழக்கத்தில் இருந்துள்ளன. இவை யாவும் எமக்கு எடுத்து காட்டுவது
என்னவென்றால், டோக்கன், ஒலியியல் [phonetics] அடிப்படையில் அல்ல என்பதே ஆகும். எனவே டோக்கன் பிரதிநிதித்துவம் செய்த பொருட்கள் இலகுவாக, எந்த சிரமமும் இன்றி எந்த பேச்சு மொழியிலும் விவரிக்க முடிந்தது. இது வணிக நடவடிக்கைகளை இலகுவாக்கியது. அத்துடன் எத்தனை ஒரே மாதிரியான,ஒரே வடிவான டோக்கன் அங்கு இருந்தால்,அந்த டோக்கன் குறிக்கும் பொருள் அத்தனை தரம் அங்கு உள்ளது என்பதாகும். உதாரணமாக,X எண்ணெய் ஜாடிகள் , X நீளுருளையால் குறித்து காட்டப் படும்.

பொதுவாக,டோக்கன் முறை இரண்டு விதமான டோக்கன்களை கொண்டுள்ளது. ஒன்று எளியது [படம் 1] மற்றது சிக்கலானது [படம் 2 ] ["plain" [figs. 1] and "complex" [figs. 2]]. இலகுவான கேத்திர கணித வடிவத்தையும் தட்டையான மேற் பரப்பையும் எந்த வித கீறல் அடையாளங்களும் இல்லாதது முதலாவது வகையாகும். மற்றவை இரண்டாவது வகையாகும். விவசாயத்தின் ஆரம்ப காலத்தில், இந்த எளிய வடிவ டோக்கன்கள் தோற்றம் பெற்றன. இவை அதிகமாக, விளைச்சலை கணக்கிட்டு, பருவ காலங்களுக்கூடாக வாழ்வாதாரத்தை திட்ட மிட உதவின. ஆனால், சிக்கலான டோக்கன்கள் நகரங்களின் எழுச்சி வரை தோன்றவில்லை. முந்தைய எளிய வடிவ டோக்கன்கள் கி மு 8000-7500 ஆண்டை சேர்ந்த "செழுமையான பிறை" ( Fertile Crescent ) என அழைக்கப்பட்ட மத்திய கிழக்கு பகுதியில் கண்டு எடுக்கப் பட்டன. அப்பொழுது மக்கள் வேடையாடி சேகரிக்கும் வாழ்வு நிலையில் இருந்து, விவசாய வாழ்வு நிலைக்கு மாற்றம் பெற்றுக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் வாழ்வு பெரும்பாலும் தானிய நுகர்வின் மீது மட்டுமே தங்கி இருந்தது. அவர்கள் வீட்டு கால் நடைகள் வளர்த்ததிற்க்கான தடையங்கள்
கிடைக்க வில்லை. ஆனால், சிக்கலான வடிவமைந்த  டோக்கன்கள் அதிகமாக கி மு  நான்காவது ஆயிரமாண்டின் இறுதிப் பகுதியிலேயே தோன்றின. அப்பொழுது மத்திய கிழக்குப் பிரதேசம் நகரமயமாகிக் கொண்டும் சுமேரியன் ஆலய நிர்வாகம் எழுச்சி பெற்றுக் கொண்டும் இருந்தன. இன்று எமக்கு கி மு 3350 ஆண்டுகளுக்கும் கி மு 3100 ஆண்டுகளுக்கும் இடையில் ஆலய நிர்வாகம் நடை முறைப் படுத்திய பொருளாதாரம் பற்றிய தகவல்கள், உருளை முத்திரைகளில் [cylinder seals] பொறிக்கப் பட்ட படங்களில் இருந்து அறிய முடிகிறது. அப்படியான முத்திரை ஒன்று [படம் 4] இணைக்கப் பட்டு உள்ளது. உதாரணமாக, இணைக்கப் பட்ட சுமேரியன் முத்திரை,படம் 4 , தனி நபர்கள் ஊர்வலமாக சென்று தமது கட்டணங்களை,ஆலயத்திற்கு பொருட்களாக வழங்குவதை காட்டுகிறது. 'என்' [En] என கெளரவமாக அழைக்கப் படும் சுமேரிய ஆலய நிர்வாகி அநேகமாக இந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கு கிறார் (படம் 4 ,a உம் b யும்). இவரை  தாடி ,சிறப்பு தலை பாகை மற்றும் நீண்ட ஆடை  மூலம் அடையாளம் காணலாம். மேலும் படம் 4 c, ஆலய நிர்வாகியான 'என்',  வரியை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தாமல் தாமதிக்கும் குற்றவாளிக்கு தண்டனையாக அடித்து சித்திரவதை செய்வதை காட்டு கிறது. இப்படியான வரி விதிப்புக்கு ,கட்டாயம் ஒரு அளவிடும் முறையும் மற்றும் இவைகளை பதிவு செய்வதற்கு ஒரு துல்லியமான கணக்கிடும் முறையும் தேவைப் படுகிறது. ஆகவே, இந்த வேலையைத் தான் சிக்கலான வடிவமைப்பு கொண்ட டோக்கன்கள் நிறை வேற்றின என நாம் ஊகிக்கலாம். அதாவது ஒவ்வொருவரினதும் வரி சம்பந்தமான தகவல்களை இவைகள் மூலம் ஆலய நிர்வாகிகள் பாது காத்து அல்லது பதிந்து வைத்திருந்தார்கள் என நாம் கருதலாம். படம் 5 ,வரி செலுத்துதல் பற்றிய ஒரு சுமேரிய ஆவணம். இது கி மு 2500 ஆண்டைச் சேர்ந்தது. அங்கு எல்லாவற்றிற்கும் வரி அறவிடப் பட்டது. ஆனால் எல்லா வற்றிலும் மிகவும் சுமையானது ஒவ்வொரு குடும்பத்தினரும் கட்டாயம் ஆலய நிர்வாகத்திற்கு செய்ய வேண்டிய உழைப்பு ஆகும். இதை சுமை ["burden"]  வரி என அழைத்தனர். 


செய்திகளை ஒரு குறியீட்டு முறையில் பதிவது தான் எழுத்து என வரையறுக்கப்பட்டால், நான் இப்ப இந்த செய்திகளை, தகவல்களை உங்களுக்கு தருவதற்க் காக பதியும் எழுத்து, ஒரு எளிய பண்டைய  கணக்கியல் நுட்பத்தில் இருந்து பரிணமி த்தது எனலாம். புதிய கற் காலத்தில், கி மு 7500 ஆண்டளவில் தமது விவசாய பொருட்களான வீட்டு கால் நடைகள் மற்றும் பயிரிடப் பட்ட தாவரங்களையும் ,பயிர் விளைச்சல்களையும், அவ்வற்றின் தகவல்களையும் கொடுக்கல் வாங்கல்களையும் கணக்கிடுவதற்க் காக அல்லது பதிவதற்க் காக சிறிய களி மண் டோக்கன்கள் பாவிக்கப் பட்டன.அந்த நுட்பத்தின் படிப்படி வளர்ச்சியே இன்றைய எழுத்தாகும். மேலும் உருக் நாகரிக காலத்தில் [கி மு 4000-3000 ],நகர்ப்புற நகரங்கள் வளர்ச்சி அடைந்து, அங்கு கணக்கியல் நிர்வாக தேவைகள் அதிகரித்தன. உதாரணமாக, இரண்டாம் நிலை பொருட்க ளான கம்பளி, ஆடை, உலோகங்கள்,தேன், ரொட்டி, எண்ணெய்,பீர்[பியர்], துணி, ஆடைகள்,கயிறு, பாய்கள், தரைவிரிப்புகள், தளபாடங்கள், மற்றும் நகை, கருவிகள், வாசனை போன்றவைகள் கணக்கிட வேண்டி இருந்தன. இவ்வாறான வெவ்வேறு பொருட்களை சமாளிப்பதற்க் காக ,வெவ்வேறு வடிவ [உருவ] அல்லது அளவு [size] டோக்கன்களின் எண்ணிக்கை அங்கு கிட்ட தட்ட  250 க்கு கி மு 3300 அளவில் அதிகரித்தது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:09  தொடரும்

No comments:

Post a Comment