தமிழ்மேல் ஏனிந்தக் கொலைவெறி

[கனடாவிலிருந்து ஒரு கடிதம்]
அன்புள்ள அப்புவுக்கு                                                               14-01-2015
நான் நலமுடையேன்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.உங்கள் கடிதம் கிடைத்தது.உங்கள் சுகமறிந்து மகிழ்ச்சி.
அப்பு, உங்கள் கடிதத்தில் நம்மினமும் மொழியும் தொடர்பாக கேள்விகள் தொடுத்திருந்தீர்கள்.உங்கள் கேள்விகள் நியாயமானவைதான்.
அப்பு, தமிழர்கள் ஒருவரைஒருவர் சந்திக்கும் போதும் ஆங்கிலத்தில் உரையாடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதும்,பிறந்து பேச வாய் திறக்கும் குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் மழலை மொழி பேசி அவர்கள் நெஞ்சில் அதனை விதைப்பதனையும் நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.
அப்பு, பொது இடங்களில்  பழக்கமில்லாத தமிழனைக் கண்டால் அவர்களோடு பேச மனமின்றி த்தலை குனிந்து செல்லும் தமிழன் அடுத்த நாட்டுக்காறனைக் கண்டால் (அவனுடைய  மொழி தெரியாவிட்டாலும் கூட) அவனுடைய மொழியில் வணக்கம் கூறி அவனை மகிழ்வித்து  அதில் தானும் சந்தோசம் அடைகிறான். இனங்களுக் கிடையில் ஒற்றுமை வளரட்டும்.நான் வேண்டாம் என்று கூறவில்லை.ஆனால் தன்னினத்தை மட்டும் தமிழன் அவமதிக்கிறான் என்பதுதான் மெல்லமுடியாத உண்மை.
அப்பு, பல்லினம் இணைந்து வாழும் இந்நாடுகளில் வேற்று நாட்டு சிறுவர்கள் கூட  தம்மினத்தாரினைச் சந்திக்கும்போது தம்மொழியிலேயே பேசிப்பழகுவார்கள். ஆனால். எம்மினத்தவர் எம் சிறுவர்களின்  மழலைப் பருவத்திலேயே தாய்மொழியினை பகைமொழியாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துவதனாலேயே பிள்ளைகளும் அவற்றினை தவிர்த்து  வருகிறார்கள்.
பிள்ளைகளை குறை கூறுவானேன்? விஜே தொலைக்காட்சியில் இடம்பெற்ற ''நீயா நானா'' (Neeya? Naana? 30/Nov/2014) நிகழ்ச்சியில் தமிழ்/ஆங்கில ஆசிரியர் சந்திப்பில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களே தம் பிள்ளைகளை தாம் ஆங்கிலம் மூலம் கற்பிக்கும் பாடசாலைகளுக்கு  கல்வி கற்க அனுப்புவதாக கூறியதும்  அதற்கு அவர்கள் கூறிய நொண்டிச் சாட்டுகளும் ஆச்சரியமாக இருந்தது.
அப்பு, கௌரவம் என்பது ஒரு சமுதாயத்தின் சிந்தனைகளிலேயே தங்கியுள்ளது. உதாரணமாக ஒரு போலிஸ் உத்தியோகத்தினை உயர்ந்த குரலில் பெருமையாக பேசினால் அது ஒரு உன்னதமான உத்தியோகம். அதையே தாழ்ந்த குரலில் இகழ்ந்து பேசினால் அது தரம் குறைந்த உத்தியோகம் தான். இப்படியாக உலகத்திலேயே தன்  தாய் மொழியில் பேசினால் தரக்குறைவாய் எண்ணும் இனம் என்றால் அது தமிழனாக மட்டுமே இருக்க முடியும்.
அப்பு,ஒருவன் பல மொழிகள் படிக்கலாம்.அது தவறில்லை.ஆனால் தாய் மொழியை தவிர்த்துக்  கொள்வது மாபெரும் தவறு. ஏனெனில் எல்லோருடைய அம்மாக்களையும் மரியாதைக்காக அம்மா என்று அழைக்கலாம். ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமே அம்மாவாக இருக்க முடியும்.
அப்பு, அரசியல் ரீதியில் பார்த்தால் தமிழ் நாட்டினை ஒரு ஆங்கில நாடாக்க துடிக்கும் எம் உடன் பிறப்புக்கள் பலர். ஆனால் அங்கு சிலர் இலங்கையில் மட்டும் ஒரு தமிழ் ஈழம் பிறக்கவேண்டும்  என்று ஏன் துடிக்கிறார்கள் என்பது ஒன்றும் புரியாத புதிராகவே உள்ளது!!!
அப்பு, உங்கள் சுகத்தினையும், தேவைகளையும் எழுதுங்கள்.கடிதங்கள் மூலம் தொடர்வோம்.
இப்படிக்கு 
அன்பின் மகன் 
செ.ம.வேந்தன்.


1 comment:

  1. tamilai ippadi eluthinaalthaan enkalukku vilankum. tamililai eluthuvathe kashdamaai poividduthu. konch naalil kathiyum vilankaamal pokum paarunko.

    ReplyDelete