சும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா?

                                                                                             

நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பயன்படுத்தும் ஒரு சொல்சும்மாஎன்பதாகும். இது பற்றி ஒரு சிறு விளக்கம்!

"சும்மா இருப்பதே சுகம்!" இச்சொல் "திருமந்திரம்" என்ற நூலில், திருமூலரால் எடுத்தாளப்படுகிறது. "சும்மா" என்பதற்கு "அமைதியாய் இருப்பதே சுகம்" என்று பொருள். ஞானிகள், முனிவர்கள், தவசிகள் தங்கள் வாழ்வைத் துறந்து அமைதியாய் ஓரிடத்தில் தவம் செய்வதையே இச்சொல் குறிப்பதாக அமைந்தது.

வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கும் குழந்தையிடம், அம்மா, "சும்மா நிற்காதே; எனக்கு உதவிசெய்!" என்பாள். இதில் வரும் "சும்மா" என்ற சொல்லுக்கு "வேலை ஒன்றும் செய்யாமல், நிற்காதே" என்று பொருள்.

சில இடங்களில் நல்ல மாமரமோ, தென்னை மரமோ வளர்ந்திருப்பதைக் காணலாம். அப்பொழுது ஒருவர் "யாரும் தண்ணீர் ஊற்றாமல் இம்மரம் சும்மா வளர்ந்திருக்கிறதே!" என்று கூறுவார். இவ்விடத்தில் "சும்மா" என்பதற்கு, எவ்வித உதவியும் இன்றித் தன்னந்தானே இயற்கையாக வளர்கிறது" என்று பொருள்.

"என் அன்னையின் நினைவு "சும்மா சும்மா" வந்து என்னை வாட்டியதுஎன்கிறார் ஒருவர். இதில் வரும்சும்மா சும்மாஎன்பதற்குஅடிக்கடிஎன்று பொருள்.

சும்மா கிடந்த நிலத்தைக் கொத்திஎன்ற பாடல். கவிஞர் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் எழுதியதாகும். இதில் வரும்சும்மாஎன்பதற்குத்தரிசாக- விளைச்சல் இல்லாமல்என்று பொருள்.

புவியரசன் சோற்றைச் சும்மா சாப்பிட்டான். சோறு உண்ணும் பொழுது நமக்கு வேண்டிய காய்கறிகள். கறிவகைகளை வைத்துக் கொண்டு உண்போம். இவனுக்கு மிகுந்த பசியாக இருந்ததனால் மற்ற கறிகளைச் சேர்த்துக் கொள்ளாமல் வெறுஞ்சோற்றை மட்டும் உண்டான். ஆதலால் இங்கு வரும்சும்மாஎன்ற சொல் வெறும் சோற்றை மட்டும் உண்டான் என்பதைக் குறித்து நின்றது.

வீட்டில் சிறு பிள்ளைகள் குளித்து விட்டு, ஆடையின்றிக் காட்சியளிப்பார்கள். அதை நாம், குழந்தைசும்மா நிற்கிறதுஎன்று சொல்வோம். இங்குக் குறிக்கப்படும்சும்மாஎன்பதற்கு ஆடையணி எதுவுமில்லாமல் நிர்வாணமாக நிற்கிறது என்பதே பொருளாகும்.

நான் உன்னைக் கொன்று விடுவேன்’’ என முல்லையிடம்சும்மாசொன்னதை அவள் தவறாக நினைத்து விட்டாள்!’’ இதில் வரும்சும்மாஎன்பதற்குவிளையாட்டாக ஒரு பேச்சுக்குச் சொன்னதைஎன்று பொருள் கொள்ள வேண்டும்.

சிலர், விலையுயர்ந்த ஆடைகளையும், அழகான ஆடைகளையும் அணிவது அணிவது இயற்கை. அப்படி அணியும் ஒருவனைப் பார்த்துஉன் ஆடை அழகாக இருக்கிறதே! எப்போது தைத்தாய்?’’ என்று கேட்டால்சும்மா இருக்கும் போது’’ என்று விடை வரும். இங்கேசும்மாஎன்பதற்குஓய்வாக இருக்கும் போது’’ என்று பொருளாகும்.

அன்பரசன், ‘’தன் குடும்பத்தைச் சீரழித்தவரைச் சும்மா விடப் போவதில்லை’’ என்று கூறினான் இதில் வரும் ‘’சும்மா விடப்போவதில்லை’’ என்பதற்குப்பழிவாங்காமல் விடுவதில்லை’’ என்பதே பொருளாகும்.

தற்போது அனைத்து வீடுகளிலும் கைப்பேசி உள்ளது. சிலர் எப்பொழுதும் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே இருப்பர். இதனால் வெளியிலிருந்து வரும் செய்திகள் தடைப்படும். இதனால் அன்னை ஆத்திரமுற்று இவ்வாறு கூறுவார்: “சும்மா வெட்டிப் பேச்சுப் பேசியது போதும் கைப்பேசியைக் கீழேவை. இதில் வரும்சும்மாஎன்பதற்குஅனாவசியமாகஎன்று பொருள்.

நம் வீட்டிற்கு விருந்தினராக வருபவர்கள் வெட்கப்பட்டுக் கொண்டு அருந்துவார்கள், அப்போது நாம், “சும்மா அருந்துங்கள் இது நம்ம வீடு மாதிரி’’ என்று சொல்வோம், இங்கு வரும்சும்மாஎன்பதற்குவெட்கப்படாமல் உண்ணுங்கள்என்று பொருளாகும்.
-தகவல்:கயல்விழி           ஆக்கம் :-முனைவர். மா. தியாகராஜன்.

1 comment:

  1. பெரியவர் சும்மா எழுதியிருக்கின்றார்; நாங்களும் சும்மா வாசிக்கக்கூடியதாய் இருக்கின்றது!

    ReplyDelete