அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது.
அநீதியை ஆதரிக்கின்றது
உலகில் வேரூன்றியுள்ள வர்க்க வேறுபாடுகளையும் ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளித்தும் போன்றவை எவ்வாறு நடுத்தர மற்றும் தொழிலாள விவசாய மக்களை துன்புறுத்துவார்கள் என்றும் உலக முதலாளித்துவத்தாலும் சர்வதேச ஆட்சியாளர்களாலும் எவ்வாறான அநீதிகள் எதிர்காலத்தில் வர்க்க நலன் சார்ந்து அரங்கேறும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரேயே சமூகம் தொடர்பாகவும் சுரண்டல் தொடர்பாகவும் எழுதிவைத்துவிட்டு சென்ற லெனின், மார்க்ஸ் போன்ற சமூக, அரசியல் தத்துவார்த்த மேதைகள் போற்றுதற்குரியவர்கள்.
அவர்கள் சொல்லிய அனைத்தும் தற்போது நிகழ்கின்றன. உலகெங்கும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் கைகோர்த்து நிற்கின்றார்கள்.
“உலகம் நீதியை நிராகரிக்கின்றது: அநீதியை ஆதரிக்கின்றது” என்ற தலைப்பில் முன்னர் ஒரு ஆசிரிய தலையங்கத்தை தீட்டியிருந்தோம்.
2009ம் ஆண்டு எமது தாயக மண்ணில் உலக நாடுகள் பல குண்டு வீசி எமது மக்களையும் போராளிகளையும் (குழந்தைகள் உட்பட) கொன்றழித்தபோது எமது கதிரோட்டம் அந்த கொடுமைகளைக் கோடிட்டுக் காட்டியது. உலகம் அநீத்pயை ஆதரிக்கின்றது என்று கண்ணீர் வடித்தோம்.
இந்த வாரமும் இதே தலைப்பில் தான் எமது கதிரோட்டம். தற்போது உலகெங்கும் ஆட்சியாளர், மக்களைச் சுரண்டும் முதலாளித்துவம் சார்ந்தவர்களோடு இணைந்து தொழிலாளர்களையும் விவசாயிகளையும் நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்களையும் நசுக்கும் கொடூரமான செயற்பாடுகள் உலக நாடுகள் அனைத்திலுமே இடம்பெறுகின்றன.
இந்தியாவில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்; மருத்துவத் துறைக்கு வரக்கூடாது என்பதற்காக “நீட்” முறையை மருத்துவத் தேர்வுகளில் அறிமுகம் செய்வது. செல்வம் சேர்க்கும் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர் மட்டுமே மருத்துவர்களாக வந்து மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்கு அதிக லாபத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்;ற கபட எண்ணம் ஒரு புறம். அநீதிகளை தட்டிக் கேட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஸ் கன்னட மண்ணில் துப்பாக்கிக் குண்டுகளால் கொல்லப்பட்டுள்ளார். பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக பர்மா ஆட்சியாளர்கள் நடத்தும் கொலைவெறி ஆட்டத்தை கண்டும் காணாதது போல் இருக்கும் உலக நாடுகள். எமது தாயக மண்ணிலும் காணமற்போனவர்களின் உறவுகள் எத்தனையோ மாதங்களாக நடத்தும் போராட்டங்களை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளார்கள். வேலை இல்லாப் பட்டதாரிகளின் போராட்டத்தை “புஸ்வாணம்”
ஆக்கிவிட்டது மைத்திரியின் அரசு.
இவ்வாறாக உலக நாடுகள் எங்கும் மக்கள் போராடுகின்றார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் உலகெங்கும் இருந்து கொண்டு கைகளை கோர்த்த வண்ணம் தங்கள் சுரண்டலை சுதந்திரமாகச் செய்கின்றார்கள். இதுவே யதார்த்தம்.
நன்றி: உதயன் கதிரோட் டம்
0 comments:
Post a Comment