குழந்தையும் கிழவரும் குணத்தால் ஒன்று
அவர்கள் வளர்வதும் தளர்வதும் ஒரே சுழற்சக்கரத்தில் அமையும்!.
ஒரு குழந்தை பிறந்ததிலில் இருந்து 50 வயது வரை என்ன, என்ன மாதிரியாக வளர்ந்து, உயர்ந்து ஓர் ஏறுமுகமாகப் போய்க்கொண்டிருக்கின்றதோ, அதேபோல அது 50 வயதில் இருந்து 100 வயசு வரை தளர்ந்து, தாழ்ந்து முற்றிலும் எதிர்த் திசையில், ஓர் இறங்குமுகமாக வந்து முடியும் என்று காட்டுவதற்கான, ஒரு நகைச்சுவையான ஒப்பீடுதான் இந்தக் கட்டுரைக்கான நோக்கம்.
அதாவது, ஒரு குழந்தையின் 0 வயசில் நடக்கும் விடயங்கள் எல்லாம் கிழவரின் 100 வயசில் நடக்கும்.
குழந்தையின் 10 வயசில் நடக்கும் விடயங்கள் போல கிழவரின் 90 வயசில் நடக்கும்.
குழந்தையின் 30 வயசில் நடக்கும் விடயங்கள் மாதிரி கிழவரின் 70 வயசில் நடக்கும்.
இதை விளக்குவதற்காக ஓர் ஒப்பீடு:-
குழந்தை 0 வயசு:
உள்ளிருந்து உயிராய் இவ்வுலகம் வந்து, கண்களைத் திறந்து, அழுது, தாயின் முகத்தைப் பார்த்து, கடை வாயால் பால் வழிய அருந்தும்.
கிழவர் 100 வயசு:
கடை வாயில் வழியப் பால் அருந்தி, பிள்ளைகளைப் பார்த்து அழுது, கண்களை மூடி, உயிர் நீங்கி வெளியுலகம் செல்வார்.
குழந்தை 0 - 2 வயசு வரை:
மல, சலம் போவது அறியாது; துணி கட்டிப் பராமரிக்க வேண்டும்.
படுக்கையில் இருந்து உடம்பு பிரட்டி, மெதுவாக தவழ்ந்து, எழும்பி நின்று, விழுந்து, விழுந்து நடக்கும். பிராமில் வைத்துத் தள்ளிக்கொண்டு திரிய வேண்டும்.
தாய், தந்தையரை உணரும்; சுற்றத்தாரை அறியும்.
கிழவர் 98 - 100 வயசு வரை:
சுற்றத்தாரை மறப்பார்; பிள்ளைகளையும் மறப்பார்.
நடை தளம்பி, துவண்டு, தவழ்ந்து, குப்புற விழுந்து, படுக்கையில் போவார். தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு திரிய வேண்டும்.
மல, சலம் போவது அறியாது; துணி கட்டிப் பராமரிக்க வேண்டும்.
குழந்தை 1 - 20 :
குழந்தையில் பல் இல்லாப் பொக்கை வாய். படிப்படையாகப் பல் முளைத்து 20 வயசில் 32 பற்கள்.
புதிய தொழில் நுட்ப சாதனங்களில் ஆர்வம்.
கிழவர் 80 - 99 :
புதிய தொழில் நுட்ப சாதனங்களின்பால் பயம்.
32 பற்களும் படிப்படியாகப் விழுந்து 99 வயசில் பொக்கை வாய்.
இளையோர் 5 - 25 :
படிப்படியாக அறிவு கூடிப் படித்துப் பட்டம் பெற்று உலக விடயங்களில் நாட்டம்.
முதியோர் 75 - 95 :
உலக விடயங்களில் நாட்டம் குன்றி, படிப்படியாக அறிவு மங்கி அடக்கம்.
இளையோர்: 25 - 30 :
தொழில் துறையில் ஆர்வத்தோடு ஈடுபட்டு, பணம் பெருக்கி, மண வாழ்க்கையில் ஆர்வம்.
முதியோர்: 70 - 75 :
மண வாழ்க்கையில் ஆர்வம் குன்றி, பண வருவாய் குன்றி,தொழில் புரிய உடம்பு இயலாமை.
இளையோர் 30 - 45 :
பிள்ளைகளை பெற்று வளர்த்தல். பொறுப்பு மிக்க பெற்றோர்கள் ஆதல்.
படிப்பின் நிமித்தம், போர்டிங் ஹாஸ்டல்களில் பிள்ளைகளை விடுதல்.
முதியோர்: 55 - 70 :
பொறுப்புகள் இல்லாது போய், பிள்ளைகளால் பராமரிக்கப படுதல்
பராமரிக்க நர்சிங் ஹோம்களில் பிள்ளைகளால் விடப்படுதல்
இளையோர் ; முதியோர் : 50
ஒரு நிலை மாற்ற காலம். ஏறு நிலையின் முடிவு; இறங்கு நிலையின் ஆரம்பம்.
இப்படியாக, எவற்றையெல்லாம் குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றுக்கொண்டு வளர்ந்து, வளர்ந்து வந்தோமோ, அவற்றை எல்லாம் முதுமை அடையும்போது, அதே, ஆனால் மாறு வரிசையில் நம்மை விட்டு இழந்து, இழந்துகொண்டு போய்விடுவோம்.
படிப்படியாகக கொடுக்கப்பட்ட்து படிப்படியாகத் திரும்பவும் எடுக்கப்பட்டு விடும்.
இதுதான் வாழ்வின் நிதர்சனம்!
No comments:
Post a Comment