கனடாவிலிருந்து ஒரு கடிதம்
அன்புள்ள அப்புவுக்கு, 15.06.2014
உங்கள் கடிதம் கிடைத்தது.சுகம் அறிந்து மகிழ்ச்சி.
அப்பு ,உங்கள் கேள்விகளுக்கெல்லாம் இக் கடிதம் முலம் பதிலளிப்பதில் மகிழ்வடைகிறேன்.உங்கள் பக்கத்தில் நான் இல்லாத குறையினை அது கொஞ்சமாவது நிவர்த்தி செய்யும் என நம்புகிறேன். இங்கு ஒரு சிறு சம்பவம் நடந்தால் அதற்கு காது.மூக்கு வச்சு கதைகட்டி அதை உங்கு அவிழ்த்து விடுவதில் நம்மவர்கள் கெட்டிக்காரர்கள். கணேசனுக்கும் கமலாவுக்கும் இடையில் அப்படி ஒரு பெரிய பிரச்சனையும் இல்லை.முன்னர் கணேசன் மட்டும் தான் வேலைக்கு போனவன். இப்போ வீடு வாங்கியதால் இருவரும் வேலை செய்கின்றனர். முன்னர் கணேசன் மட்டும் வேலைக்கு போகும்வரையில் மனுசி பிள்ளைகள் அவர்களுக்கான செலவுகளுக்கு அவன் வருமானம் தான் தாங்கிக் கொண்டிருந்தது. மனுசி வேலைக்கு போய் சில மாதங்களில் மனுசிதன்னுடைய வருமானத்தினை தனியான வங்கிக் கணக்கில் போடக் கேட்டாளாம். அப்போ அவனும் சரி அப்பிடி கணக்கு ஆரம்பித்தால் வீட்டுக்கடன்,பில் கட்டணத்தின் எல்லாத்தினையும் சரி பாதி கட்டுங்கோவன் என்று கேட்டானாம்.அதோடு அவள் அக்கதையினை மறந்திட்டாள். ஆனால் ஒரு சில சொந்த பெண்களோடு இதை கதையோடு கதையாக போனில் அவள் சொல்லியிருக்காள். இக்கதை இங்கு இருவரும் பிரிவு என்பதுபோல் உங்களை நாடிப் பெரும் கதையாக வந்து சேர்ந்திருக்கிறது. இவர்களை டிவி நாடகத்தொடர் எழுதாவிட்டால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
அப்பு,பார்த்ர்தீகளா! ஒரு குடும்பத்தில் கணவனும்,மனைவியும் ஒருவருக்காக ஒருவரும், பிள்ளைகளுக்காகவும் பல தியாகங்களைச்செய்தாலும் காசு விடயத்தில் சிலவேளைகளில் சில இடங்களில் சறுக்கத்தான் செய்கின்றனர். அதாவது கணவன் உழைப்பதினை அது தன் குடும்பத்திற்கு என நினைக்கிறான்.ஆனால் சில குடும்பங்களில் மனைவியோ அதை தான் அனுபவிக்க வேண்டுமென நினைக்கிறாள். இப்படியான சின்னத் தனமான விடையங்கள் பிரிவுகளிலும் முடிவதுண்டு.
அப்பு,அடுத்து உங்கள் கேள்வி கேசவன் ஏன் ஒரு சிறியவீட்டில் இருக்கிறான் என்பது.இங்கு வந்து செல்வோருக்கு இது புரியாத விடயம்.இந் நாடுகளில் வீடு வாங்குவது என்பது பெரிய விடயமில்லை.எல்லாவற்றிற்கும் வங்கி இருக்கிறது.அதி வட்டியில் கடனைக்கொடுத்து அது உழைக்கக் காத்திருக்கிறது.பெரிய வீடுக்கு ஆசைப்பட்டு ,பெரும் கடனைப்பட்டுவிட்டு அதற்காக 2,3 வேலைகள் என்று ஓடுப்பட்டு தன முழு வாழ்க்கையை வங்கிக்கு அடைவு வைக்க அவன் தயாரில்லை.உழைப்பு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும் என உணர்ந்தவன் அவன். ஆதலால் அவன் சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
அப்பு, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் நாம்.போற்றுவார் போற்றட்டும் ,தூற்றுவார் தூற்றட்டும் நாம் செல்லும் வழி நேர் வழியாக அமையட்டும்.
உங்கள் சுகத்தினையும், தேவைகளையும் எழுதுங்கள்.
மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.
இப்படிக்கு
அன்பு மகன்
செ.ம.வேந்தன்
No comments:
Post a Comment