ஒரு கடிதம்.....
அன்புள்ள அப்புவுக்கு,வணக்கம் 14.05.2013
அன்புள்ள அப்புவுக்கு,வணக்கம் 14.05.2013
அப்பு, எனது பாடசாலைக்காலத்தில் எனக்கு எப்போதெல்லாம், அன்பு தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் அள்ளி வழங்கினீர்கள். எப்போதெல்லாம் கண்டிக்க வேண்டுமோ, அப்போதெல்லாம் கண்டித்தீர்கள். ஆனால் உங்கள் கண்டிப்பு என்றும் என்னை அடுத்த படிக்கு உயர்த்தியது என்பதை உணர்கையில் உங்கள் அன்பின் மகத்துவம் உணர்கிறேன்.
எனது முதல் தோல்வியின் பிடியிலிருந்து என்னை மீட்டெடுக்க எவ்வளவு முயன்றீர்கள் என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் யாருக்கும் வாய்க்காத ஒரு தந்தை. இப்போதும் தோல்விகள் என்னை அழுத்துகிறபோதெல்லாம் உங்கள் நினைவுகளும், வார்த்தைகளும் என்னை காப்பாற்றுகின்றன.
அப்பு, எனக்கு என் நண்பர்களோடு பழக சுதந்திரம் கொடுத்தீர்கள். அதோடு நிற்கவில்லை.எங்களோடு சேர்ந்து நீங்களும் ஒரு நண்பர்களாகப் பழகினீர்கள். அதுவே எங்களை எல்லாம் நல் வழிக்கு இட்டுச்சென்றது. அதனால் ஊரில் நானும் எனது நண்பர்களும் நல்லவர்களாகவே கணிக்கப்பட்டோம்.
நல்லதை எடுத்துச் சொல்பவன் தான் நண்பன் என்றும், தீய வழியினை காட்டுபவன் திரைப்படத்தில் தோன்றும் வில்லன் என்றும் அடிக்கடி நீங்கள் கூறுவதை இன்றும் நினைவில் கொள்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு திரைப்பட நடிகர் நம்பியார் தான் நினைவில் வருவார். அதனாலேயே தீயொரைக் கண்டால் தூர விலகிவாழ் எனும் முது மொழிக்கமைய என்னாலும், எனது நண்பர்களாலும் வாழ முடிகிறது.
அப்பு, ஒருவன் தனியே புத்தகப் படிப்பின் மூலம் அவன் குடும்ப வாழ்க்கையிலும், தொழிலிலும் முழுமையாக முன்னேறி விட முடியாது என்பதனை மேற்குலகம் உணர்ந்து அதற்குரிய கல்வித்திட்டங்களையே கொண்டுள்ளனர். ஆனால்,நீங்களோ அன்றே என்னை பொது வைபவங்களிலும்,பொதுப் பணிகளிலும் ஈடுபடச் செய்து எனக்கு நல்ல அனுபவ அறிவினை பெற வழிசமைத்தீர்கள்.அது இங்கு எனக்கு சொந்த தொழில் கொண்டு தலைதூக்க வழி சமைத்தது என்பதனை நன்றியுடன் நோக்குகிறேன்.
இதையெல்லாம் திரும்ப ஏன் எழுதிக்கொண்டு இருக்கிறாய் என நீங்கள் கேட்கலாம். உங்களைபோல் பல தந்தையர் உலகில் உருவாக வேண்டும்.அப்போது தான் உலகில் என்னைப்போன்று , என் நண்பர்கள் போன்றுவாழ்வில் அர்த்தமுள்ள சமுதாயம் உருவாகும். உலகம் சிறக்கும்.அதுவே எனது கனவு.
அப்பு உங்கள் தேவைகளையும் சுகத்தினையும் அறியத் தாருங்கள்.
வேறு விசேடமில்லை
இப்படிக்கு
உங்கள்
அன்பின் மைந்தன்
செ .ம. வேந்தன்.
செ .ம. வேந்தன்.
No comments:
Post a Comment