தமிழுறவும், தமிழர்பின்னடைவும்


               கனடாவிலிருந்து ஒரு கடிதம்.   
                                                                                                                                   16.11.2014

அன்புள்ள அப்புவுக்கு,                                                                                                     
நான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.அப்பு உங்கள் கடிதமும் நீங்கள் அன்புடன் எனக்கு அனுப்பிய தீபாவளிப் பரிசும் கிடைத்தது.மகிழ்ச்சி.
அப்பு,புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் இயந்திர வாழ்க்கையுடன் காலம் கழியும் நிலையில் நீங்கள் அனுப்பிய  பரிசு தீபாவளியினை நினைவூட்டியது.




அப்பு, தீபாவளி அன்று மாமா குடும்பத்தினர் உங்களை பழைய பகை மறந்து அழைகிறார்கள் என நம்பி அங்கு சென்று அவர்கள் மலர்ந்த முகம் காட்டாது தந்த விருந்தினை உண்ண முடியாமல் தவித்ததாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள்.இதைப் படித்தபோது நான் சிறுவயதில் பாடசாலையில் படித்த பாடல் ஒன்று நினைவில் வந்தது.
காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ
அன்பிலாள் இட்ட அமுது. 
[உள்ளத்தில் அன்பு இல்லாமல் ஒப்புக்காக ஒருத்தி ஔவைக்கு உணவளித்தாள். அதனை வெறுத்த ஔவை பாடிய பாட்டு இது. (மாணொக்க வாய் = மாட்சிமை மிக்க வாய்.)]
இதைவிட அவர்கள் உங்களை அழைக்காமலே இருந்திருக்கலாம்.
அப்பு, தமிழர் எமக்குப் பக்கத்தில் இருக்கிறார்களோ எனக்கேட்டு இருந்தீர்கள்.இருக்கிறார்கள்.ஆனால் சிலரின் பழக்க வழக்கங்கள் வெறுப்பினையே கொடுக்கும். ஏனெனில் வீதியில் நிமிர்ந்து நடந்துவரும் சிலர் எம்முன்னே தலையை குனிந்து  எம்மை கடந்த பின் மீண்டும் நிமிர்ந்து செல்வர்.இதுபற்றி ஒரு பெரியவரிடம் கதைத்தபோது சாதியில் குறைந்தவர்கள் தம்மை சமுதாயத்தில் அடையாளப் படுத்த விரும்பமாட்டார்கள் எனக் கூறியது எனக்கு சற்று சங்கடமாக இருந்தது. 
அப்பு,எம்மவர்கள் கூடும் இடங்களில் அவர்கள் நண்பர் என்ற போர்வையுள் எப்படி உரையாடுகிறார்கள் என்பதனையும்,ஏனைய நாட்டினரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.ஏனைய நாட்டினர் அரசியல்,அவைசார்ந்த சமூகம் அல்லது தொழிநுட்பம் என்று அறிவு சார் தகவல்களினை பகிர்ந்து கொள்வர்.ஆனால் எம்மவர்களோ என்னொரு தமிழனைப்பற்றி அவதூறு அல்லது இன்னொரு தமிழனை கேலி பண்ணி பேசுவதையோ பொழுது போக்காக கொண்டிருப்பார்.இதனாலேயே தமிழருக்கிடையில் நல்லதொரு உறவு இருப்பதாகத் தெரியவில்லை.
ஏன்?கூட தொழில் புரியும் இடங்களில் கூட தொலைபேசி இலக்கங்களே எம்மவர்க்கிடையில் பரிமாறப்படுவதில்லை. வெறும் ரயில் சிநேகிதர்களாகவே இங்கு பழகிக்கொள்கிறார்கள்.அப்படி ஒரு சிலர் பழகினாலும் சில நாட்களில் ஒருவரை ஒருவர் பணவடிவில் அல்லது வாழ்க்கையில் விளையாடி ஏமாற்றி கொள்வார்.ஆனால் உதாரணமாக சீனத்துக்காரனை எடுத்துப் பார்த்தால் வேலைக்கு தற்காலிகமாக ஒரு கிழமை வந்து சென்ற தன் நாட்டுக்காரனுடன்கூட  நட்பினை வளர்த்துக் கொண்டிருப்பான். அவர்களும் இணைந்து வளர்ந்து கொள்வர். ஆனால் எம்மவர்  தொழில் சார்ந்த விடையங்களை புதிதாக வந்தவன் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பான்.
எம்முடைய வாழ்க்கை முறைதான் தமிழர்களின் ஒவ்வொரு நிலையிலும் பின்னடைவுக்குக் காரணம் என்பதனை அப்பு நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அப்பு,உங்கள் சுகத்தினையும் ,தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.
   வேறு புதினங்கள் இல்லை.
இப்படிக்கு 
அன்பின் மகன் 
செ.ம.வேந்தன்.







0 comments:

Post a Comment