ஒரு கடிதம்.....
15.2.2013
அன்புள்ள அப்புவுக்கு,
நான் நலமுடையேன்.அதேபோல் உங்கள் சுகமும் ஆகுக! உங்கள் கடிதம் கிடைத்தது. அனைத்து புதினங்களும் அறிந்தேன்.
அப்பு,
நீங்கள் எழுதியதுபோல அடுத்த வீடு வாழ்ந்தால் ஐந்துநாள் பட்டினி இருப்பவர்கள் நம்மவரில் பலர். இதனால் தான் எமது சமுதாயம் இன்னும் முன்னேறாமல் இருக்கிறார்கள்.இதற்கு இக்காலத்தில் ஒரு கதை கூறுவார்கள்.
ஒரு கப்பலில் சீனாவிலிருந்தும்,ஈழத்திலிருந்தும் வெவ்வேறு மரப்பெட்டிகளில் உயிர் நண்டுகள் அடைக்கப்பட்டு ஏற்றப்பட்டிருந்தன.சீனாவிலிருந்து வந்துகொண்டிருந்த சீனத்து நண்டுகள் ஒன்றின்மேல் ஒன்று ஏறி வெளியில் வந்து கடலினுள் தப்பிக்கொண்டன.
ஆனால் ஈழத்து நண்டுகள் ஒன்று ஏற அடுத்தது அதன் முயற்சியினை கெடுத்துக்கொண்டன.பலன் மனிதனின் வாய்க்கு இரையாயின.
அப்பு,வளர்ந்து நிற்கும்,அமெரிக்க ஐரோப்பிய மக்களைப் பாருங்கள்.
எந்த ஒரு மனிதனையோ, அல்லது மனிதனின் திறமையையோ, முயற்சியையோ பாராட்டுவதென்பது மேற்குலக நாடுகளிலே நாம் பரவலாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
மேற்குலக நாடுகளில்
THE ART OF APPRECIATION என்று சொல்லி அதனை மக்கள் வாழ்வியல் கூறாக கடைப்பிடிக்கும்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே கற்றுக்கொடுத்து அதை வழக்கிலும், பழக்கத்திலும் கொண்டுவருவது வழக்கில் உள்ளது. இந்த வழக்கமும்,பழக்கமுமே இந்த நாடுகள் வளர்ந்து,நிமிர்ந்து நிற்பதன் காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என வும் எண்ணத் தோன்றுகிறது.
ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சி தான் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி ஆவதும்,ஒவ்வொரு சமுதாயத்தின் வளர்ச்சிதான் ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பதுவும் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.
இதனை ஏன் எமது இனம் இன்னும் உணரவில்லை என்பது புரியவில்லை.
எமது சுற்றத்தில் வளர்வோரை ஊக்கப் படுத்தி வளர்த்தால் தானே நாமும் வளர்வதற்குகுரிய அறிவுரைகள் கிடைக்கும்.அதைவிட ஒரு ஊரில் எல்லோரும் ஒருவருக்கொருவர் பொறாமை பிடித்தவர்கள் களாக இருந்தால் அந்த ஊர் அந்த நண்டுகள்போன்று அற்றவர்களாகவே போய்விடுவோம்.
அப்பு, எமது சமூகத்தில் இந்த பாராட்டுதல் என்பது மிக அபூர்வமாக, அரிதாக இருந்தாலும் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளின் வாழ்ந்துவரும் எம் தமிழர்களில் பெரும்பாலானோர் தமிழரைக் காணும் இடங்களில் வணக்கம் சொல்லும் முறையினையும்,அடுத்தவர் திறமைகளை பாராட்டி உற்சாகப்படுத்தும் வழக்கத்தினையும் அந்நாட்டவர் களிடமிருந்து கற்றுக் கொண்டதன் மூலம் எமது சமுதாயத்தினையும் அவர்களுக்கு நிகராக வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல பழகிவிட்டவர்களாக காணப்படுகிறார்கள்.
எதிர்காலத்தில் புலம் பெயர் தமிழர்கள் நிச்சயம் அவர்கள் வாழும் நாடுகளில் அன்னடாட்டவருக்கு இணையாக வளர்ந்து நிற்பார்கள் என்பது நிச்சயம்.
அப்பு, எமது சமுதாயமும் என்று மாறும்.அன்றுதான் ஊரிலும் நம்மவர்கள் வளர்ச்சிப்பாதையில் அடிவைக்க முடியும். அதற்கான உழைப்பினை ஊர் பெரியோர்கள் முன்னெடுப்பார்களா?
அப்பு,உங்கள் அடுத்த கடிதத்தினை எதிபார்க்கிறேன்.உங்கள் சுகத்தையும்,தேவைகளையும் எழுதுங்கள்.
இப்படிக்கு
அன்பின் மகன்
செ.ம.வேந்தன்.
No comments:
Post a Comment