எனக்கு வந்த 10 க்கும் மேற்பட்ட குறுந்தகவல். தகவல் ஒன்றுதான். "திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு இன்று பிறந்தநாள். இந்த தகவலை அலட்சியப்படுத்தாமல், நீங்கள் உங்களின் நலம் விரும்பிகளுக்கு அனுப்பினால் உங்களுக்கு நல்லதே நடக்கும்" என்று…! என்ன கொடுமை சார் இது. இந்த குறுந்தகவல் எனக்கு மட்டுமில்லை , சிங்கப்பூரில் இருக்கும் எனக்குத் தெரிந்த பலருக்கும் வந்திருக்கிறது. அதை அனுப்பிய அவர்களோட நம்பிக்கையை, இந்த முட்டாள்தனமான நம்பிக்கையை என்னவென்று சொல்வது? இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் துண்டுச்சீட்டில் எழுதி அல்லது அச்சடிச்சு இது போன்ற முட்டாள்தனமான தகவல் தாங்கிய செய்தி வரும். "இந்த செய்தியை நீங்களும் துண்டுச்சீட்டில் எழுதி அல்லது அச்சடிச்சு உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு, குறைந்தது பத்து பேருக்காவது அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாவிட்டால் ஏதாவது விபரீதம் நடக்கும்" என்று அந்த செய்தியின் கடைசியில் இருக்கும் எச்சரிக்கைக்குப் பயந்து அவர்களும் பத்து நபருக்கு அனுப்பி விடுவார்கள். சிலர் இதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். இப்போதெல்லாம்... இப்படி செய்திகள் காணாமல் போய்விட்டது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த நமக்கு...
இப்போ புதிய ஷாக்... இப்ப டெக்னாலஜி வளர்ந்து விட்டதால இதுபோன்ற செய்திகளை குறுந்தகவலாக தங்களுக்குத் தெரிந்த கைத்தொலைபேசிக்கு அனுப்பத் துவங்கி விட்டனர்.
நல்லவேளை, மின்னஞ்சலை விட்டு வைத்திருக்கிறார்கள். இதுல என்ன கொடுமைன்னா இந்த குறுந்தகவலை அனுப்புவதில் இரண்டு ரகம் இருக்காங்க.
1. நன்கு படித்தவர்கள், நல்ல வேலையில் அதிலும் அற்புதமா சிந்திக்ககூடியவர்கள் (என்று நான் நினைத்திருந்தவர்கள்)
2. கஷ்டப்பட்டு உடல் உழைப்பால் தினமும் 12 மணிநேரம் முதல் 18 மணிநேரம் உழைக்க கூடியவர்கள்.
இதில் 3-வது ஒரு ரகம் இருக்காங்க. அதான்க ரொம்ப கொடுமையானது. ஒரு குறுந்தகவல் வந்தா போதும். படிக்காமலேயே அதைக் கண்ணை மூடிக்கிட்டு 10- பேருக்கு அனுப்பிடுறது .
இப்படித்தான் எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், டேய் எனக்கு பெண்குழந்தை பொறந்திருக்குனு – அதை அனுப்பிய என் நண்பனுக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை.
இப்படி முட்டாள்தனமான குறுந்தகவல் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படி குறுந்தகவல் அனுப்புபவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நல்ல தகவல்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தும் இந்த வசதியைக் கிறுக்குத்தனமான செயல்களுக்குப் பயன்படுத்துவதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
இப்படி தேவையற்ற குறுந்தகவல்களைத் தவிர்த்து விட்டு, பயனுள்ள விஷயங்களுக்கு அவர்கள் குறுந்தகவல் உதவட்டும்.
வேண்டாமே...
இந்த "குறுந்தகவல் மூலமான குறும்புத்தனம்... இல்லையில்லை... கிறுக்குத்தனம்..."
-பாண்டித்துரை, சிங்கப்பூர்.
0 comments:
Post a Comment