அவன் ஒரு மெல்லும் கோந்து[சுவிங்கம்-chewing gum]


அவன்.என்னுடைய நண்பன்.வழமையாக என்னிடம் வருபவன்.அன்றுமட்டும்  அவன் தன்  வருகையினை கைத்தொலை பேசியில் கூறிய விதம் எனக்கு சற்று சந்தேகத்தினையே கொடுத்தது .
வந்தவன் கைமேல் தன் முகத்தினை புதைத்து விக்கி,விக்கி ஒரு குழந்தை போல் அழ ஆரம்பித்தான்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
''கருணா, டே மச்சான் என்னடா? சொல்லடா! ஏண்டா இப்பிடி அழுகிறாய்? சொன்னா தானே எனக்கு தெரியும்.உனக்கும் பாரம் குறையும்.''
அழுகையினை நிறுத்தமுடியாத நிலையிலும் அடித்தொண்டையால் பேச ஆரம்பித்தான் கருணா '' அவள் என்னை வெளியில விட்டுவிடடாள் மச்சான்.''
ஆச்சரியத்துடன் அவனை பார்த்த நானும் 'ஏண்டா இவ்வளவு நாளும் நல்லாத் தானே இருந்தனீங்கள்.''
''போடா!என்னுடைய மனுசியோட பிரச்சனைகள் வரக்கூடாது எண்டு அவளின்ர விருப்பத்துக்கு மாறா நான் ஒருநாளும் சிந்திச்சதே இல்லையடா ஆனால் அவள் !''என்றுவிட்டு மீதியினை கூற முடியாது மீண்டும் அழ ஆரம்பித்துவிடடான் கருணா.
அவன் தோளினை தடவியவாறே பொறுடா மச்சான். அழாதையடா. என்னடா நீ சின்னப்ப பிள்ளையள் போல! என்றே அவனை சமாதானப்படுத்துவதில் போதும் என்றாகிவிட்டது.
கருணா சிறுவயதிலிருந்தே என்னுடைய பாடசாலை நண்பன். கல்வியிலும்,பண்பினிலும் சிறந்து விளங்கியவன்.  தன்னால் அடுத்தவர்களுக்கு தொந்தரவு இருக்கக்கூடாது என எண்ணி விட்டுக்கொடுத்து வாழ்பவன்.அதனால் அவனுக்கும் நண்பர்களுக்கு மிடையில் இடையில் என்றுமே பிரச்சனைகள் எழுந்ததில்லை. அப்பிடித்தானே அவன் குடும்பத்திலும் வாழ்ந்தான்.  அவனுக்கும் வாழ்வில் பிரச்சனை என அறியும் போது எனக்கு கவலையாகவே இருந்தது.
கனடாவில்கோவில் திருவிழாக்கள், கலைவிழாக்கள்  திரைப்படங்கள்உலகப் பயணங்கள் என அவளின் ஆசைப்படி குடும்பமாக சென்று அனுபவித்த கருணா குடும்பத்தினை பற்றி என் நண்பர்களுடன் கூறி வியந்திருக்கிறேன்.
அப்படி வாழ்ந்தவர்களுக்கிடையில் பிரிவு வரும் வகையில்  எப்படி? என்னால் நம்ப முடியவில்லை.

''35 வரியமா வாழ்ந்திட்டியல் தானே! பிள்ளைகளும் படித்து நல்ல நிலைக்கு வந்திட்டினம். இப்ப என்னடா  உங்களுக்கை பிரச்சனை.?''
கருணா அனுங்கியபடியே ''அதை எப்பியிடா வெளியில சொல்லுறது!''
''அவள் தானே வெளியில உன்னை விட்டுவிட்டாள்.இனி ஏனடா ஒழிக்க வேணும்.''எரிச்சலுடன்  நான் கேட்டுக் கொண்டேன்.
'' என்னால அவளுக்கு எனி பிரயோசனமில்லையாம்''என்றே முனகிக்கொண்டான் கருணா.
எனக்குப் புரியவில்லை.
''என்னடா சொல்லுறாய்? வேலைக்கு போய் நல்லா சம்பாதிக்கிறாய் தானே. வீடும் ஓகே .தேவையான இடங்களுக்கும் அவளைக் கூட்டிப் போறாய் தானே.என்ன பிரயோசனத்தைப் பற்றிச் சொல்லுறாய்?''
''எனக்கு வயசு போயிடுச்சு.இனி அவளின்ரை படுக்கைக்கு நான் இயலாதவனாகி விட்டேனாம்.அதுதான் இப்ப கனநாளாய் எங்களுக்கிடையிலை  சச்சரவு.  கடைசியில இப்பிடிப் பண்ணியிற்றாள்.''
''அப்போ இவ்வளவு காலமும்  உன்னை வச்சு எல்லாத்தையும் அனுபவிச்சுப் போட்டு சுவை போனதும் சுவிங்கத்தை துப்புவதுபோல உன்னைத் துப்பியிற்றாள் . வெறி பிடிச்ச  நாய்.''
எனக்கு வந்த கோவத்தில் சற்று சத்தமாகவே கத்தினேன்.
''நீ ஏன்  மச்சான் ஆத்திரப்படுறாய்? எல்லாம் என்ரை தலைவிதி.''
''மச்சான், விதியெண்டு  சொல்லி உன்னை நீ அழிச்சுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. நீ ஆம்பிளை.நீ ஏன்  கவலைப்படவேணும். நடந்ததை விடு. நடக்கப்போறதை சந்தோசத்தோட ஏற்றுக்கொள்.  உன்ரை அருமை கெதியிலை  அவளுக்கு விளங்கும்.அப்ப  பார்ப்பம்.இப்ப வா சாப்பிடுவம்.''
உணவை முடித்துக்கொண்டு அவனின் தனிமையில்  அவன் உறங்கப் போகும்  அறையினை அவனுக்கு காட்டி அவனது தனிமைப்பயணத்தை ஆரம்பித்து வைத்தேன்.
நாட்டில்வாழ்ந்த காலத்தில் ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களை கண்டு நான் கவலைப்பட்டிருக்கிறேன். ஆனால் நாடு விட்டு நாடு வந்தபின் இப்படியும் சில குடும்பங்களில் நடைபெறுவதை அறியும் போது உலகம் எவ்வளவு தூரம் மனசாட்சியினை தொலைத்துக்கொண்டு தம் வாழ்க்கையினையும் தொலைத்துக்கொண்டு அலைகிறது என எண்ணியவாறே படுக்கையில் சாய்ந்தேன்.

-செல்லத்துரை,மனுவேந்தன்




''


0 comments:

Post a Comment