நோயை த்தேடி..[கனடாவிலிருந்து ஒரு கடிதம்.....]


அன்புள்ள அப்புவுக்கு,வணக்கம்.                                   13-04-2013
 நான் நலமுடையேன்.உங்கள் சுகங்களையும் கடிதம் மூலம் அறிந்து மகிழ்ச்சி.
அப்பு, அவுஸ்திரேலிய பயணம் பற்றி உங்கள் கடிதத்தில் கேட்டிருந்தீர்கள்.அவ்வனுபவங்களை உங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அண்ணர் குடும்பத்தின் அழைப்பினை ஏற்று அங்கு சென்று இறங்கியதிலிருந்து நான் கண்ட காட்சிகள் எனக்கு ஆச்சரியத்தினையே அளித்தது.சொந்த நாட்டில் கூட தற்காலத்தில் சந்திக்கமுடியாத தமிழ் நண்பர்கள் அன்போடு உறவாடும் விதமும்,அவர்களின் வரவேற்பும் என் நெஞ்சைத் தொட்டன.சிட்னிவாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய சிட்னி முருகன்  ஆலயம் அவகளினது நட்பின் ஆழத்தினை பறைசாற்றி எழுந்து நிற்கிறது.
இயற்கைக் காட்சிகளாக அழகிய கடற்கரைகளும், புராணக் கதைகளை மையமாகக்கொண்டு பேசப்படும் பாறைகளாக்கப்பட்ட மூன்று சகோதரிகளும்,அம்மலைக்குன்றுகளிடையேயான கேபிள்கார் பயணமும்,சிட்னி கோபுரத்தின் உள்வெளிகண்கவர் காட்சிகளும், அந்நாட்டின் பிரமிக்கத்தக்க முறையில் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றமும், அவுஸ்திரேலியாவின் சிறப்பு அம்சங்களில் குறிப்பிடக்கூடிய சிலவாகும்.
அங்கு 17 நாட்கள் கூட்டிய அனுபவங்களினை இரைமீட்டியவண்ணம், சென்றமாத இறுதியில் என்னை அரவணைத்த நாட்டினை பனிமழையின்  வரவேற்புடன்    மீண்டும் முத்தமிட்டேன்.
அப்பு,சேனாதி அம்மானின் மகள் சுவாதி ஏன் இன்னும் மாறாமல் இருக்கிறாள்? அவனின் தமையன் அருண் இங்கு என்னுடன் கவலைப்பட்டான்.அருண் இங்கு படும் கஷ்டம் எழுத்தில் வடிக்கமுடியாதது.அவன் தன் குடும்பசுமைகளுக்கு மத்தியிலும் தங்கை சுவாதியை கவனிக்கத் தவறியதில்லை.தன்  பிள்ளைகளுக்கு இன்னும் வாங்கிக் கொடுக்காத கொம்பியுற்றர் வரைக்கும் உவள் கேட்பவைஎல்லாம் இல்லை என்று கூறாது வாங்கிக்கொடுத்திருக்கிறான்.  அருண் உதவியினால் ஊரில் இவளுடைய  மனுஷன் காரில் வேலைக்கு போகிறான்.இங்கு அருண் பாவம் இன்றும் கடும் குளிரிலும் பஸ்ஸில் தான் தனது இரண்டாவது வேலைக்கும் போகிறான். ஆனால் அன்றும் இன்றும் சுவாதி போதாது போதாது என்றே பஞ்சம் கொட்டுகிறாள். இன்னும் மேலாக,ஊருக்கு இங்கிருந்து போவோரிடம் அண்ணை வந்தா பிச்சை போடுவார் என்று வாய் கூசாமல் சொல்லியிருக்கிறாள். இது உதவிசெய்கின்ற யாருக்கும் வேதனையையே கொடுக்கும்.ஒருவர் தருகின்ற அன்பளிப்பு ஒரு சதமாயினும் அதனை நாம் அன்போடு ஏற்றுக்கொள்ளவேணும்.அதுதான் மனிதத்தன்மை.  அது தருபவருக்கும் சந்தோஸத்தினைக் கொடுப்பதுடன்,இன்னும் தர உற்சாகம் கொடுக்கும்.இப்படி திருப்தியில்லாமல் பேச ஆரம்பித்தால்.உதவிசெய்ய யாரும் முன்வரமாட்டார் உறவுகளும் விலக ஆரம்பித்துவிடுவினம்..

அப்பு,வெளிநாடு வந்ததலிருந்து என்னைப்போன்ற வயதிற்கதிகமானோரில் பெரும்பாலானோர் கொலஸ்ரோல்,நீரிழிவு போன்ற நோய்களும்,உடல்பருமன்,நிறை அதிகரிப்பால் வரும் மூட்டு நோக்களும்  கொண்டு அவஸ்தைப்படுகின்றனர்.இதற்குக் காரணம் வேலை,வீடு,சாப்பாடு,நித்திரை என்ற சங்கிலி வாழ்க்கை என்றே கூறவேண்டும்.
    ஊரில் வளர்ந்த காலத்தில் பலமைல்கள் நடந்திருப்போம். மிதிவண்டியில் ஓடித் திரிந்திருப்போம். அதனால் மேற்படி நோய்கள் வயதானோரை சீக்கிரத்தில் அணுகவில்லை.இன்று இங்குள்ள உறை குளிருக்குப் பயந்தும்,நேரப்பற்றாக்குறை காரணமாகவும் காரினையே பயன்படுத்துகின்றோம். இவ் வாழ்க்கையிலும் பார்க்க  ஊரில் வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணி இருந்த எனக்கு உங்கள் செய்தி அதிர்ச்சியினைக் கொடுக்கிறது.
ஊரில் பாடசாலை செல்லும் இளையோர் முதல் வேலை செல்லும் பெரியோர்வரை தற்போது ஸ்கூட்டர் லிருந்து ஓட்டோ போன்ற மோட்டார் வாகானங்க்களையே பாவிப்பதாக எழுதியிருந்தீர்கள்.மேற்படி நோய்கள் உங்கும் இலகுவாக பற்றிக்கொள்ள இடம் கொடுத்துவிட்டார்கள் என நம்புகிறேன்
அப்பு உங்கள் தேவைகளையும் சுகத்தினையும் அறியத் தாருங்கள்.
வேறு விசேடமில்லை
இப்படிக்கு
உங்கள்
அன்பின் மைந்தன் 
செ .. வேந்தன்.

1 comment:

  1. எந்த ஊர் ஆனாலும்.....என்று இனிப் பாடமுடியாது என்று சொல்லுறியள்.

    ReplyDelete