ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக உலகில் தோன்றிய மதங்கள் எல்லாம் பல வழிகாட்டிகளையும், இறை நாமங்களையும் வேறு படுத்திக் காட்டியிருந்தாலும், ஒரு விடயத்தில் மட்டும் ஒத்துப்போய் இருக்கின்றன. அதுதான் சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும்.
மனிதர்கள் இறந்ததும் அவரவர் செய்த நல்ல, கெட்ட விடயங்கள் எல்லாவற்றையும் துல்லியமான கணக்கில் வைத்து, அதை அலசி ஆராய்ந்து, மதிப்பிட்டு, இறைவனால் நல்லவர்கள் சொர்க்க உலகத்திற்கும், கெட்டவர்கள் நரக உலகத்திற்கும் அனுப்பப்படுவார்கள் என்று இவர்கள் அடித்துக் கூறுகின்றார்கள். சொர்க்க உலகத்தில் உயர்த்தரமான சௌகரிய வாழ்க்கை கிட்டும் என்றும், நரக உலகத்தில் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் பறை சாற்றிக்கொள்வார்கள்.
ஆனால், ஒவ்வொரு சமயமும் தன் சமயம் சார்ந்தவர்களை நரகம் செல்ல விடாது சொர்க்கம் மட்டுமே சென்றடைவதற்கான வழிவகைகளையும் கூறிவைத்துள்ளது. இதனால், இறந்தபின்னர் அனைவருமே சொர்க்க உலகம் சென்றுவிட, நரக உலகம் ஆட்களின்றித் தேடுவாரற்று இருக்கப்போகின்றது! அதுதான் என் கவலை!
இந்து சமயத்தினர், தாம் பழைய பிறப்புகளில் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப, திரும்பத் திரும்பப் பிறவி எடுத்து, ஆன்மா சுத்தமானதும் மோட்ஷம் அடைவார்கள். (இடையில் நரகத்தில் தண்டனை கொடுத்தபின்னர் திரும்பப் பிறப்பர் எனவும் சிலர் கூறுவர்; இது இரட்டைத் தண்டனை என்பதால் அப்படி இல்லை என்று வைத்துக்கொள்வோம்).
மோட்ஷம் அடைவதற்காக இந்துக்கள் மேலும் பூசைகள், வழிபாடுகள், அபிஷேகக்ங்களும் செய்து கொள்ளுவர். இறந்தபின்னரும் மோட்ஷ அரிச்சனைகள், பஜனைகள் என்று செய்வார்கள். அடிக்கடி கடவுள் என்று கூறிக்கொள்ளும் பல மனிதர்களின் படங்களை ஆளுக்காள் அனுப்பி ஆன்ம சுத்தி செய்துகொள்ளுவார்கள்.
ஆகவே இந்துக்கள் எல்லோருமே சொர்க்கம் மட்டும்தான் செல்வார்கள்! நரகத்துக்கு அல்ல!
கிறீஸ்தவர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றதை, 'தம்முடைய மாசற்ற, குற்றமற்ற இரத்தத்தை சிந்தி, அதை தேவனிடத்தில் சமர்ப்பித்து, நம்முடைய பாவங்களைப் போக்கி, நம்மை கழுவி, சுத்திகரித்து, பிதாவினுடைய சமுகத்திற்கே வரும்படியாக, அவரோடு ஐக்கியம் கொள்ளும்படியாக வாசலைத் திறந்துவிட்டார்' என்று சொல்லிக்கொள்வார்கள். மேலும், தொடர்ந்து பாவங்கள் செய்தாலும் போதகரிடம் 'பாவ மன்னிப்பு' பெற்று சுத்திகரித்துக் கொள்ளுவார்கள்.
அத்தோடு.வாரம் தவறாது, நேரம் தப்பாது தேவாலயம் ஒழுங்காகச் சென்றும் தேவனிடம் விண்ணப்பத்தை வைத்து நினைப்பூட்டல் செய்து கொண்டே இருப்பார்கள்.
ஆகவே கிறீஸ்தவர்கள் எல்லோருமே சொர்க்கம் மட்டும்தான் செல்வார்கள்! நரகத்துக்கு அல்ல!
முஸ்லிம்களோ சொல்லவே வேண்டாம்! முஸ்லிமாகப் பிறந்தாலே எல்லோருக்கும் சொர்க்கம்தான். அவர்களுடைய இறைவனை வணங்காதவர்களுக்கு மட்டும்தான் நரக உலகம் என்று ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள்.
அத்தோடு, மதம் பரப்புவதற்காகப் போராடி உயிர் துறக்கும் முஸ்லிம்களுக்கோ ஆயிரக்கணக்கான கன்னிப்பெண்கள், பையன்கள், உயர் ரக குடிவகைகள் என்று இன்னும் அதி சொகுசு உயர் மட்ட சிறப்பு சொர்க்கமும் உள்ளது.
இதை அடைவதற்காக, தினசரி பலதடவை விடாத தொழுகை, ஒழுங்கான மசூதி விஜயம், நீண்ட நாள் நோன்பு, எந்நேரமும் இறை நாமம் உச்சரிப்பது, மதம் பரப்புவதற்காகப் போராடி உயிர் கொடுப்பது என்று பலவிதமாகச் செயல்படுகின்றார்கள்.
ஆகவே முஸ்லிம்கள் எல்லோருமே சொர்க்கம் மட்டும்தான் செல்வார்கள்! நரகத்துக்கு அல்ல!
யூத மதத்தினர் சொல்லிக்கொள்வதோ வேறு மாதிரி! தாம்தான் 'கடவுளினால் மனிதர்களினுள் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்படட பிரஜைகள்' என்று கூறி, தாங்கள் மற்ற சாதாரண மக்களிலும் பார்க்க மேலானவர்கள் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இவர்களும் ஒழுங்காகத் தவறாது தேவாலயம் சென்று தமது கடவுளோடு உள்ள பிணைப்பை உறுதி செய்துகொண்டே இருப்பர்.
ஆகவே யூதர்கள் எல்லோருமே சொர்க்கம் மட்டும்தான் செல்வார்கள்! நரகத்துக்கு அல்ல!
பௌத்தர்கள் நிலைப்பாடு சற்று வேறுபட்டிருக்கினது. ஆசைகள், வெறுப்புகள், கோபங்களை அடக்குபவர் ஒரு ஒளி பெற்று 'நிர்வாண' நிலையை அடையலாம். இந்த நிலைதான் சொர்க்கம் என்றும் அன்றேல் நரகம் என்றும் கூறப்படுகின்றது. அப்படி அடையாதோர் திரும்பவும் பிறந்து கொண்டே இருக்கவேண்டி வரும் என்றும் கூறப்படுகின்றது.
பௌத்தர்கள் அந்த நிலையை அடைவதற்கு மூலை முடுக்கெல்லாம் புத்த கோவில்களைக் கட்டி வணங்கியபடி அலைகின்றார்கள் ..
ஆகவே பௌத்தர்கள் எல்லோருமே சொர்க்கம் மட்டும்தான் செல்வார்கள்! நரகத்துக்கு அல்ல!
இப்படியாக, உலகில் மரணிக்கும் எல்லோருமே சொர்க்கம்தான் செல்கிறார்கள்; நரகம் செல்லும் ஆட்கள் இல்லாமல் போய்விட்ட்து.
இதனால், எவ்வளவோ செலவு செய்து நரகத்தில் நிர்மாணிக்கப் பட்டிருக்கும் சித்திரவதைக் கூடங்கள், கொதிக்கும் எண்ணெய்க் கிடாரங்கள், நெருப்புச் சூளைகள், தீச்சுவாலைகள், கத்திகள், கோடாலிகள், குண்டாந்தடிகள், தூக்கு மரங்கள், சுழரும் சக்கரங்கள், கூரிய அம்புகள், அமுக்கும் தட்டுக்கள், இழுக்கும் சங்கிலிகள், நெருக்கும் பாறைகள், குத்தும் ஊசிகள் என்று எல்லாமே உபயோகிக்கப்படாது துருப்பிடித்து பழுதாகிக் கொண்டல்லவா போகும்!
அத்தோடு அங்கு வேலையில் இருக்கும் அடியாள்கள், சூப்பர்வைசர்கள், மானேஜர்கள் எல்லோரும் வேலையே இல்லாமல் இருப்பார்களே!
இக்காரணங்களினால், நரக உலகம் விரைவில் மூடப்படுவது மிகவும் உறுதி ஆகிவிட்ட்து.
அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை இனி யாராவது போனால் ஒரு ஸ்கைப் மூலமாகவோ, வாட்ஸாப் மூலமாகவோ இங்குள்ள யாருக்காவது ஒரு வீடியோ செய்தி அனுப்ப மாட்டார்களா?
நான் (நரகத்துக்குத்தான்) போவேன்; போனதும் நிச்சயம் அனுப்பி வைப்பேன்!
செல்வதுரை,சந்திரகாசன்.