மேலும் பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன.சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால்,அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். பண்டைய தமிழன், பேய் மகள் கொண்டிருந்த தோற்றத்தையும், அவளது கொடிய செயலையும் கண்டு அஞ்சினர் என்பதும், அவை பற்றி சில நம்பிக்கைகள் கொண்டிருந்தனர் என்பதும் சங்கப் பாடல்களினின்றும்[புறநானுறு 356,359,371 ....],சிலப்பதிகார கனாத்திறம் உரைத்த காதையில் இருந்தும் திருமுறைகளினின்றும்[முதல் திருமுறை/045 திருவாலங்காடு/பாடல் 01,பதினொன்றாம் திருமுறை/002 மூத்த திருப்பதிகம்/பாடல் 12,....],மற்றும் விவேக சிந்தாமணி—பாடல் 30 இல் இருந்தும் நன்கு புலனாகிறது.இதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
"களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள்நிணச் சுவையினள்
குடர்த்தலை மாலை சூடி உணத்தின
ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து 25
வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன
உருகெழு பேய்மகள் அயரக்
குருதித்துக ளாடிய களம்கிழ வோயே! " புறநானுறு [371:22-26)
அதாவது பன்றியின் கொம்பு போன்ற வெண்ணிறமான பற்களால் கடித்து இழுத்து, கொழுப்புக் கலந்த வெண்மையான தசையைத் தின்று சுவைப்பவளாய்க், குடல்களைத் தலையில் மாலையாக அணிந்துகொண்டு, உண்ணுதற்குக் குறையாதவாறு பெரிய வளமாகிய பிணங்களைத் தந்த இவ்வேந்தன்[பண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்], வானத்தில் விளங்கும் பல விண்மீன்களைவிடப் பல்லாண்டுகள் வாழ்வானாக என்று, அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் கூத்தாடும் குருதி கலந்த செந்தூள் பறக்கும் போர்க்களத்திற்கு உரிமையுடையவனே! என்கிறது
"படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு 20
இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்"
[9. கனாத்திறம் உரைத்த காதை/சிலப்பதிகாரம்]
அதாவது அப்புகாரிலுள்ள சுடுகாட்டுக் கோட்டம் என்னும் நன்காட்டிலே மாந்தர் வாளாது போகட்டுப் போகின்ற பிணங்களைத்[பிணத்தை எரிக்காமலும் புதைக்காமலும் அங்கே கிடத்திப் போகும் பிணங்களைத்/இவ்வாறு வாளாது இட்டுப் போதலும் அக்காலத்து ஒருவகைச் சமய வொழுக்கமாக இருந்தது ]தின்று ஆங்குறைகின்ற இடாகினி[பெண் பேய்] என்னும் ஒரு பேயானது; தூங்கு இருளில் ஆங்கு ஏசும்படி[இகழ்ந்து அறிவுறுத்துவாள் போன்று] ஓர் இளங்கொடியாய்ச் சென்று.. என்கிறது.
"துஞ்சவருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம்புகுந்தென்னை நினைவிப்பாரு முனைநட்பாய்
வஞ்சப்படுத்தொருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட்
டஞ்சும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே"
[முதல் திருமுறை/045 திருவாலங்காடு/பாடல் 01]
அதாவது முற்பிறவியில் நட்பாய் இருப்பதுபோலக் காட்டித்தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுபிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகளாவார்.என்கிறது இந்த பாட்டில் தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கரப் பேய் நீலியின் கதை நினைவுட்டப்படுகிறது இந்த கதையில் இருந்து தான் "நீலிக் கண்ணீர் வடிக்காதே" என்ற பழமொழி வந்தது.
நவக்ஞானி என்ற பார்ப்பனி காசியில் தந்தையுடன் வசித்துவந்தார். அவரை ஒரு வணிகர் பொய் சொல்லி மணம் புரிந்தார். ஊருக்குத் திரும்பிய அவர் வீட்டுக்கு வரும் முன்னரே ஆலங்காட்டில் நவக்ஞானியக் கொலை செய்து விடுகிறார்.அவளுடைய மறு அவதாரம்தான் நீலி. அவள் அவனைப் பழிவாங்க எண்ணி மறுபிறவியில் புரிசைகிழார் என்னும் வேளாளர்க்குப் புத்திரியாகப் பிறந்திருந்தாள். தோற்றத்தைக் கண்டு அவளைப் பேயென்று ஊரார் புறக்கணித்தனர்,முற்பிறப்பின் கணவனாகிய பார்ப்பான் தரிசனச் செட்டி என்னும் பெயரோடு பிறந்திருந்தான்.அவனைக் கண்டதும் இவள் அவன் மனைவிபோல நடித்துப் பழிவாங்கத் தலைப்பட்டபோது அவன் அஞ்சியோடி அவ்வூர் வேளாளர் எழுபதுபேரிடம் அடைக்கலம் புகுந்தான்.ஆனால் அவள் ,ஊர் மக்கள் அனைவரையும் கூட்டி தரிசன செட்டி தன் கணவர் என்று கதறி அனுதாபத்தைப் பெற்றாள். (இதுதான் நீலிக் கண்ணீர்[பொய்க்கண்ணீர்] !!) அவர்கள் பிணை கொடுத்தனர். இருந்தும் இவள் செட்டியை வஞ்சித்துக் கொன்றாள். பிணைகொடுத்த வண்ணம் எழுபது வேளாளரும் தீப்புகுந்து உயிர்துறந்தனர்.
பகுதி/Part-10 B"சாவும் பேயும்":அடுத்தவாரம் தொடரும்.
No comments:
Post a Comment