தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part 06"A":

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.
 Compiled by: Kandiah Thillaivinayagalingam]

பயணம்[Trip or journey ]:

அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள்.அதாவது அப்பறவை வலப்புறம் பறந்தால் அதனை நற்சகுனமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும்,அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுனம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர்.
இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுனமாகும்.இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக:பூக்களை,சுமங்கலியை அல்லது நீர் நிறைந்த குடத்தை பார்ப்பது ஒரு பயணத்தின் போது நல்ல குறி/நற்சகுனம் என நம்புகிறார்கள்.ஒரு கலாச்சார,சமூக நிகழ்வுகளின் போதும்,சிறப்பு [விசேஷ] பண்டிகை கொண்டாட்டங்களின் போதும்,சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைப்பதை பார்த்திருப்பிர்கள். 


ஆனால் ஒரு பூனை ,ஒரு துறவி,ஒரு தனி பிரமணன்,ஒரு அம்பட்டன்[முடி வெட்டுனர்],ஒரு விதவை [கைம்பெண்] அல்லது ஒரு குழவி ஈனாத பெண் [மலடி] குறுக்கே போனால்,பயணம் வெற்றி தராது.ஆகவே வீடு திரும்பி,நீர் பருகி விட்டு,சிறிது நேரத்தின் பின் மீண்டும் பயணத்தை தொடரலாம்.இப்படி பல நம்பிக்கைகள் உண்டு.      

அது மட்டும் அல்ல ராகு காலத்தில் நீண்ட பயணம் செய்ய மாட்டார்கள்.அது போல நீண்ட பயணம் போய் சில காலத்தின் பின்பே திரும்ப
உள்ளவர்கள்,வெள்ளி கிழமை தமது பயணத்தை ஆரம்பிக்க மாட்டார்கள்.அப்படி போனால் எப்பவும் திரும்பாமல் விட சந்தர்ப்பம் கூடவாம்.அதனால் தான்,புதிதாக கல்யாணம் செய்த மண மக்கள்,தமது கல்யாண விழாவிற்கு பின் முதல் முறை வெள்ளி கிழமை வீட்டை விட்டு வெளிச்செல்ல மாட்டார்கள்.அது மட்டும் அல்ல இறந்த உடலை [பிணத்தை] கூட தகனம் செய்ய,வெள்ளி கிழமை எடுக்க மாட்டார்கள்  

நிமித்தம்[சகுனம்],செல்வவளம்[அதிருஷ்டம்] இவைகளின் காட்சியே உள்ளங்கை/பாதம் அரித்தல் எனவும் நம்புகிறார்கள். உங்கள் பாதம் ஓயாமல் அரித்து கொண்டு இருந்தால்,தோல் வறண்டு[உலர்ந்தது] போய் இருக்கலாம்?அது சிவப்பாய் மாறி இருக்கலாம் அல்லது சினமூட்டுவதாக [எரிச்சற்படுத்துவதாக] வும் இருக்கும்.ஆகவே மருத்துவர் ஒருவரை நாடுவது நல்லது.ஆனாலும் நீங்கள் மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்தால் இது,இந்த பாத அரிப்பு,நீங்கள்,இன்பம் தரக்கூடிய நீண்ட பயணம் ஒன்று போக போவதை குறிக்கும்.இது வலது உள்ளங்காலாக இருந்தால்,உங்களை வரவேற்கக் கூடிய நாடாக அது இருக்கும் அல்லது அங்கு ஒரு முயற்சி செய்து,அதில் பெரு வெற்றி அடைய கூடியதாக இருக்கும்  
பகுதி/Part 06"B":"நல்லநாள்" அடுத்தவாரம் தொடரும்

0 comments:

Post a Comment