விதி என்பது ஒருவரது நிலைமைகள் மற்றும் காரணிகள் மூலமாக ஏற்படும் சிக்கல் வாய்ந்த சேர்க்கையால் உண்டாகும் ஒரு விளைவு என்று கூறலாம். ஒருவரது விதி அவர் பிறக்கும்பொழுதே அவரவர் முற்பிறப்பில் (?) செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிடுகின்றது
என்று சமய சாஸ்திரங்கள் பகர்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
நாம் இப்பொழுது அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் எல்லாமே நாம் முற்பிறப்பில் செய்த நல்ல, கெட்ட காரியங்களின் விளைவுகளின் அடிப்படையில் மாத்திரமே நடை பெறும் என்றும், அதாவது எதுவும் நமது கர்ம விதிப்பயன்படி மாத்திரமே, நமது ஆன்மாக்கள் தமது போக்குகளை வைத்துக்கொள்ளும் என்பது காலம் காலமாக எடுத்துரைக்கப்பட்ட அறிவூட்டலாகும்.
ஆனால், அறிவோடு சித்திக்கும் எவரும் இப்படியான நிறுவப்படாத, அர்த்தமற்ற கூற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பர். அப்படி நிறுவமுடியாத ஒன்றுக்கு, வெறுமனே அது விதிதான் அன்று கூறுவது, ஆராய விரும்பாதவர்களின் ஒரு சோம்பேறித்தனமான ஒரு வீழ்ச்சி என்றுதான் கூறவேண்டும். தெரியாது என்பதைத் 'தெரியாது' என்று சொல்லாது அதற்கு எதோ ஒரு சொல்லை வைத்து அழைப்பது சுத்த அறிவீனமாக இல்லை?
ஒருவருக்கு வரும் இன்பமோ, துன்பமோ பின்வரும் சில காரணிகளால் மட்டுமே ஏற்படும்:
அவரின்,
* ஆசைகள்/அபிலாசைகள்.
* குடும்ப சூழ்நிலை
* சமுதாய எதிர்பார்ப்பு
* சுய முயற்சி
*உற்பத்தித் திறன்/தரம்
* மேலாண்மை
* உளப்பாங்கு ஒழுங்கு
* உகந்த தீர்மானம்
* திருப்பு முனை சாமர்த்தியம்
* செல்வாக்கு
* ஏற்புடைமை / சகிப்புடமை.
அதாவது, தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டு, பிழையான நேரத்தில், பொருத்தம் அற்ற இடத்தில், வேலைத்திறன் அற்ற செயல்பாட்டுடன், நுகர்வோரின் எதிர்பார்ப்பினை அறிந்து பூர்த்தி செய்ய முடியாதவர்கள் கடடாயம் தோல்வியைத் தழுவி துன்ப நிலைக்குத் தள்ளப்படுவர். இவர் வேறு விதமாகச் செயல்பட்டிருந்தால் பலன் நல்ல விதமாக கிடைத்திருக்கும். சந்தர்ப்ப, சூழ்நிலைகளினால் கொல்லன் தெருவில் ஊசியோ, அந்தணர் தெருவில் மாமிசமோ விற்றால் எப்படி உயர்வடையலாம்?
விதிப்படிதான் எதுவும் நடக்கும் என்று நினைத்திருப்பது ஒரு அர்த்தமற்ற நம்பிக்கை என்றே கூறலாம். விதி உண்மை என்றால் எல்லோரும்
பேசாமல் வீட்டிக்குள்ளேயே இருந்து இரவும் பகலும் படுத்துக்கொண்டே இருந்துவிடலாமே! நமக்கு வேண்டிய வீடு, வசதி, வருமானம் எல்லாம் விதியே பார்த்துக்கொள்ளுமே!
ஒருவர் விதம் விதமாகச் சிந்திக்க வைப்பதும், விதியை நோக்கிய விதியின் பாதையில்தான் என்று விதியை நம்புவோர் சாதிப்பர். ஒருவரின் விதியை முன்கூட்டியே யாராவது சொல்லிவைத்திருந்தார்களேயென்றால், நடந்தபின்னர் அதைச் சரிபார்த்து 'ஆமாம், அது விதிப்படிதான் நடந்தது' என்று நிரூபணம் ஆக்கி விடலாம். ஆனால், நடந்த பின்னர் அதை விதிதான் என்று கூறுவது பொருத்தம் அற்றது. வேண்டும் என்றால், விதி என்பது 'நடந்து முடிந்த ஒரு விடயத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும்
ஒரு பதம்' என்று எடுத்துக்கொள்ளலாமே ஒழிய பழைய கர்ம வினைகளின் தொடர் விழைவுத் தாக்கம் என்று எடுத்துக்கொள்ளுதல் அறியாமை என்றே கூறவேண்டும்.
உதாரணமாக, விமானம் ஒன்று 400 பயணிகளுடன் சமுத்திரத்தினுள் விழுந்து அனைவருமே மரணிக்கும்போது இந்த விதி எங்கே போனது? ஒரு யுத்த காலத்தில் 5000 மக்கள் ஒரே அடியாகக் கொல்லப்படுவது எந்த வகையில்? அந்த 400 / 5000 அப்பாவிகளுக்கு இந்த நாள், இன்ன நேரம், இந்த இடத்தில் இப்படியான முடிவு நடக்க வேண்டும் என்று ஏற்கனவே செய்யப்படட பாவங்களின் நிமித்தம் எழுதப்பட்டு, அதன் பிரகாரம் எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்ததா அந்த விதி? விதிப்படி அந்த விமானம்தான் இன்றோடு வாழ்க்கை முடிய வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஏன் வீணாக அந்தப் பயணிகள் பலியாக வேண்டும்?
விதிக் கொள்கை என்பதே உயர் குலம் என்று தங்களை சொல்லிக் கொண்டவர்களால், ஏனையோரை அடக்கி வைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒன்றுதான். 'நீ முன் பிறப்பில் செய்த பாவங்களின் நிமித்தம் இப்பிறப்பில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கின்றாய்; மறு பிறப்பிலாவது உயர் நிலையை அடைய வேண்டும் என்றால், ஒன்றும் சிந்திக்காது அடிமையாய் இருந்து நமக்கு ஊழியம் செய்து கொண்டே இரு; இது எல்லாம் கடவுள் கணக்கு' என்று மூளைச் சலவை செய்து நம்ப வைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். இவர்களும் அப்படியே நம்பி அடிமைகளாய் வாழ்கின்றார்கள்.
விதியை நம்புவோர்களே, தங்கள் விதியை மாற்றலாம் என்று பூஜைகள், வழிபாடுகள் எல்லாம் செய்வார்கள்; இறந்துபோன
மற்றும் இனி இறக்கப்போகும் மனிதச் சுவாமிகளின் படங்களை அடிக்கடி மற்றையோர்களுக்கு அனுப்பி தொடர் எரிச்சல் ஊட்டிக்கொண்டே இருப்பார்கள். மாற்றமுடியாத விதிக்கு ஏன்தான் இந்த ஆர்ப்பாட்ட்ங்களோ தெரியாது!
நான் எப்பொழுதும் சொல்வதுபோல, முன் பிறப்பிலோ, வரும் பிறப்பிலோ நான் யார், என்ன, எது, எங்கு என்று ஒன்றுமே தெரியாத போது, அந்த என்னவோக்கள் அல்லது இல்லாததுகள் செய்த/செய்யாத நல்லது, கெட்டதுகள் எல்லாம் ஏன்தான் என்னைப் பாதிக்கவேண்டும்? யாரோ, என்னவோ, எங்கோ, எப்பவோ செய்யும் பாவங்களுக்கு என்னை இப்போது, இங்கு தண்டிப்பது சுத்த அநீதியாகத் தெரியவில்லையா என்று ஒரு கணம் யோசித்தீர்களேயானால் உந்த கர்ம விதிகள் எல்லாம் ஓர் அர்த்தமற்ற பிதற்றுதல் என்றுதான் புரியவரும்.
ஆகவே, விதி என்பது உங்கள் மதியை மயக்கும் ஒரு சதியே ஒழிய வேறு ஒன்றுமே இல்லை; உங்கள் 'விதி' உங்கள் கையில்தான் உள்ளது; வேறு ஒரு புறக்காரணிகளில் இல்லை
ஆக்கம்:செல்வத்துரை, சந்திரகாசன்
No comments:
Post a Comment