தமிழரின் மூட நம்பிக்கைகள்,பகுதி-08:-

[superstitious beliefs of tamils]

"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam]

சோதிடம் / Astrology:

சோதிடம் குறித்த நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.குறி சொல்வோர்,கைரேகை பார்ப்போர், ஏடு போட்டுப் பார்ப்போர்,கிளி சோதிடம் கூறுவோர்,சாமக் கோடாங்கிகள்["நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது"என்ற இந்த வார்த்தைக்கு சொந்தக் காரர்கள் தான் சாமக் கோடாங்கிகள் எனப்படுவர்கள்]போன்றோர் கிராமத்துத் தெருக்களில் வலம் வருவதை இயல்பாகக் காணலாம்.அதுமட்டும் அல்ல சோதிடத்தில் எடுத்துரைக்கப்படும் தீய பலன்களைப் போக்க,அதற்கான பரிகாரங்களை மேற்கொள்ளும் வழக்கமும் காணப்படுகிறது. 

"ஆவணியில் வீடு கட்டுக !
கார்த்திகையில் குடி புகுக !
நோயறிந்து மருந்திடுக !
கோலளறிந்து வீனை செய்க !
கோள்களின் கோலாலட்டமே !
குவலயத்தின் சதுராட்டம் !
நாளிறிந்து மனைகோல்வாராக !"

அக்காலத்தில் சோழ மன்னனாகிய சுபதேவனும்,அவன் பட்டத்தரசி கமலவதியும் சிதம்பரம் போய் மக்கட் பேறு கேட்டு வழிபட்டார்கள்.அதன் பின் கமலவதி கருவுற்றாள்.கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது,‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்கள்.அவ்வாறு ஒருநாளிகை கழித்துப் பிறப்பதற்காக அரசியை தலைகீழாக மேலே தூக்கி நிறுத்தினார்கள் என பெரிய புராணம் கூறுகிறது குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது.கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன,ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’என அருமை தோன்ற அழைத்தார் .
இவனே கோச்செங்கோட் சோழர் ஆவார்.
  
மேலும் 703 ஆண்டு பழமையான தமிழ் சோதிட நூல் இலங்கையில் இயற்றப்பட்டது என அறிகிறோம்.சரசோதி மாலை என்பது இந்த சோதிட நூல்.இதனை இயற்றியவர் இலங்கையில் வாழ்ந்த போசராசர்.இவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அந்தணர்.இந்த நூலை இவர் சக ஆண்டு 1232 க்கு இணையான கி.பி. 1310-ல் தம்பை என்னும் ஊரில் வாழ்ந்த பராக்கிரமபாகு என்னும் அரசனின் அவையில் அரங்கேற்றினார் என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது.சங்க கால ஈழத்துப் பூதந்தேவனாருக்குப் பின்னர் ஈழத்து இலக்கியம் என அறியப்பட்ட முதல் நூல் இதுவாகும்.பாண்டியப் பேரரசுக்குப் பயந்து ஆட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் நான்காம் பராக்கிரம பாகு சோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது.இந்நூலில் சோதிட கருமப் படலம் தொடக்கம் நட்சத்திரத் திசைப்படலம் ஈறாக 12 படலங்கள் உள்ளன.அதன் பின் யாழ்ப்பாண மன்னர்காலத்தில் எழுந்த மற்றொரு சோதிட நூல் செகராசசேகர மாலை ஆகும் சரசோதி மாலை திருமணப் பொருத்தம் பற்றி கூறும் பாடல் கிழே தரப்பட்டுள்ளது 

"செப்பு நாள் கணங்கள் மாகேந்திர மொடு மங்கை தீர்க்கந்

தப்பிலா யோனி ராசி ராசியின் தலை தம்மோடு
ஒப்பிலா வசியம் நன்னூல் வரைதறு வேதை ஆக
மைபுயல் அளக மாதே மருவிய பொருத்தம் பத்தே".

இதில் இருந்து நாம் அறிவது ,இந்தியாவில் மட்டும் அல்ல,இலங்கையிலும் சோதிடம் மக்களின் வாழ்வில் ஒரு பிரிக்க முடியா ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதாகும்.அது இன்னும் இருக்கிறது.ஒரு கல்யாணத்தை ஒழுங்கு படுத்துவதில் இருந்து,கல்யாண நாள் குறிப்பது,மணமகள் புது வீடு புகுதல்,...இப்படி எல்லாவற்றிலும் இந்த சோதிடம் ஆட்சி செலுத்துகிறது,

"ஆண்  மூலம் அரசாலும் பெண் மூலம் நிர்மூலம்" என்ற சோதிட பழ மொழியும் உண்டு.இதனைப்போன்ற சில பழ மொழிகளை கிழே தருகிறேன் .
"கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்"
"சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது"
"சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்"
"பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்"
"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,"
"பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வான்."

மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச்  சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர்.

"வசையில்புகழ் வயங்குவெண்மீன்
றிசைதிரிந்து தெற்கேகினுந்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி"
[பட்டினப்பாலை]
    
மேலும் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்கிறது சங்க பாடல்.              

நற்றிணை 47, நல்வெள்ளியார், குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது

"கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே".

வேலன் கழங்கு போட்டு வீடு கட்டிக் காட்டி இவளுக்கு வெறி என்று தணிக்க முயன்றால் அம் முயற்சி பயன்படுமா? என்று கேட்கிறது 

சோதிடத்தில் இன்னும் ஒன்று ஒருவருடைய கைரேகையைக் கொண்டு, அவரைப்பற்றிய  நிகழ்காலம் மற்றும் இறந்தகாலத் தகவல்கள் கூறுதல்.இது நாடி சோதிடம்.இதன் எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாக பழந்தமிழ் எழுத்துக்களாக எழுதப்பட்டுள்ளவையாகும்.இச்சுவடிகள் 2000 வருட பழமை வாய்ந்தவை.இவர்கள் கட்டை விரலின் கைரேகையை பெற்கின்றனர்.பின் அந்த ரேகைக்கு பொறுத்தமான சுவடிக் கட்டுகளை,சில கேள்விகளைத் தொடுத்து "ஆம் இல்லை" பதில் மூலம் அவர்களுக்கான ஒலையை எடுத்து வாசிக்கிறார்கள்.

இதை பள்ளியில் பயிலும் இரு மாணவர்கள் ஒருவருக்கொருவர் மனதில் நினைத்த எண்ணை கண்டுபிடிக்க விளையாடும் பொழுது இந்த கட்டத்தில் அந்த எழுத்து இருக்கின்றதா? இல்லையா? என்று வினவி அதன் மூலம் அவர் மனதில் நினைத்த எண்ணை கண்டுபிடித்து விளையாடுவதோடு ஒப்பிடலாம் .

எண் "சோதிடம்" !

தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும்.என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- நியுமெராலஜி- (Numerology) பித்து வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது? நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

பால்வெளி மண்டலத்தில் சிறு துகளான பூமியைப்போல் ஆயிரக்கணக்கான,லட்சக்கணக்கான கிரகங்களின் இருப்பை கண்டறிந்துள்ள விஞ்ஞானத்தின் முன்னால்,கண்ணுக்கு தெரிந்த வெறும் ஒன்பது கிரகங்களின் நகர்வை மையமாக வைத்து குறி கூறி பிழைப்பு நடத்தும் இவர்களின் வாழ்க்கையையும்,கையில் ஒரு கிளிக்கூண்டை வைத்துக் கொண்டு,சில இலகுவான பணத்திற்காக கடும் வெயிலில் நாயாக அலையும் கிளி ஜோசியக்காரனின் வாழ்க்கை யையும்,அவன் கொடுக்கும் அரை நெல்லுக்காக அவன் பழக்கியபடி சீட்டை எடுத்துப்போடும் சிறகில்லாத கிளியின் வாழ்க்கையையும் பரிதாப ஜீவன்களாகவே எனக்கு தெரிகிறது.இந்த சோதிடத்தை நம்பி சில,பல பேர் ஏமாளிகளானாலும்,மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி சில குடும்பங்கள் சாப்பிடுகின்றன என்றே வைத்துக்கொள்ளலாம்.சோதிட தொழில் செய்து சொற்ப வருமானம் பெறும் சோதிடர்கள் தான் அதிகம்.சோதிட தொழில் நடத்தி பெரும் பதவியை யாரும் பிடித்து விடப்போவதில்லை...அதனால் பாவம் பொழைச்சு போகட்டும் என்று தான் தோன்றுகிறது எனக்கு...!!! 

பகுதி/Part 09:"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள  நிமித்தங்கள்/Omens relate to animals, birds and reptiles. " அடுத்தவாரம் தொடரும் 

1 comment:

  1. அப்போ இந்த யோசியம் எல்லாம் பொய் என்டுரிங்களா

    ReplyDelete