தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04"A":


தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam]

பகுதி/Part-04"A":கிரகணம்
  
கிரகணம்(Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும்.எக்லிப்ஸ்(Eclipse) என்பது ஒரு கிரேக்க சொல்.இதன் பொருள்,வான் பொருள் கருப்பாவது("the darkening of a heavenly body") என்பதே.கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்!கரத்தல் = மறைத்தல்!.தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதை கூறும்!கிரகணம் என்பது சந்திரன்,பூமி,சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது
ஏற்படுவது.ஆனால் பழங்காலத்தில்,கிரகணம் என்பது,ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர்.அதுமட்டும் அல்ல சூரியனை ராகு,கேது, பாம்புகள் விழுங்குவதால் உண்டாவதாகவும் கருதினர்.இந்த கருத்தை சிலப்பதிகாரத்தில் காணலாம்.


புகார்க் காண்டம் 5. இந்திரவிழவு  ஊர் எடுத்த காதை
“வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்”
  
"கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து-ஆங்கு,
இரு கருங் கயலொடு இடைக் குமிழ்஢ எழுதி,
அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி,
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்!" 

அழகிய இடமமைந்த வானவெளியிலே திரியின் தனக்குப் பகையாகிய இராகுவும் கேதுவுமாகிய பாம்புகள்.எளிதாகத் தன்னைக் கண்டுவந்து விழுங்கும் என்று அஞ்சி ஆங்குத் திரியாமல்;ஒரு பெரிய முகிலைத்[கூந்தலை] தன்னுச்சியிலே சுமந்து சிறிய முயலை[குறிய களங்கத்தை]யொழித்து அவ்விடத்தே இருமருங்கினும் இரண்டு கயல் மீனையும் [கண்ணையும்] அவற்றிடையே ஒரு குமிழ மலரையும்[மூக்கையும்] எழுதி இவ்வாறு தன்னைப் பிறர் அறியா வண்ணம் உள்வரிக் கோலம் கொண்டு;இந் நகரமறுகிலே திங்கள் [அந்த சந்திரனே]]தானும் வந்து திரிகின்றதோ என வர்ணிக்கிறது. 

நற்றிணை 377, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சி திணை-தலைவன் சொன்னது

"அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல"

அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற்[பாம்பினால்] சிறிது விழுங்கிக் குறை படுக்கப்பட்ட பசிய [பசுமை]கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என இங்கு கூறப்படுகிறது.அதாவது இந்தப் பாடலிலும் ராகு கேதுவைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


பழங்காலத்தில் சூரிய கிரகணம் தோன்றுவது நாட்டில் போரும்,மோசமான சம்பவங்கள் ஏற்படுவதற்கான அறிவிப்பாக கருதப்பட்டது.சூரிய கிரகணம் ஏற்பட்டால் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.காரணம் சூரிய கிரகணத்தால் உணவுப் பொருட்கள் கெட்டு விடும் என்ற நம்பிக்கையும் நமது நாட்டு மக்களிடம் இருந்தது.சூரிய கிரகண நம்பிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் தான்.அதாவது சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது.மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ள மாட்டார்கள்.சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால்,உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும் கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது என கருதியதால் ஆகும்.சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கை நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சூரிய கதிர்கள் சந்திரனால் மறைக்கப்படும் போது வளிமண்டலம் மாசுபடுத்தப்படுவதாக நம்புகிறார்கள்.இதனால் ஒரு முழு காலை நேரமும்,அதாவது 12 மணித்தியாலம் அளவிற்கு,எந்த வித உணவையும் இந்த மாசுபட்ட சூழலில் சாப்பிடாமல் மக்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள்.தம்மை எந்த வித தீய செயலிலும் ஈடுபடாமல் தடுப்பதற்காக வழிபாட்டிலும் ஈடுபடுகிறார்கள்.சந்திர கிரகணம் போதும் அப்படியே செய்கிறார்கள்,ஆனால் விரதம் இருக்கும் நேரம் 9 மணித்தியாலம் ஆகும். 

 அடுத்தவாரம் பகுதி/Part-04"B":"வீடும் சமையல் அறையும்"தொடரும். 

1 comments:

  1. சூரிய கிரகணத்தின் போது ஒரு தாக்கம் என்பது எத்தனை விதமானா மூடநம்பிக்கைகளை உருவாக்கியுள்ளது.தற்காலத்தில் கூட ஒரு புதினம் வாய் வழி நகரும்போது அதற்கு கால்,கை முளைப்பது வழமை தான்.தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete