தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி05"A":கண்ணேறு [திருஷ்டி]‏

தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.
Compiled by: Kandiah Thillaivinayagalingam]

கண்ணேறு[திருஷ்டி]

தீய கண்பார்வை,பிறர் பொறாமை,வயிற்றெரிச்சல் முதலியன கொண்டு பார்க்கும் கண்பார்வையால் ஒருவருக்கு ஏற்படுவதாக நம்பப்படும் தீங்கை கண்ணேறு என்று கூறுவர்.  

”கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது,” 
‘விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது’
“ஒரு மனிதனின் கண் ஒளிக்கு வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”

என்று முன்னோர்கள் பழமொழிகள் கூறுவதுண்டு.காரணம் கல்லால் ஏற்படும் வேதனை தற்காலிகமானது,ஆனால்,கண் திருஷ்டியின் விளைவுகளோ கணித்துக் கூற முடியாது என்பார்கள்.மேலும் ‘கண்ணேறுபடுதல்’ என்ற செய்தியை இப்படி நாட்டுப்புறப்பாடல் ஒன்றும் பதிவு செய்துள்ளது.

"சீலம் பலகையிலே

செவ்வந்திப் பூ மெத்தையிலே

சீமானும் செல்வியும்

சேர்ந்து விளையாடையிலே

எந்த சண்டாளி பார்த்தாளோ. . .

எப்படித்தான் கண்ணூறு போட்டாளோ. . .

சீலம் பலகைவிட்டு

செவ்வந்திப் பூ மெத்தைவிடர்

சீமானையும் தப்பவிட்டு-இப்போ

செல்வியவள் வாடுறாளே. . .!"

-என்பதுதான் அப்பாடலாகும்.

பெரியவர்களை விட குழந்தைகளைத் கண்ணூறு [திருஷ்டி/ evil eye] குற்றம்[தோஷங்கள்/blemish] நிறையவே பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு.பெரும்பாலான குழந்தைகள் சுறுசுறுப்பாக ஆரவாரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மேல் இயற்கையாகவே பெரியவர்களுக்கும் உடல்நலம் குன்றியவர்களுக்கும் பொறாமை எண்ணங்கள் உருவாகி அவை திருஷ்டி தோஷங்களாக வளர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன. 

நமக்கு அறிமுகமில்லாத பிறர் அடிக்கடி குழந்தையை பார்க்க,தொட்டு தூக்க திருஷ்டி தோஷம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்றும் மனதளவில் மாசும், பொறாமை உணர்வும் கொண்டவர்கள் சிசுக்களைப் பார்க்கும் போது கண் திருஷ்டி தோஷம் ஏறபட வழிகளுண்டு எனவும் நம்மவர்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள்.

உண்மையில் திருஷ்டி என்பது என்ன? த்ருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல்.தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.எல்லாருடைய பார்வையும் நல்லவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது.அவர்கள் எண்ணம் தீயதாக கூட இருக்கலாம் அல்லவா?அந்த தீயதை போக்கும் விதமாக பல்வேறு திருஷ்டி கழிக்கும் பழக்கங்கள் நடைமுறையில் உள்ளது.

நான்கு காய்ந்த மிளகாய்,அத்துடன் கல்லுப்பு சேர்த்து வலது கையில் எடுத்துக் கொண்டு தாய்க்கும் குழந்தைக்கும் தலையில் இருந்து கால் வரை உடல் முழுவதும் முன்னும் பின்னும் தடவிய பின் முதலில் வலது பின் இடது பக்கமாக தலையை மூன்று சுற்று சுற்றி,மிளகாய்+உப்பு இரண்டையும் அடுப்பில் போட வேண்டும் அல்லது வீட்டு தோட்டத்திலே ஏதாவது ஒரு மூலையில் தீ இட்டு அதில் போடவேண்டும்.

மேலும் குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும்,பொறாமைக்காரர்களின் கண் திருஷ்டியும் அண்டாது எனவும் நம்புகிறார்கள்.இப்படி பல முறைகளை கண் மூடித் தனமாக பின்பற்றுகிறார்கள் நம்மவர்கள்.

குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும் வெளி இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச் செல்லும்போதும் கட்டாயம் குழந்தைகள் கன்னத்தில் ஒரு திருஷ்டி பொட்டு வைத்திருக்க வேண்டும்.கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர்களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும்.இதனால்,குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும் என்று நம்புகிறார்கள்.

கண்ணேறு பொம்மை என்பது சில தமிழர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொங்கவிடப்படும் ஒரு வகைப் பொம்மை அல்லது பொம்மைத் தலை ஆகும்.பார்ப்பதற்கு அசுரர்கள் போல் இருக்கும் இவை அந்த இடங்களை கண்ணூறில் இருந்து அல்லது தீய சக்திகளில் இருந்து பாதுகாக்கும் என்று சிலரால் நம்பப்படுகிறது.பிற இனத்தவர்கள் மத்தியிலும் இவ்வாறான பொம்மைகள் தொங்கவிடப்படும் வழக்கம் உள்ளது.

‘பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கின்
கண்ணேறு படுமென்றோ கனவிலேனும்
காட்டென்றாற் காட்டுகிலாய் கருணையீதோ.'

[திருவருட்பா/வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873)]

இசையமைந்த சொன்மாலை மொழியும் அடியார்கள்[புலவர்கள், ஞானிகள்] நாளும் தொழுது வாழ்த்தும் நின் திருவடி யழகைப் பாவியாகிய யான் பார்ப்பேனாயின் கண்ணேறு படுமென நினைத்துக் கனவிலேனும் காட்டுக என்று வேண்டினாலும் காட்டாதொழிகின்றாய்;இது தான் நின் கருணையோ,கூறுக என வள்ளலார் பாடுகிறார் .

பகுதி,05"B":"வேலன் வெறியாட்டம் & தாயத்து" அடுத்தவாரம் தொடரும்.

2 comments:

  1. மூட நம்பிகை , நீங்க சொல்லுறிங்க , அதில் ஒரு விசியம் இருக்கு , மனித பார்வைக்கு சக்தி இருக்கு , ஒத்துக்குவீங்கல , உதாரணம் , நன்றாக காய்க்கும் முருங்கை , மரம் வேளியோரம் இருக்கு , போகின்றவர்கள் , வருகின்றவர்கள் பார்க்க , பார்க்க மரம் பட்டு போனதை , கேள்வி பட்டு இருப்பீர்கள் , அதனால் கோழி முட்டையில் , கரும்புள்ளி வைத்து மரக்கிளையில் மாட்டி வைப்பார்கள் . அதுபோல இந்த திருஷ்டி பெம்மையை வைப்பதால் பார்பவர் கவனம் திரும்பும் திருஷ்டி பொம்மையின் மிது ...சரியா .

    ReplyDelete
  2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, August 05, 2017


    பொதுவாக,எமது பிள்ளைகள் மேல் ,எங்கள் வீட்டின் மேல்,எங்கள் நிலைமையின் மேல் அல்லது செல்வாக்கின் மேல்.........மற்றவர்கள் பொறாமை,எரிச்சல் கொள்கிறார்கள் என கூறப்படுகிறது.இதனால் நாம் அதற்கு ஒரு பரிகாரம் தேடுகிறோம்.அவைதான்,கறுத்த பொட்டு, சுத்தி போடல்,பூசணிக்காய் கட்டுதல்,தேசிக்காய்,மிளகாய் போன்றவை கட்டி தொங்க விடுதல்......இப்படி போன்றவை ஆகும்.

    இப்படி செய்வதற்கு உண்மையில் முக்கிய காரணம்,நாம் எம் பிள்ளை,எமது வீடு ,எமது சாதனைகள்,எமது சொத்துக்கள்....... இப்படி போன்றவற்றின் மேல் பெருமை கொள்வதே ஆகும்! உதாரணமாக காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல,எமது பிள்ளைகள் எங்கள் கண்ணுக்கு மிக அழகாக தோன்றுகிறது.எமது வீடு
    எங்களுக்கு மிகவும் நேர்த்தியாக தோன்றுகிறது.ஆகவே கண் திருஷ்டி ,எங்களிடமிருந்து தான் முதலில் வெளி வருகிறது!

    எனவே இதற்கு ஒரு இலகுவான வழி,நாம் எளிமையாகவும், அடக்கமாகவும் [தாழ்மையாகவும்],மற்றும் எம்மைப் பற்றி உயர்வாக எண்ணாமல் இருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நாம் வெருளி அல்லது பூசணிக்காய் போன்றவற்றை கட்டிடம் மேல் வைப்பது இந்த, எமது- எம் மேல் ,எம் சொத்து மேல், எம் செயல் மேல் நாம் கொள்ளும் தற் பெருமையே- காரணமாகும். அதாவது மறவர்களின் கண் திருஷ்டியை விட, எமது நடத்தையே ,மனப்பங்கே,அணுகு முறையே முக்கிய காரணமாகும்!

    பொதுவாக,அழகைப் பற்றி,கட்டிட நேர்த்தி பற்றி,முன்னேற்றத்தைப் பற்றி பாராட்டுதல் எந்த மனிதனினதும் பொதுவான இயல்பாகும்.அதிலும் கவிஞன் என்றால் அதை உவமைகள் காட்டி பாடியே தள்ளிவிடுவான்.அதனால் தான் இன்று எமக்கு சங்க இலக்கியம் கிடைத்து உள்ளது.அவன் போற்றிய ,பொறாமை கொண்ட அழகிகள்,அரசர்கள், கட்டிடங்கள்,அவனின் கண் பட்டு, உருக்குலைந்ததாக, அழிந்ததாக ,சீர்குலைந்ததாக வரலாறு இல்லை!

    ஒரு குழந்தையை வெளியே கொண்டு செல்லும் பொழுது,சில வேளை, சளி,இருமல், தும்மல் போன்றவை வரலாம் .நாம் யாரோ ஒருவரின் கண் பட்டுவிட்டது என யாரையோ திட்டுகிறோம்.உண்மையை அறிய முயற்சிப்பது இல்லை.இதைத் தான் மூட நம்பிக்கை என்கிறோம். அதாவது,பகுத்தறிவினால் சோதித்து அறியபடாதது நம்பிக்கை .சோதித்து அறிய வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாமலேயே ஒன்றை உண்மை என நினைப்பது மூடநம்பிக்கை ஆகும்!

    எமது ஒவ்வொரு அதிருஷ்டமின்மைகளும் கண்ணேறு அல்லது தீய கண்பார்வைகளால் எற்பட்டது என் சந்தேகித்தால் அதற்கு முடிவே இருக்காது. உதாரணமாக,ஒவ்வொருவருக்கும் மற்றவர் அந்நியரே ,அப்படி என்றால் உலகில் இருக்கும் அனைவரும் தீய பார்வைகள் போடலாம்?அப்படி என்றால், இந்த நம்பிக்கை எங்கே போய் முடியப் போகிறது?

    ஒரு சிறிய கண் திருஷ்டி பொம்மையை வாசலில் வைப்பதால் பெரிய செலவு கிடையாது. அதனால் எந்த பாதிப்பும் நேர போவதில்லை என்று வேண்டுமானால் கூறலாம்.ஆனால் நம் வாழ்வில் எதிர்நோக்கும் துன்பங்கள், வியாதிகள், பணச் சிக்கல்கள் எல்லாவற்றுக்கும் கண் திருஷ்டி காரணமாக அமைய இயலாது, அது எள்ளளவாவது காரணமாக இருக்கக் கூட வாய்ப்பில்லை .இது என் சொந்தக் கருத்து மட்டும் அல்ல. மூட நம்பிக்கை பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதியுள்ள பேரறிஞர்கள் கருத்தும் ஆகும்.

    மேலும் பொம்மை, திருஷ்டி கணபதி ,தாயத்து, போன்றவை வியாபார நோக்கில் செய்யப்படுபவை ஆகும் .'எதைக் கண்டால் பித்தம் தெளியும்?' என்ற நிலையில் உள்ள ஒருவருக்கு ஏதாவது செய்து தன் கஷ்டம் நீங்கினால் போதும் என்ற நிலை உண்டாகிறது.அப்போது யார் என்ன சொன்னாலும், திருஷ்டி பரிகாரம் முதல், ஏவல் செய்வினை பரிகாரம் வரை எது சொன்னாலும் அதை முயற்சி செய்து பார்க்கத் தோன்றும். நம்பிக்கையைப் போல் ஒரு மருந்து கிடையாது என்பார்கள். சில சமயங்களில் சில பரிகாரங்கள் ,அதன் மேல் வைத்த நம்பிக்கையின் உந்து சக்தியால் மாறலாம்.

    உதாரணமாக,கண்களுக்கு, பார்வைக்கு அதிக அதிர்கிற சக்தி உண்டு என்றால், அது சமமாக நல்ல பலனையும் ,கெட்ட பலனையும் நல்க வேண்டும் என்றாகிறது.அபூர்வமாக பரமாச்சாரியார் போன்ற கோடிக்கணக்கில் ஒருவருக்குத் தான் பார்வை அருள் உண்டு. மீதி அனைவரின் கண்களின் பார்வையும் தீய திருஷ்டி உடையவை என்று ஆகிவிடுகிறது.அது ஏன்? யாராவது சிந்தித்தது உண்டா? சக மனிதர்கள் அனைவரிடம் ஒரு குறிப்பிட்ட அளவு நம்பிக்கை வைப்பது தான் சமூக நன்மை பயக்கும்.கண் திருஷ்டி போன்ற நம்பிக்கைகள் மன நல மேம்பாட்டுக்குத் துணை புரியாது!

    உயர்வும் தாழ்வும் எல்லோருக்கும் உண்டு.அதற்கு கண் திருஷ்டி காரணமாக அமைய முடியாது என்றே நான் கருதுகிறேன்.எல்லா பிரசனைகளுக்கும் தீர்வு உண்டு.திருஷ்டி கழித்தல் தற்காலிக மன சமாதானத்தைத்தான் தர முடியுமே தவிர எந்த பிரசனைக்கும் தீர்வாக முடியாது.காலவதியாகிப்போன நம்பிக்கைகளைக் கட்டிக் கொண்டு அழுதால் சமுதாயம் நாறி விடும்!

    ReplyDelete