நாம் நமது வாழ்கையில் நிறைய படங்களை பார்க்கிறோம் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் ஒரு சில படமோ, மனிதர்களோ நமக்கு என்றைக்கும் மறப்பதில்லை. நாம் எத்தனை பெரிய மனிதர்களானாலும் அவற்றின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். எனக்கு பத்து வயது இருக்கும்போது குடும்பத்துடன் "மகளிர் மட்டும்" படத்தை கோவையில் சாந்தி திரையரங்கில் சென்ற பார்த்த நியாபகம். ஒரு முறை மதுரை சென்றபோது ஒரு வீடியோ கடையில் மகளிர் மட்டும் படம் இருப்பதை பார்த்ததும் எனக்கு என் சிறுவயதில் திரையரங்கில் பார்த்த நியாபகம் வந்தது, உடனே அந்த படத்தை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன். பல நாள் அந்த படத்தை பார்கவில்லை வேறு ஒரு படம் பார்க்க எடுத்தபோது மகளிர் மட்டும் படம் என் பார்வையில்பட்டது மீண்டும் எனக்கு என் பழைய சிறுவயது நியாபகங்கள்.இன்று பெண்கள் மீது ஒரு மரியாதை இருக்கும் என்றால் அந்த படம் தந்த தாக்கமாக இருக்கலாம்.படத்தை பார்க்கும் தாக்கம் பிறந்தது படம் எவ்வளவு சுவாரசியமானது என்பதை படம் பார்த்தவர்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை. இருந்தாலும் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது. படிக்காமல் இருக்க உங்களால் முடியாது என்பதால் சொல்கிறேன்.
குடும்பசூழ்நிலைக்காக வேலைக்கு போகும் பெண்கள் படும் அவதியை, சித்ரவதையை, கேவலமான ஆண்களின் பார்வையை சந்திக்கும் பல லட்சம் பெண்களில் மூன்று பேராக நடித்திருப்பது ரேவதி, ரோகினி மற்றும் ஊர்வசி. மூவருமே நடிப்பை வெளுத்து வாங்கியிருக்கிறார்கள் இந்த படத்தில். இந்த படத்தை முதல் முறை பார்பவர்கள் கண்டிப்பாக விழுந்து விழுந்து சிரிக்கும் வசனத்தை எழுதியிருப்பது என் பெயர் கொண்ட நடிகர் கிரேசி மோகன் அவர்கள். குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு வரும் பெண்களை காமத்தால் அடையத்துடிக்கும் கார்மெண்ட்ஸ் கம்பெனி மேலாளராக நடித்திருப்பது நாசர் அவர்கள்.
நாசர் செய்யும் சில்மிசங்களை பொறுக்கவும் முடியாமல் வேலையை விடவும் முடியாமல் அவதிப்படும் பெண்கள். அப்படிப்பட்ட மேலதிகாரியை கடிவாளம் போட்டு அடக்கும் படமாக மகளிர் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. அங்கங்கே சினிமாதனம் இருந்தாலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் இப்படி கொடூர மனம் படைத்த ஆண்களை சமாளித்து பல பெண்கள் வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது எவ்வளவோ மாறிவிட்டது என்றாலும் நிறைய இடங்களில் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்ணை பெண்ணாக பார்க்காமல் போகப்பொருளாக பார்க்கும் வக்கரபுத்தி படைத்த ஆண்கள் நேற்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள் நாளையும் இருப்பார்கள். அவர்களுக்கு இந்தப்படம் ஒரு பாடம்.
இந்த படத்தில் ரேவதி அவர்கள் அவ்வளவு அழகு. படம் முழுவதும் அவரது நடிப்பு அவரைப்போல் அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு பிணத்தை கடத்துவது, காரை திருடுவது, என்று ஏகத்துக்கு கலாட்டா செய்திருக்கிறார். ஊர்வசி பயத்தில் உளறிக்கொட்டுவது, ரோகிணியின் சென்னை பாசை படம் முழுவதும் நம்மை ஆக்ரமித்துவிடும்.
நாகேஷ் அவர்கள் பிணம்கூட இவ்வளவு நன்றாக நடிக்குமா? என்பது போன்ற ஒரு அற்புதமாக நடித்திருப்பார். இந்த காட்சியை முதல் முதலில் பார்க்கும்போது நான் எவ்வளவு ரசித்திருப்பேன் என்பது என்னால் இப்போது உணரமுடிகிறது. ஒரு வசனமே இல்லாமல் உடலசைவற்ற உடல் அசைவைக்கொண்டு நல்ல நடிகர் என்ற கிரீடத்தை ஒரு காட்சியிலேயே அசத்தியிருப்பார் நாகேஷ் அவர்கள்.
நாசரை கடத்தி கம்பனி நிருவாகத்தை கட்சிதமாய் கையாண்டு கம்பனியை மாற்றிக்கட்டும் ரேவதியின் நடிப்பு கம்பனியை மட்டுமல்ல படத்தையும் வெற்றிக்கு உயர்த்தியிருக்கிறது. ஒரு பெண்ணின் ஆளுமையை, நிர்வாக திறமையை, புதிய புதிய யோசனைகளை கொண்டுவந்து மூன்றே நாளில் கம்பனியை மாற்றிக்காட்டுவது சினிமாத்தனமாக இருந்தாலும் அதில் உள்ள ஆளுமையை, பெண்ணின் பெருமையை வெகுவாக உயர்த்திவிடுகிறது.
படத்தின் கடைசியில் கம்பனியின் முதலாளியாக வரும் கமல் படத்தின் திருப்புமுனையாக வருகிறார். நாசரை அந்தமானுக்கு அனுப்பிவிட்டு நிருவாகத்தை ரேவதியிடம் ஒப்படைப்பதோடு ரேவதி தனக்கு கணவானாக வருபவரை கற்பனையாக கணிப்பொறியில்
வடிவமைத்த உருவம் கமலாக வருவது ரசிக்கவைக்கிறது. படம் பெண்களை பற்றியது என்றாலும் இரண்டுவகையான ஆண்களை அதில் காட்டப்படிருக்கிறது பெண்களை காமப்பொருளாக பார்க்கும் அல்ப ஆணாக நாசர் நடித்திருப்பார் , மற்றும் பெண்ணின் திறமையை மதித்து பெண்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் ஆல்பா ஆணாக கமல் நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் ஆண்கள் தனக்குள் கேட்கவேண்டிய கேள்வி இதுதான் நாம் அல்ப ஆணா? ஆல்பா ஆணா? என்பதுதான்.