"நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத்
துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்."
[மகாகவி பாரதியார்]
ஒரு மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்,ஒவ்வொரு நாள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், முடிவற்ற பல நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டு அதனால் ஆளப்படுகிறான்.
நம்பிக்கை(belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில்,அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே,நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது.அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையாக இல்லாத இடத்து மூடநம்பிக்கை(Superstition)யாகிறது.
"யானையின் பலம் தும்பிக்கையிலே
மனிதனின் பலம் நம்பிக்கையிலே"
என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது? நம்பிக்கைகள் தாமே மனிதனை இயக்குகின்றன? இதை எவராலும் மறுக்க முடியாது?இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும்,திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே நம்பிக்கைகள் ஆகும்.
நம்பிக்கைகளின் நம்பகத் தன்மை, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளை நம்பிக்கை(Belief),திட நம்பிக்கை(Faith),மூட நம்பிக்கை(Superstition) என்று வகைப்படுத்தலாம்.
காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை(Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை(Faith) என்றும் (நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன்.எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவது),காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட நம்பிக்கை(Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு.
பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும்,சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு.சொல்லப்பட்ட சமூக,கலாச்சார,நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன.
வெவ்வேறு கலாச்சாரம்[பண்பாடு] வழிவழி வந்த மாறுபட்ட மூட நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக, ரோம,கிரேக்க நாகரீக மக்கள்,இயற்கை நிகழ்வுகள் கடவுளின் செயலே என நம்பினர்.அதனால் ஏற்பட்ட கடவுள் மேல் உள்ள பயமே[deisidaimonia:in a good sense reverencing god or the gods, pious,religion; in a bad sense superstitious religious or The fear of supernatural powers],ரோமர்கள் மூட நம்பிக்கை என கருதியது.
மேற்குலக சில நம்பிக்கைகள் உண்மையிலே பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தில் பூனை ஒரு சூனியகாரியாக கருதியது[cats were witches],அதனால் பூனைகளை சாக்கொண்டது/அழித்தது,எலி தனது தொகையை பெரும் அளவு அபிவிருத்தி செய்ய உதவியது.இதனால் 1665-1666இல் கொள்ளை நோய்[Plague/பிளேக்நோய்] வந்து 100,000 மக்களை பலி கொண்டது எல்லோருக்கும் இன்னும் நினவு இருக்கலாம்?மேலும் மேற்குலகில் முதலிடம் வகுப்பது இலக்கம் 13 ஆகும்,அதனுடன் வெள்ளி கிழமை சேர்ந்தால் அது மேலும் மோசமாகிறது.அப்படியே விரலை குறுக்கே வைப்பதும்["crossing fingers"], சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பதும் ஆகும்.
பொதுவாக பல மூட நம்பிக்கைகள் சமயத்துடன் தொடர்புடையவை .உதாரணமாக தாயத்து[Talisman/மந்திரக்காப்பு] கட்டுதல் போன்றவையாகும்.இந்தியாவிலும் மற்றும் தமிழர்களுக்கிடையில் நிலவும் பொதுவான மூட நம்பிக்கைகளை நாம் சங்க பாடல்களில் காணக்கூடியதாகவும் உள்ளது.
ஒரு மனிதனுக்கு நீரழிவு நோய் இருப்பதை அறிய[screening diabetes] எப்படி இரத்த பரிசோதனை செய்கிறோமோ அப்படியே ஒரு தமிழ் குடும்பத்தில்,கல்யாண பொருத்தம்,இருவரினதும் சாதகம் பரிசோதனை[horoscope matching] மூலம் அறியப்படுகிறது.இந்த சோதிடம்[astrology] பிள்ளைக்கு பெயர் வைப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது!
முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என்றார்கள்,அதற்கு காரணம் வெளிச்சம் குறைவானது என்பதே.இதனால் பெறுமதி யான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விடுவதை தடுத்தார்கள்.அது போல,இரவில் நகம் வெட்டக் கூடாதும் ஆகும்.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை.“நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்.தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும்? இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்(Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான்!!எப்படியாயினும் சங்க காலத்திலேயே தமிழன் இதை,இப்படியான மூட நம்பிக்கைகளை நம்ப தொடங்கி விட்டான்.
ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந் தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது.இடைக்காட்டுச்சித்தர் தன் ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை[madar leaf?] போன்றவற்றை தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர், "6௦" ஆண்டுகளின் பலன்களையும் "பா" வடிவில் தந்துள்ளார்.பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர்[soothsaying with help of molucca-beans] என்று சங்க பாடல் கூறுகிறது .மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் நம்பினர் .
"வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி"-- பட்டினப்பாலை.
இப்படியாக இன்னும் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டுநம்பிக்கைகளுடனும் மனிதன் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்.அதில் எந்தவித மாற்றமும் இல்லை
பகுதி/Part 01"B":"முகவுரையின் இரண்டாவது பகுதி [second part of preface]" தொடரும்
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam]
No comments:
Post a Comment