Part 01B:தமிழரின் நம்பிக்கைகள்: பகுதி முகவுரை [preface]

பகுதி01B/Part01"B":முகவுரையின் இரண்டாவது பகுதி [second part of preface]
 superstitious beliefs of tamils
Image result for superstitious beliefs of tamilsஊருக்கே குறி சொல்கிறது பல்லி, என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள்.அந்தப் பல்லி மனித உடலில் எந்த இடத்தில் விழுந்தாலும் அதற்கென்று பலன் சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.தன் துணையை அழைக்கத்தான் பல்லி கத்துகிறது என்பது படித்தவருக்குக் கூடப் புரியவில்லை. மேலும் “பூனை குறுக்கால போனால் போகிற காரியம் சரிவராது” என்று  சொல்லுகிறார்கள்.அது,உண்மையில்  பூனை பயத்தில் அல்லது ஏதாவது ஒன்றை பிடிக்க ஓடுகிறது. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்.பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தானே  கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறானே.உங்களுக்கு வேடிக்கையாக இல்லையா?  

இப்ப இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "தும்மலை"[sneeze]ப்பற்றி வள்ளுவர் கூறுவதை கேளுங்கள் : 

"நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்"- குறள் 1203

தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.விக்கலும்[hiccough] அப்படியே. அவரைப்பற்றி யாரோ கதைக்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்பார்கள்.இப்படி சொல்வதன் மூலம் தூர வசிப்பவர் ஒருவரின் அல்லது தூர பயணம் செய்துகொண்டு இருப்பவர் ஒருவரின் ஞாபகத்தை வைத்திருப்பதற்கு உதவும் என்பதாலே.ஆனால் நாளடைவில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது.

"சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்டநிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்"என்பதும் அப்படியே.அதாவது ஏணியின் கீழாக நடக்கும் போது தவறுதலாக ஏணியை தட்டிவிட்டால் மேல் இருப்பவர் அல்லது அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் கை நழுவி,கீழால் நடப்பவரின் மேல் விழலாம் என்பதால் ஆகும்.இது ஒரு பகுத்தறிவு சிந்தனையே.ஆனால் நாளடைவில் அதுவும் மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. அவ்வளவுதான்!

"மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது." 

பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன.சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால்,அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். கலிங்கத்துப்பரணி முதலிய பரணி வகை இலக்கியங்களில் இவை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. சங்ககால நூல்களில் புறம் 356, 363 குறுந்தொகை 231 முதலிய பாடல்கள் இக் கருத்தை வலியுறுத்துகின்றன.பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண் கடுகை[White mustard?]  நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களை அரிசில் கிழாரும் (புறம் 281), வெள்ளி மாறனாரும் (புறம் 296) தருகின்றனர்

"வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே - நீ
வெம்பி விடாதே"

[பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
படம்: அரசிளங்குமரி, 1957] 

இவை எல்லாத்தையும் விட ,"பன்றியே" சகுனம் பார்த்ததாக ஒரு போடு போட்டுவிட்டார் பாண்டிய மன்னர் ஒருவர். எப்படி இருக்குது மூட நம்பிக்கை.இதோ அந்த சங்க கால பாடல்:

[புலவர் -உக்கிரப் பெருவழுதி]/( நற்றிணை - 98. (குறிஞ்சி)]:

"எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ம்மம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன் ......"

[பொறி அமைக்கப்பட்ட புனத்தில்[மலைச்சார்பான கொல்லை] மேய்வதற்காகச் சிறிய கண்களைக் கொண்ட பன்றி ஒன்று வருகிறது. அது முள் போன்ற பிடரி மயிரைக் கொண்டிருந்தது.அது நுழையும் போது ஒரு குறித்த திசையிலிருந்து பல்லி கத்தியது.உடனே பன்றி நின்றது.ஏதோ ஒரு நுண் உணர்வு.அது திரும்பாமலேயே அப்படியே பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று அதன் பின்னர் தப்பிச்சென்று விட்டது.]

நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட,உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர் .

எலியாஸ்  ஹோவே "["Elias Howe"]என்பவர்  ஒரு தையல் இயந்திரத்தை உருவாக்க மாதக் கணக்கில் முயன்று கொண்டிருந்தார்.அவர் நடுவில் ஒரு ஓட்டை உள்ள ஊசியை பயன்படுத்தி தைத்தார். ஆனால் தையல் சீக்கிரத்தில் பிரிந்தி விடுகின்றது. ஒரு நாள் அவர் கனவில் அவரைச் சுற்றி காட்டுமிராண்டிகள் நின்று கொண்டு ஈட்டி வேல்கம்புகளை சுழற்றி பயமுறுத்து வதை கண்டார்.அந்த எல்லா ஆயுதங்களின் முனைகளின் நடுவிலும் ஓட்டை இருந்தது.கனவில் இருந்து விழித்த அவர் தன் தையல் ஊசியில் முனையின் நடுவில் ஓட்டை உருவாக்கினார்.தையல் இயந்திரம் உருவாயிற்று.

ஆனால் நாம் இன்னும் கனவுக்கு பலனும் பரிகாரமும் தேடிக்கொண்டு இருக்கிறோம் .உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தனது நறுக்குகள்[Snippets] ஒன்றில் சொல்லுகின்றார் ‘உன் கனவில் பாம்பு துரத்துகின்றது நீ ஓடுகின்றாய்! குறவன் கனவில் அவன் துரத்துகின்றான் பாம்பு ஓடுகின்றது” என்று 

நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!. 

அடுத்த அடுத்த இதழ்களில் தமிழரின் மூட நம்பிக்கைகளை ஒவ்வொன்றாக விபரமாக ,கூடியவரை தமிழ் இலக்கியத்தினதும் பழ மொழியினதும்  துணையுடன் பார்ப்போம்.

பகுதி/Part 02:தொடரும்{கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}




2 comments:

  1. திராவிடத்தால் தமிழர்கள் என்ன பகுத்தறிவை கண்டார்கள் , அல்லது திராவிடதிர்க்கு முன்பு தமிழர்களிடம் பகுத்தறிவு இல்லையா? என்ற வினாவோடு?இதோ..http://arulakam.wordpress.com/jaffna-360/

    ReplyDelete