வடமாகாண அரசு எங்கே செல்கிறது?

வடக்கு மாகாண சபையின் நிர்வாக ஒழுங்குகள் மிகவும் மோசமாகி வருவதை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தத்தம் போக்கில் செல்வதை உணர முடிகின்றது.
நிர்வாகக் கட்டமைப்புக்களில் செல்வாக்குக் கலாசாரம் புரையோடியிருப்பதை அவதானிக்கலாம்.

இவற்றைத் தனியொரு முதலமைச்சரால் நிவர்த்தி செய்ய இயலாதென்பது மறுதலிக்க முடியாத உண்மை. எனவே வடக்கு மாகாண அரசு இது விடயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவில் தேவையற்ற விடயங்கள் மீது அதிக நேரத்தைச் செலவிட்டு மாகாண சபை அமர்வுகளின் பிரயோசனம் வீணடிக்கப்படுகிறது. ஒவ்வொரு உறுப்பினர்களும் தமக்கான கடமையை உணர்ந்து செயற்பட வேண்டும்.

நமக்கென்ன என்ற போக்கில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செயற்படுவார்களாயின் எங்களின் எதிர்காலம் என்பது அதள பாதாளத்தில் விழுந்து விடும்.

வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்துக்கு முன்பாக ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம் நடக்குமளவில் நிலைமை மாறியுள்ளது.

ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வு பெற்று கொடுக்கப்படவில்லை.
கூடவே வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்களின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது அமைச்சர்களும் அதன் செயலாளர்களும் தன்னியக்கச் செய்மதிகள் போல இயங்குகின்றனர்.

அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது சரியான நிர்வாக ஒழுங்குகள் இல்லை என்பது தெரிகிறது.

கூடவே முதலமைச்சரின் நிர்வாகப் பணிகளைக் கையாள்பவர்கள் முதலமைச்சரைத் தவறாக வழிப்படுத்துகின்றனர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. இவற்றில் உண்மைகள் உண்டு என்பதை அடியோடு மறுத்துவிடவும் முடியாதுள்ளது.

வடக்கு மாகாண அரசு என்பது தமிழ் மக்களின் இதயத் துடிப்பு போன்றது. நமக்குக் கிடைத்த வடக்கு மாகாண அரசை நாம் செம்மையாக வழிப்படுத்தத் தவறுவோமாயின் அது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் நிர்வாகத் திறனுக்கு மிகப்பெரும் இழுக்கு என்பதுடன் தமிழர்களுக்கு நிர்வாகம் நடத்தத் தெரியாது என்றாகிவிடும்.

உண்மையில் ஒரு காலத்தில் இலங்கையின் நிர்வாகத்தை தமிழர்களே சிறப்பாக நடத்தினர். ஆனால் இன்று தமிழர்கள் தங்களுக்குக் கிடைத்த அரசின் நிர்வாகத்தைச் செம்மையாக நகர்த்த முடியாதவர்களாக இருக்கின்றனர்.

உலகம் போற்றக்கூடிய முதலமைச்சரைத் தமிழ் மக்கள் கிடைக்கப் பெற்றுள்ளனர். ஆனால் முதலமைச்சருக்கு நிர்வாகப் பணிகள் செய்கின்றவர்கள் செல்வாக்கை பிரயோகிக்கின்றனர் என்றும் முதலமைச்சரை திசை திருப்பப் பார்க்கின்றனர் என்றும் பரவலாகப் பேசப்படுவது குறித்து முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

இல்லையேல் நம்பிக்கெட்ட கதையாக நிலைமை முடிவதுடன் வடக்கு மாகாண அரசு எதனையும் செய்யவில்லையே என்ற நீங்காப் பழியையும் சுமக்க வேண்டி வரும்.

ஆகவே வடக்கு மாகாண அரசு விழித்துக் கொண்டு ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் செம்மைப்படுத்தி எம் இனத்தின் பெயரைக் காப்பாற்றுவது அவசர தேவையாகும்.

No comments:

Post a Comment