[இப்படியும் நடக்கின்றன]கனடாவிலிருந்து....அப்புவுக்கு ஒரு கடிதம்


  
                                13-04-2012
 அன்புள்ள அப்புவுக்கு            கனடா 

 நான் நலமுடையேன்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.
உங்கள் கடிதம் கிடைத்தது.யாவையும் அறிந்தேன்.
அப்பு,நீங்கள் அறிந்தது உண்மைதான்.கனடாவில் குறிப்பாக நாம் வாழும் டொராண்டோவில் புதிது புதிதாக முளைத்து இன்றுவரையில் 30 ஆலயங்கள் வந்துவிட்டன.ஆனால் ஒரு ஆலயமாவது எமது சமய வளர்ச்சிக்கோ அல்லது மனித ஆன்மீக வளர்ச்சிக்கோ பணி புரிகிறது என்றால் இல்லை என்றே பதில் வரும்.இந்தியாவில் வடக்கிலிருந்து தெற்குவரையில் உள்ள மூட நம்பிக்கைகளில் அதியுயர் வருமானங்களைக் கொடுக்கக்கூடிய வழிபாட்டு முறைகளெல்லாம் இங்கு வந்து சேர்ந்துவிட்டன.மக்களும் வெளியில் இத் தவறுகளை சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டாலும்,பய நம்பிக்கையில் தயக்கமின்றி அவற்றில் கலந்துகொள்கிறார்கள்.ஆலய முதலாளிகளும் தவிச்ச முயலடித்து தம் பணப்பையினை நிரப்பிக் கொள்கிறார்கள்.இந்த வாழ்க்கை எங்கள் காலத்துடன் முடிந்துவிடும்.ஏனெனில்,எமது பிள்ளைகள் இவ் ஆலயங்களுக்கு செல்லுமளவுக்கு,அவர்களுக்கு சமய விளக்கங்கள் கொடுக்கக் கூடிய அறிவினை எந்த ஒரு ஆலயமோ,அல்லது ஐயர்மாரோ எமக்குக் கற்றுக் கொடுக்கவில்லை.
இதனால் மதம் மாற்றவென்று வந்து கதவினைத் தட்டுவோரின் கருத்துக்கள் இலகுவாக கவரப்படுகின்றன.மதம் மாற்றுவோரின் எண்ணங்கள் ஈடேற அடிப்படைக் காரணங்களாகவும் எமது ஆலயங்கள் சிறந்து விளங்குகின்றன.
  எமது சமயம் அழிந்துகொண்டு இருக்கிறது என்ற கவலையில் இவற்றினைக் குறிப்பிடவில்லை. மதம் மாறுவோர் எண்ணம்  
கொழுக்கட்டை வேண்டாம்,மோதகம் தாருங்கள் என்று கேட்பது போன்றது.போன்றது. அது வேறு கதை. நான் குறிப்பிடுவது,மக்கள் சரியான ஆன்மீக வழிக்கு எடுத்துச் செல்லப்படாது தொடர்ந்து ஏமாற்றப் பட்டுக்கொண்டு இருக்கிறார்களே என்ற உணர்வில் இதனை எழுதுகிறேன்.
     அப்பு,கடவுள் வழிபாடு என்பது ஒருவனின்  இதயத்தில் பக்தியினை உருவாக் குவதற்குரிய கருவி.அக்கருவியின் மூலம் மனிதன்  தன் உள்ளத்தினை பண்படுத்த முடியும்.அவையே மனிதனின் நல்வாழ்வுக்கு காரணமாகிறது.மற்றும்படி கடவுளிடம் அதைத்தா,இதைத்தா என்று கேட்பதும்,பதிலாக யானை வாகனம் செய்து தருகிறேன் என்று கடவுளோடு பேரம் பேசுவதும் அர்த்தமற்றதுவும்,நடைமுறைக்கு ஒவ்வாத விடயங்களாகும் என்று நீங்கள் சிறுவயதில் எனக்கு கற்றுக் கொடுத்தவைகளை நான் மறக்கவில்லை.
    அப்பு,ஊரில் திருமண நாட்கள் கூடுதலாக கிழமைநாட்களில் அதுவும் நடு இரவுகளிலும் வந்து செல்கின்றன.ஆனால் கனடாவில் வார இறுதி நாட்களில் மதியம் மட்டுமே திருமணத்திற்கான சுபநேரங்கள் வசதிக்காக வந்து சேருகின்றன.அதே போல் வீடு குடிபூரல் என்றாலும் அது வார இறுதி அதிகாலையில் தான் நாள் கொடுக்கப்படுகின்றன.எதோ ஐயர் வாயிலிருந்து வருவதெல்லாம் இங்கு மந்திரங்களாகிவிட்டன.
அப்பு,சென்ற கிழமை வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை நாள் என்றதும் இங்கு அன்று கல்யாண நாளும் வந்துவிட்டது.எனவே ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்தின் திருமண மண்டபத்தில் அன்று நடைபெற இருந்த திருமண விழாவிற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.அங்கு சென்ற வேளையில் திருமண மண்டப வாசல் புரியாமல் ஆலையத்துள் சென்ற நான் அம் மண்டபத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தொண்டரிடம் வினாவினேன்.அவர் அந்த திருமண வீட்டாரின் சாதியினைக் குறிப்பிட்டு அவர்களின் திருமணவீடா!அப்படிச் செல்லுங்கள் என வழிகாட்டி விட்டனர்.
             பாருங்கள்.நாடு விட்டு நாடு வந்து இப் பல்லினத்தவர்வாழும் பூமியில் சாதிவெறியுடன் உரையாடும் எம்மில் சிலர் இன்னும் திருந்திய பாடில்லை.இதில் இவர்கள் தொண்டர்களாம்.
           இப்படித்தான் பொது இடங்களில் தம்மை பெரும் ஆன்மீக வாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலரும்,அவர்கள் பெயரினை நாவில் தாங்கிக்கொண்டு நல்லவர்கள் போல் நாடகம் ஆடிக்கொண்டு பெரும் தொண்டர்கள் போல் வேஷம் கட்டிக்கொண்டு பலரும் ,நெஞ்சினுள் நஞ்சினை காவிக்கொண்டு திரிகிறார்கள்.அவர்கள் திரியட்டும்.அவர்களுக்குரிய நெய்யில் நாம் விழாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

அப்பு,இங்கு தமிழரில் பலர் தெரியாதோரை கண்டால் ,முதலில் எந்த ஊர் என்றே கேட்பார்கள்.ஊரினைக் கூறியதும் இன்னாரைத் தெரியுமோ என்று ஒரு சில பெயர்களைக் கூறுவார்கள்.நாம் தெரியும் என்று கூறும் பெயர்களை கொண்டு  இவர் என்ன சாதி என ஊகித்து அச் செய்தியினை அடுத்தவரிடம் எடுத்துச் செல்வார்கள்.அப்படி என்றால் தான் அவர்கள் மனம் ஆறுதல் அடையும். ஆம்,நாங்கள் என்றைக்கும் மாறமாட்டோம்.
அப்பு,உங்கள் சுகத்தினையும்,தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.மீண்டும் ஒரு கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வோம்.
வேறு புதினம் இல்லை.
இப்படிக்கு
                                                                  அன்பின் மகன்
                                                                        வேந்தன் 

3 comments:

  1. எத்தனை யுகங்களானாலும் நாங்கள் மாறமாட்டோம்.

    ReplyDelete
  2. கண்ணன்Friday, January 27, 2017

    சொல்வதெல்லாம் உண்மைதான். மாற்றமுடியாத சனங்கள்!

    அதுசரி, நீங்கள் எந்த ஊர் அண்ணை?

    ReplyDelete
    Replies
    1. கடந்து வந்த பாதையில் இழந்தவைகள் ஏராளம்..அதையும்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் தம்பி.

      Delete