சைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? [பகுதி:04 ]

பொதுவாக, சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில் திராவிடர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக இந்தியாவிற்கு வந்தவர்கள் என நம்பப் படுகிறது.ஸ்பென்சர் வெல்ஸ்[Spencer Wells] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்"[Indian marker] என அழைக்கப்படும் M 20,திராவிடர்களின் மூதாதையர் வழி  L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி,30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறிய முடிகிறது.இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் [Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து,அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு,தென் இந்தியாவிற்கு வந்தார்கள் என்பது அறிய முடிகிறது.. இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு,தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 50,000 ஆண்டு களுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட  ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது . இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம்.இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம்,முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்து,இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு [அல்லது தமிழர் வரலாறு] பிறந்தது என்பர் அறிஞர்கள்.ஆகவே சைவ மதத்தின் சாயல் சுமேரியாவிலும் இருக்க சந்தர்ப்பம்
உண்டு.இதை நிரூபிக்கும் ஒரு சான்றாக, ஏறக்குறைய கி.மு. 2200 வாக்கில் சார்கோன் (Sargon) எனும் பேரசனின் புதல்வியாக விளங்கிய " ஏண் உடு அன்னா"[[Enheduanna] ] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய,  ஈனன்னாவை போற்றி துதி பாடும்,ஈனன்னை சீர்பியம் [ஈனன்னா B][exaltation of Inana (Inana B)]  பாடல்கள் அமைகின்றன.பாடல் ஒன்றில் பல வரிகளில் "ME " மெய் பற்றி கூறப்பட்டுள்ளது. 

"அனைத்து சக்தி அன்னை[nin-me-sar-ra / நின் மெய் சர்வ],
தெள்ளிய ஒளி வடிவினள்[u-dalla-e-a /உள் தெள்ளிய]
மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது;[mi-zi me-lam gur-ru /மை-சீ மேளம் கூறு ] 
விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப் படுகின்றவள் [ki-aga-an-uras-a /காங்க வான் ஊரஸ்ய].
ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை;சிகையில் பெரும் பெரும் அணிகளை சூட்டியவள்.
மெய்யான அழகோடு விளங்குபவள்;உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.
ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்;[மெய்: சக்தி)]
என் அன்னையே,பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான்
அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:
மெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய்"

இது தான் அந்த குறிப்பிட்ட முழுப் பாடலாகும்.இவள்,அன்னையாகிய நின்னா,சர்வ மெய்களின் தலைவி என்பதொடு தெள்ளிய ஒளியினாள் என்றும்.சீர் மிகு பெண் என்பதொடு தூய வெள்ளொளியையே அணிந்திருப்பவள் என்றும் பூவுலகாலும் வானுலகாலும் விரும்பப்படுகின்றவள் என்றும் வாசிக்கும் போதே சைவத்திற்கும் சுமேரியன் சமயத்திற்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவ நாயகி” என்றும் ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரை” [The Divine Energy of Siva] அல்லது சிவசக்தி என்றெல்லாம் கூறலாம்.சீர் மிகு மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாக அணிகின்றாள் என்று கூறும் போது,அவள் ஒளிப்பிரகாசமாய் அன்றே கண்களுக்கு காட்சி தந்துள்ளது என்பது மெய்யாகிறது.இதுவே நின்னாவை அழகு மிக்கவளாக,ஆகவே உலகிலும் விண்ணிலும் உள்ள அனைவராலும் விரும்பப்படுகின்றவளாகவும் ஆக்குகின்றது.எல்லா தத்வங்களின் நாயகியாக விளங்கும் அம்மை பரஞ்சுடராக தூய வெள்ளொளியில் தெள்ளிய ஒளியில் சுடரும் அவளை எல்லோரும் விரும்புகின்றார்கள் என்றால் என்ன பொருள்? இந்த ஞான தரிசனத்தைப் பெற்று உய்ய வேண்டும் என்ற வேட்கை எல்லா உயிர்களிடமும் இருக்கின்றது என்பதே இங்கு அம்மையார் விளம்பும் மெய்ஞானக் கருத்து
ஆகும் என்கிறார் முனைவர் கி.லோகநாதன்.இதனையே சிவன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் ஏறக்குறைய 2800 ஆண்டுகளுக்குப் பிறகு திருமூலர் நான்காம் தந்திரத்தில்,பாடல் 889 இல்.மேலும் இங்கு கொற்றவையே 'ஈனன்னா' [Inanna] எனப்படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன்,அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார்.கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும்,பின்னர் சிவாவுடன் இணைந்தார் /விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள்.அத்துடன்,அஸ்கோ பர்போலா [Asco Parpola.] என்ற அறிஞர் தமது புத்தாகத்தில் துர்காவிற்கும் [காளிக்கும்] ஈனன்னாவிற்கும் தொடர்பு இருப்பதை எடுத்து காட்டியுள்ளார். தமிழரின் சைவ சமயத்தில் சிவனை தத்துவன் எனவும் அழைக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதன் பொருள் எல்லா சக்திகளினதும் தலைவர் என்பது [Siva, as lord of all powers] ஆகும்.
"தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே அகர் உகரமாய் நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே"

சிவன் என்றாலும் பரஞ்சுடர் என்றுதான் பொருள்படும்.‘உள்(ஒள்) தெள்ளிய” என்பதும் அதுதானே.‘சர்வ மெய்களின் அன்னை’ என்றாலும் ‘தானே தத்துவமாய் நிற்கும்’ என்பதும் ஒன்றுதானே?அவளே எல்லா தத்துவங்களின் தலைவி எனும் போது,தானே மண்ணிலும் விண்ணிலும் நடக்கும் எல்லா தத்துவக் கூத்துகட்கும் தராதலமாக அமைகின்றாள் [தராதலம் - தாங்குகின்ற இடம். தத்துவக் கூத்து - தத்துவங்களை ஆக்குகின்ற கூத்து] என்பது பொருளாகும்.ஆகவே சுமேரியாவின் ஈனன்னா,சிந்து வெளியின் தாய் தெய்வம்,சங்கத் தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும், சக்தியாக, சிவனுடைய சக்தியாக உருமாறியது என்று கொள்ளலாம்,மேலும்,சிந்து வெளி முத்திரைகள் இந்தியாவிற்கு வெளியே,உம்மா மற்றும் ஊர் [Umma and Ur] போன்ற மெசொப்பொதாமியா நகரங்களிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அது மட்டும் அல்ல,சில இரண்டு நாகரிக முத்திரைகளிளும் நெருங்கிய ஒற்றுமையையும் காண முடிகிறது.இவை,இரு நாகரிக மதங்களுக்கும் பண்பாட்டிற்கும் இடையில் ஒரு தொடர்பை காட்டுகிறது. உதாரணமாக இரு பக்கமும் சீறி எழுகிற,மூர்க்கமான புலிகளை கெட்டியாகப் பிடித்து நிற்கும் வீரனை காட்டும் மொகஞ்சதாரோ முத்திரையும் கில்கமெஷ் தனது இருகைகளாலும் இரு சிங்கங்களை பிடித்து நிற்கும் முத்திரையும் ஒரே மையக் கருத்தாக உள்ளது குறிப்பிடத் தக்கது.  பல தமிழ் இலக்கியங்கள் முருகனை தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன."வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"என்றும் பாடுகின்றது.சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப் படும் பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம். எனினும் ஆரியரின் கலப்பிற்கு பின்,இன்று நாம் பெரும்பாலும் தந்தை வழி சமுதாயமாக  மாறி நிற்கிறோம்.

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும்,சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படா விட்டாலும்,சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன.இவ்வாறு சுமேரியா,சிந்து சம வெளி,சங்க காலம் போன்றவற்றில் சக்தி,சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது.இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது.அது மட்டும் அல்ல,நான்கு வேதங்கள்,சமஸ்கிருத புராணங்கள்,மற்றும் காவியங்கள் [the Vedas,Sanskrit puranas and epics] போன்றவை தமிழர்களுக்கு அவர்களின் மதமாக இவர்களால் வழங்கப் படடன.இது ஒரு அழிவுண்டாக்குகிற செயலாகும்.இதனால், பக்தி நெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று எம்மிடம் காணப்படவில்லை.

வேதத்தை அடிப்படையாக கொண்ட,இன்றைய ஈரானில் இருந்து இந்திய வந்த ஆரியரின் மதம்,படிப்படியாக கி மு ஆறாம் நூற்ராண்டிற்கும் இரண்டாம்  நூற்ராண்டிற்கும் இடையில் இன்றைய இந்து மதமாக மாற்றம் அடைந்தது.அவர்களின் நூல்கள் கூட் டாக இந்து மதத்தின் புனித நூல் ஆகின.மேலும் இதன் சில தாக்கங்களை தொல்காப்பியம்,புறநானுறு மற்றும் கி மு 700  ஆண்டு தொடக்கம் கி பி 300  ஆண்டுகளுக்கு உட்பட்ட,மற்றைய சங்க இலக்கியங்களிலும் காணலாம்."அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்"-என தொல்காப்பியம் 2.16 உம், "தந்தை தோழன் இவர் என் மகளிர் அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே" -என புறநானுறு 201 உம் கூறுகின்றன.இவை இந்த தாக்கங்களின் சில உதாரணம் ஆகும் . வர்ணாசிரமம் இது வாகும். வேதியர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர் எனும் நால்வகை வர்ணத்தினரை ஒரு படி முறையில் வழங்குகிறது.இதற்கும் சைவ மதத்திற்கும் எந்த தொடர்ப்புமே இல்லை.சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று.சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று.சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று.`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும் .எனவே தெட்டத்  தெளிவாக தமிழரின் சைவ மதம்,ஆரியர்களின் பிராமணிய இந்து [ஹிந்து] மதத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்டது .இதை என்று நாம் உணருகிறோமோ அன்று தான் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்பதை நீ உணர்வாய் !


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

முடிவுற்றது 

No comments:

Post a Comment