"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்!"பகுதி:03

பிள்ளைகள் பிறந்த நாளில் இருந்தே,பெற்றோரின் பிரதி மாதிரி, அவர்கள் சார்ந்த சமூகத்தின் பிரதி மாதிரி, பழக்க வழக்கங்கள் பின்பற்றுதல் போன்றவற்றில் பிரதி பலிக்க, கட்டுப் படுத்தப் படுகிறார்கள்.உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை அமைப்பிற்குள் பெற்றோர்களால் தள்ளப் படுகிறார்கள்.ஒரு குறிப்பிட்ட கருத்துக்களை திணிக்கிறார்கள்.அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட ஒழுக்கம் பழக்கப்படுகிறது.யார் தான் பெற்றோரை நம்ப மாட் டார்கள்?பின் அவர்கள் வளரும் போது தமது குருவை,ஆசிரியரை முதன்மையாக நம்புகிறார்கள்.திருப்ப திருப்ப ஒன்றையே பாடசாலையில் கேட்பதாலும் முதியோர்களிடமும் கேட்பதாலும் ,அந்த செய்திகள் அவர்களுக்கு ஏற்புடைமை யாகி மூளையில் பதிந்து விடுகிறது. மேலும் இந்த நம்பிக்கைகள், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது வீடு,பாடசாலை,ஆலயங்கள் அல்லது தேவாலயங்கள் அல்லது மசூதிகள் போன்றவற்றிலும் சரியே என உறுதி பெறுகிறார்கள். இப்படி சிறு வயதில் இருந்தே மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்கள் இதை உணர்வதே இல்லை.இது ஒரு பெரும் குறையே! "The Mummy" என்னும் படத்தில் அந்த மம்மியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்­, மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாய்  “Imhotep... Imhotep" என்று அந்த மம்மியின் பெயரை மட்டும் உச்சரித்துக்கொண்டே தாங்கள் என்ன
செய்கிறோம் என்பதை அறியாதவர்களாய் அந்த மம்மியின் கட்டளையை மட்டும் நிறைவேற்றுவார்கள்.இப்படித் தான் இவர்களும்! இன்று பயங்கரவாத செயல்கள் பெரும்பாலும் சமயத்துடன் தொடர்புள்ளனவாக உள்ளன. இன்று உலகில் நடக்கும் போட்டி, பொறாமை ,வஞ்சகம் ,சூது ,எல்லைத் தகராறு ,தீவிர வாதம் ,பயங்கரவாதம் ,போன்ற தீய செயல்கள் அனைத் திற்கும் சமயங்களும் மதங்களுமே காரண காரியமாக உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாத உண்மை. எல்லா சமயங்களும் மதங்களும் மக்களுக்கு முதலில் நல்லது சொல்ல தோன்றியது என்றாலும் இன்று மனித உயிர்களை பிரித்து விட்டது . ஆன்ம நேயத்தை அழித்து விட்டது .எது எவ்வாறாயினும் தமிழ் சித்தர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பேயே மேலே கூறப் பட்டவைக்கு விதி விளக்காகவே இருந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.சுந்தரநாதர் என முதலில் அறியப்பட்ட  திருமூலர்,சைவ பக்தி நெறியை உலகிற்கு வழங்கிய சித்தர் பரம்பரையில் முதன்மையும் , தொன்மையும், வாய்ந்தவர் ஆவார். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,”, "அன்பே சிவம்" ,"யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" ,"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" என்பன போன்ற அரிய தொடர்கள் இவரால் வழங்கப் பட்டது.63 சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆகவும் இவர் கருதப் படுகிறார்.சிலர் இவர் கி மு 250 ஆண்டை சேர்ந்தவர் என கருதினாலும் மேலும் சிலர் இவரை ஐந்தாம் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவர் என கருது கின்றனர்.அவரின் இரு பாடல்கள் கீழே தரப்     பட்டுள்ளன.

"வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே"[பாடல்:229 ]

[வேதங்களின் நோக்கம் நமது ஆசைகளை ஒழிப்பதாகும். பொதுவாக வேதாந்தம் கேட்பவர்கள் தமது ஆசைகளை விட்டு விட வேண்டும் . ஆனால் வேதாந்தம் கேட்க விரும்பிய அந்தணர்கள்,அதை கேட்ட பின்பும்,இன்னும்  தமது ஆசையை ,வேட் கையை  விடவில்லை என்கிறார்.]    

"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே"[பாடல்:148]

[தலைவாழை இலைபோட்டு அறுசுவை யோடு கூடிய உணவு வகைகளை இல்லத்தரசி சமைத்து, தன் கணவனுக்கு அவற்றை அன்புடன் பாரமாரினாள். அவனும் விரும்பி உண்டான். இருவரும் ஒன்றாய் கூடிக் கிடந்த வேளையில் " கண்ணே இடப்பக்கமாய் நெஞ்சு வலிக்கிறது என்றான், அந்த கணமே நிலத்தில் சரிந்து விழுந்து இறந்து போனான் என்று கூறுகிறார்.இதனையே வள்ளுவரும் நிலையாமை அதிகாரத்தில் " நில்லாத வற்றை நிலை யின என்னுணரும் புல்லறி வாண்மை கடை " என்ற நிலையற்றவைகளை நிலையென்றுமனிதன் கருதுவது அவனுடைய அறியாமையே ஆகும், என்றும், " நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு " என்ற வாறு, நேற்றிருந்தோர் இன்றில்லை என்று சொல்லும் பெருமை உடையது இவ்வுலகம் என்கிறார்.]

உத்தரநல்லூர் நங்கை என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில்
தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு பெண்.இவர் பாய்ச்சலூர்ப் பதிகம் என்ற நூலை இயற்றி சாதி அமைப்பையும் பாகுபாட்டினையும் அதில் கடுமையாகச் சாடியுள்ளார். அபிதான சிந்தாமணி “இவள் ஒரு பெண்கவி, பிராமணரை வசை பாடினாள்” என்று இவரைப் பற்றி குறிப்பிடுகிறது. இவள் ஒரு வேதிய இளைஞனிடம் காதல் வசப் பட்டாள்.இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தார் அவளை உயிருடன் எரிக்க முற்பட் டனர்.அதை எதிர்த்து அவள் எழுப்பிய வாதம் தான் இந்த பாடல் "கொக்குமேற் குடுமி கண்டேன் கோழிமேற் சூடும் கண்டேன்,நெக்குறு வாலும் கண்டேன் நீரின்மேல் நெருப்பும் கண்டேன்,சற்குணம் என்று சொல்லிச் சதுர்மறை பேச வேண்டாம்,பக்குவம் அறிந்து பாரும் பாய்ச்சலூர்க் கிராமத் தாரே"சமத்துவமும் உரிமையும் கோரிப் பெண்களிடமிருந்து கலகக் குரல் எழுந்த நாளைத்தான் பெண்கள் தினமாக உலகம் போற்றிக் கொண்டிருக்கிறது.ஆனால் அது உண்மையில் இவளுடன் ஆரம்பிக்கப் பட்டு விட்டது.சாதிகள் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட சதி என்பதை பிராமண ஆதிக்கம் நிறைந்திருந்த காலத்திலேயே மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அதன் காரணமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துக் கலகக் குரல் கொடுத்தவர், சடங்குகள் சாதி பேதங்களை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை என்பதையெல்லாம் அவர் பாட்டுக்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.உதாரணமாக வெவ்வேறு மரங்கள் நெருப்பில் விழுந்தால் வேறு வேறு மணம் எழும். ஆனால் மனிதரின் பிணங்கள் நெருப்பில் எரியும் போது வேறு வேறு மணம் எழுவதுண்டா? "சந்தனம் அகிலும் வேம்பும் தனித் தனி வாசம் வீசம், அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன்மணம் வேற தாமோ,செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேற தாமோ,பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர்க்
கிராமத்தாரே"என்று கேட்கிறது அவளின் இன்னும் ஒரு பாடல்."ஒரு பனை இரண்டு பாளை,ஒன்று நுங்கு ஒன்று கள்ளு,அறிவினில் அறிந்தவர்க்கு , அதுவுங்கள் இதுவுங் கள்ளே,ஒருகுலை உயர்ந்ததேனோ, ஒரு குலை தாழ்ந்ததேனோ,பறையனைப் பழிப்பதேனோ,பாய்ச்சலூர்க் கிராமத்தாரே" என்று ஒரே பனையிலேயே இரண்டு வித்தி யாசத்தை எடுத்துக் கூறி,இது பனையின் குற்றமில்லை,இதை கையாண்ட மனிதனே இதற்கு பொறுப்பு என்று வாதாடி,அப்படியே மனிதர்களுக்குள் சாதியின் பெயரால் வித்தியாசம் கற்பிக்கப்படு கிறது என குரல் எழுப்பி சமத்துவம் கோரி போராடி அதில் வெற்றியும் கொண்டு,அந்த வேதிய இளைஞனை மணந்து வாழ்ந்தாள் என வரலாறு கூறுகிறது.அது உலகளாவி பரவ வேண்டும்!சமயத்திற்கு அப்பால், ஆண்டவனுக்கு அப்பால், மனிதன் இணையட்டும் மனித நேயம் பரவட்டும்! 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]

பகுதி:04  தொடரும் 

No comments:

Post a Comment