சைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? [பகுதி:03 ]


இந்தியாவின் பழங் குடியினரின்[ மக்களின்] நாகரிகம் முதலாவதாக, சிந்து சம வெளியில் கி மு  3300 க்கும்-கி மு 2600 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித்  தழைத்தோங்கி, கி மு  2600-1900 ஆண்டுகளில்  ஹரப்பாவில்  உச்ச நிலையில் இருந்து,பின் சடுதியாக அழிந்து போய்விட்டது. புறநானுறு 202 இல்,"கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி" என்ற வரியில் கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி,உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன் என்கிறார்.அரையம் என்றால்,பெரும் நகரம் என்று பொருள்.அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார்.இந்த பழங் குடியினர் மிக பழைய காலத்தில், ஆப்ரிகாவில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.ஆகவே,ஆப்ரிகாவில் நிலவிய பண்பாடு போல, பண்டைய இந்தியாவும் பெரும்பாலும் தாய்வழி சமூகமாகவே இருந்தது. எனவே,அப்போதைய இந்த மக்கள் பெண்ணை மையப்படுத்தி வாழ்ந்தார்கள்.இவர்கள் பிறப்பின் அதிசயத்தை,கால மாற்றத்தை, நிலவின் தேய்தல் வளர்தலை,மறுபிறப்பை,தெய்வீகத்தை அல்லது ஈடற்ற நிலையை [mysteries of birth,the seasons and lunar cycles,rebirth and transcendence] கொண்டாடினார்கள். கருவளம்,ஆண்மை மற்றும் மறுமை [fertility,virility and the after-life] போன்றவற்றுடன் தொடர்புடைய ஆன்மீக சக்திகளை யும் வழிபட்டார்கள். பொதுவாக,  இம் மக்கள் தந்திர முறை பண்பாட்டையே கொண்டிருந்தார்கள்.இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறுபட்டது.இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும்.ஆகவே ஆரியர்களின் அகநிலை உணர்வுக்குப் புறம்பான,வெளிப்புற சடங்கில் இருந்து மாறு பட்டது. சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒன்று பசுபதி வடிவம்.இந்த பசுபதி முத்திரையை சிவனின் முன்னைய வடிவமாக அல்லது சிவனின் தொடக்கக் கருத்துருவாக [முற்காலத்திய சிவனாக] சர் ஜான் மார்ஷல் அடையாளப் படுத்து கிறார். அது மட்டும் அல்ல,சிந்து வெளி இடிபாடுகளுக் கிடையில், படைப்பாற்றல் சின்னங்களான, சிவ பக்தர்களால் இன்றும் பாவிக்கப்படும் வடிவம் ஒத்த , லிங்கம் மற்றும் யோனி வடிவ பெருங்கல்கள் கிடைத்த துள்ளன.விவசாய மற்றும் பழங்குடி மக்களுக்கிடையில் காணப்பட்ட, படைப்பாற்றல் சின்னங்களின் வழிபாடை ஒத்த வழிபாடு இங்கும் தொடர்வதை இது எமக்கு எடுத்துரைக்கிறது.இந்த தொடக்க நிலை சைவ சமயத்தின் அத்திவாரத்தில் இருந்தே இன்றைய சைவ சமயம் வளர்ந்தது எனலாம்.இது மேலும் ஆரியர்களின் வருகைக்கு முன்பே,சிவனை வழிபடும் வழக்கம் இந்தியாவில் இருந்துள்ளது என்பது இதனால் அறியப் படுகிறது. எனினும்,இந்த நாகரிகம் இந்தியாவிற்குள் புகுந்த ஆரியரின் தாக்குதலாலும் மேலும் வறட்சியாலும் கி மு 1700 ஆண்டு அளவில் முற்றாக அழிவுற்றது. எப்படியாயினும்,சிவாவை மையப்படுத்திய சிந்து வெளி வழிபாடு,திராவிட இந்தியாவில்,குறிப்பாக தமிழர் மத்தியில் இன்றும், இன்னும் போற்றிப் பேணப்படுகிறது.சிவ வழிபாடு திராவிட மக்களுடையது என்பதை ஆரியர்களின் மனப் போக்கில் இருந்து நாம் தெளிவாக அறியலாம்.வட வேதங்களில் லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில் தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவ லிங்கத்தை  “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான கி மு 1500-1100 ஆண்டு அளவில் தொகுக்கப்பட்ட ரிக் வேதம் [இருக்கு வேதம்] கூறுகிறது. இதில்,7.21.5 பாடலில் "Let our true God subdue the hostile rabble:let not the lewd [Shishan Deva] approach our holy worship." என்று கூறுகிறது. அதாவது "எங்கள் உண்மையான கடவுள்,இந்திரன்,எமது எதிரியான ஒழுங்கீனமான கும்பலை அடக்கட்டும்:ஓழுக்கங்கெட்ட  ஆண் குறியை வணங்கும் கும்பல்,எமது புனித இடத்தை ஊடுருவதை தடுக்கட்டும்" என்கிறது.எது எப்படி யாயினும் பிந்திய வடவேதங்களில் சிவா அதிகரித்த முக்கியத்துவம் பெறுகிறார். இது அவர்கள் காலப்போக்கில் சைவத்தையும் உள்வாங்கியதை எடுத்துக் காட்டுகிறது.மேலும் பிற்பட்ட தொல்லியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகள், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், ஆரியரல்லாத திராவிட இன மக்கள் என பெரும்பாலும் அடையாளப் படுத்து கிறது.சர் ஜான் மார்ஷலின் அகழ்வு ஆய்வு,சைவ சமயத்தின் வரலாற்றை கிறிஸ்துக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு கொண்டு செல்கிறது.சர் ஜான் மார்ஷல் ஏழு மண் அடுக்கு வரை தோண்டி ஆய்வு செய்தார்.ஒரு மண் அடுக்கு ஏறத்தாள 500 வருடங்களை குறிக்கும்.பிரபல தத்துவவாதியும் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான,டாக்டர் சர்வபள்ளி இராதா கிருஷ்ணன் தான் எழுதிய இந்து சமய வரலாறு [ History of Hinduism] என்ற நூலில் சைவ சமயத்தின் ஆரம்பம்,நாம் இது வரை ஏற்றுக் கொண்டதை விட மேலும் சில நூற் றாண்டுகள் கூடுதலாக இருக்கலாம்.
ஏனென்றால் இன்னும் முதலாவது மண் அடுக்கு அடையாள படுத்தப் படவில்லை.ஆகவே சரியாக தீர்மானிக்க முடியாது என்கிறார்.இவை எல்லாம் எமக்கு காட்டுவது,இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன்னமே அங்கு சைவ சமயம் தழைத்தோங்கி இருந்தது என்பதாகும்.இந்த வரலாற்று உண்மைகள் எல்லாம் இந்தியர் அல்லாதவர்களால் சரிபார்க்கப்பட்டது.இது சைவ சமயத்தை உலகின் மிகப் பழமையான மதமாக்கிறது!

சாதாரண பொது மக்களும் இலகுவாக அன்பு செலுத்த,மனத்தால் உணர,புரிந்து கொள்ள திராவிடர்களின் வழி பாட்டு முறை உருவ வழிபாடாக இருந்தது.அங்கே அவர்கள் பருப் பொருளாலான மத சின்னத் திற்கு பூசை செய்தார்கள்.திராவிடர்கள் ஆண்டவனை நீர்,இலைகள்,மலர்கள் கொண்டு வழிபட்டார்கள்.ஆரியர்களின் வழிபாடு வேள்வி[ஹோமம், ஓமம் ] ஆகும்.இது ஒரு உருவம் அற்ற வழிபாடாகும். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை, விலங்குகளை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறை இது வாகும்.ஆண்டவனுக்கு தமது செய்திகளை காவிச் செல்லும் ஒரு தூதராக  நெருப்பு  தொழிற் படுவதாக அவர்கள் கருது கிறார்கள்.வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள், ஆரியர்கள் மத்தியில் வழக்கில் இருந்து வருகிறது.ஆண்டவனின் ஆதரவை பெற,அவரை மகிழ்விக்கும் அல்லது திருப்தி படுத்தும் முறையாக இதை ஆரியர்கள் பின்பற்று கிறார்கள்.மத்திய ஆசியாவில் இருந்து நாடோடியாக வந்த ஆரியர்கள்,திராவிடர்களை வென்ற பின்பு,பண்டைய திராவிடர் களின் சமயத்திலும் மாற்றம் மெல்ல மெல்ல எற்பட்டது.பண்டைய  கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக்
கடவுளுக்கு  இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)] .அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது.அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன் சேர்த்துவிட்டார்கள்.உதாரணமாக, தமிழரின் சிறப்புக் கடவுள்கள், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன்/சுப்பிரமணியன் ஆனான்!திருமால்→ விஷ்ணு ஆனான்!சிவன்→ ருத்திரன் ஆனான்!கொற்றவை→பார்வதி/துர்க்கை ஆனாள்!உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை,பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்ய னாக்கி விட்டார்கள்.ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள்.தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண
மதத்துக்குள் உள் வாங்கப் பட்டது..அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான்,பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம்,இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள்.அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன.தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார்.அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும்,கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் [சைவர்களும்] உணர்வதில்லை. தொடக்கத்தில் வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்த படியாலும்,நால்வகைச் சாதிப்பாகுபா டுடையதாய்ப் பிராமணர் மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கையுடைய தாயிருந்த படியாலும், இவற்றிற்கு மேலாக,பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக் கூடாது என்று தடுத்து வந்த படியாலும்,இவ்விதக் குறுகிய கோட்பாட்டினை யுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. என்றாலும் கி. பி. நாலாவது, அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர்,வைதீக மதம் தனது அடிப்படையான கொள்கைகள் சிலவற்றில் மாறுதல் செய்துகொண்டு புத்துயிர் பெற்றது. அதாவது,யாகங்களில் உயிர்க் கொலை செய்வதை நிறுத்திக்கொண்டதோடு, திராவிட தெய்வங்களைத் தன் மதக் கடவுளராக ஏற்றுக் கொண்டு புதிய உருவம் பெற்று விட்டது.உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் தந்திரம்
இது.உறவுமுறைகளை வலிமைப் படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன.தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது.இன்றைக்கும், பிராமணர்களின் வர்ண சாஸ்திரத்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர்  அல்லது கிராமபுர மக்கள் மத்தியில்  "முருகன்", "வள்ளி" போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர் அல்லது  சம்ஸ்கிருத மோகம் கொண்ட  மக்கள் மத்தியில், அதற்கு மாறாக, "ஸ்கந்தன்", "சுப்பிரமணியன்" என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். தமிழர் சமயக் கிரியை களோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன.ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின.திராவிட தெய்வங்கள் வைதீகத்தில் கலந்து உரு மாறின.முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு சேர்ந்து இந்திரனின் மகளான தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார். இதன் மூலமே, தேவேந்திரனுடன் சொந்தமாகின்றார்! இதில் முதலாவது களவொழுக்க த்தையும் இரண்டாவது  கற்பொழுக்க த்தையும் காட்டுகிறது.மணச் சடங்கினைப் பற்றி தொல் காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத் தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிகிறோம்.எனினும் காலப்போக்கில், பெற்றோர் நடத்தி வைக்கும்  'கற்பு நெறி' மணவாழ்க்கை அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே  உறவுமுறை உருவாக்கப்பட்டன . முருகனும், பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர் ....... தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழி யாகவும் ஆனது.சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர். கொற்றவை சங்க கால பழந்தமிழ் மக்களின் வெற்றித் தெய்வம். சிந்துவெளிப் பெண் தெய்வத்திற்கும் கொற்றவைக்குமுள்ள உண்மையான தொடர்பினை இன்றைய ஆராய்ச்சி நிலையில் தெளிவாகக் கூறுவதற்கில்லை.எனினும் தொடர்பு நெருங்கியதாக இருக்கலாம் என ஊகிக்க இட முண்டு.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]    

பகுதி:04  தொடரும்.

No comments:

Post a Comment