"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்!"பகுதி:02


தவளையைப் பற்றி ஒரு பழங் கதை உண்டு.தவளையை ஒரு கொதிக்கும் நீருக்குள் போட் டால்,அது உடனடியாக துள்ளி வெளியே போய் விடும்  . ஆனால் அப்படி இல்லாமல்,சட்டியில் உள்ள நீரில் முதல் தவளையை போட்டு ,பின் மெல்ல மெல்ல சூடேற்றினால் ,அந்த தவளை, நீர் கொதித்து,அது இறக்கும் மட்டும் அங்கு இருந்து விடும்.கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனார் என அழைக்கப்பட்ட அப்பர் கூட இப்படியான ஒரு உவமை பாவிக்கிறார்.ஆனால் தவளைக்கு பதிலாக ஆமை."...உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இல்லாதேன்..."என்கிறார்.இப்படியான ஒரு நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம்.ஆனால்,எமது சித்தர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே,சமயம் என்ற அண்டாவில் இருந்து தம்மை விடுவித்து துள்ளி வெளியே வந்து எமக்கு உண்மையை தெளிவாக காட்டி விட் டார்கள்.இந்த சித்தர்கள் தம்மை பின்பற்றுபவர்கள் என்று எவரையும் வைத்திருக்க வில்லை,அதே போல எந்த ஆசிரமமும் கட்ட வில்லை.அவர்கள் ஒரு தனிப்பட்ட முறையில் பக்தர்களுடன் தொடர்பு கொண்டார்கள்: இவர்கள் பக்தர்களை எந்த கட்டுப் பாடும் இல்லாமல் சுதந்திரமாக சிந்திக்க விட்டார்கள்.எல்லா சித்தர்களும் ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மனதை அலைய விடாமல் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள்.
'மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப் பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்..கலையின் பெயராலே காமவலை வீசும்,காசு வருமென்றால் மானம் விலைபேசும்,நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும், நிம்மதி யில்லாமல் அலை போல மோதும்...'என்று சும்மாவா சொல்லி வைத்தான்! அது மட்டும் அல்ல மனம் என்னும் இந்த பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன,அதற்காகப் பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர் ஆவார்.எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வது போலவே பாடல்களை பாடினார். இவரின் மூன்று பாடல்கள் கீழே தரப்பட் டுள்ளன.

"சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே."[பாடல்:98 ] 

"இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!"[பாடல்:61 ] 

"ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்
எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே."[பாடல்:94 ]

சிவவாக்கியர் மற்றும் ஒரு முக்கிய  சிறந்த சித்தர் ஆவார்.இவர் பிராமண சட்டத் திற்கு எதிராக கொதித்து எழுந்தவர்.,சாதி அமைப்பிற்கும்,உருவ வழிபாட் டிற்கும்,ஆலய சடங்குக்கும் எதிராக சமுதாயப் புரட்சி செய்தவர்.இவரின் மூன்று பாடல்கள் கீழே தரப்பட் டுள்ளன.   

"பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!"[பாடல்:39 ] 

"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே"[பாடல்:47 ] 

"கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே."[பாடல்:34 ] 

ஒரு தனிப் பட்டவரை நல்ல மனிதனாக,ஆணவத்தை மையப்படுத்திய இனவாதி அற்றவனாக மாறுவதற்கே, ஆண்டவனோ அல்லது சமயமோ இருக்க வேண்டும்.ஒவ்வொரு கிரிஸ்துவரும் ,இஸ்லாமியரும்,இந்துவும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவும்,'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.நாம் எல்லோரும் ஒரே ஆண்டவைத் தான் நம்புகிறோம்.ஆக,அந்த தெய்வீக சக்தியை நினைவு கூறும் எமது வழி தான் வேறு பட்டது.ஆனால்,சமயத்தின் பெயரில்,ஆண்டவனின் பெயரில் சிந்தும் குருதியும்,வெறுப்பும் ,ஆணவமும் அங்கு எதோ சில ஓட்டைகள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.இதனால் மனித சமூகம் துன்பப் படுகிறது. 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' என்பதை உணர வேண்டும்.இந்த உலகம் எல்லை அற்றதாக, யுத்தம் அற்றதாக,சமயம் அற்றதாக இருப்பதாக கற்பனை செய்யுங்கள்.எல்லா அடிப்படையும் வீட்டிலேயே ஆரம்பிக்கின்றன.குடும்பம் ஒன்றாய் இருப்பின் அதுவே ஆரம்பம்.சகோதர,சகோதரிகள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையாக வாழ்ந்தால் அதுவே ஆரம்பம்.'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்'.நல்வாழ்வை தேடி இந்த உலகின் அழகான வாழ்வை ரசிப்போம்.நாம் சமயம்,சாதி,சமூகம் நாடு என்ற எல்லைகளை தாண்டுவோம்.இந்த உலகின் மைந்தராக வாழ்வோம்.தமிழரின் சைவ சித்தாந்தம் ஒரு வாழ்க்கை வழி.மக்களின் சுதந்திரம்,விடுதலை,உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும்,இயற்க்கைக்கு எதிராக  செயல்படுவதையும் இந்த தத்துவம் என்றும் ஆலோசனை கூறவில்லை.மூட நம்பிக்கையிற்கும்,கண்மூடித்தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை.கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை."அன்பே  சிவம்","தென்னாடுடைய  சிவனே  போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவ  போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது.அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு  இல்லை .இரண்டும் ஒன்றே! என்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்"என புறநானுறு முழங்கு கிறது.எல்லைகளை தாண்டி எல்லோரையும் அணைக்கிறது!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]

பகுதி:03  தொடரும் 

No comments:

Post a Comment