நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்


"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள் 
தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன் 
வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினாள்      
கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!"     

"மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம் 
மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம் 
அஞ்சா நெஞ்சத்தாள் எதோ உளறினாள் 
நஞ்சு கலந்து காதல் வீசினாள்!"   

"கொஞ்சி வஞ்சி இன்பத்தில் பூத்தாள்  
வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள் 
நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னாள் 
வஞ்சிவீரி மஞ்ஞை வீராப்பு பேசினாள்!"    

"நஞ்சு தந்த போதை மயக்கத்திலும் 
காஞ்சி வீரனாய் அவளை தடுத்தேன்
செஞ்ச தெல்லாம்  செய்தது போதும்  
கொஞ்சம் தனியாய் விடு என்றேன்!" 

"துஞ்சிய கண்கள் அகல விரிந்தன 
பஞ்சாய் மிதந்து மறைந்து விடடாள் 
வஞ்சியென நஞ்சமென வந்த கள்ளியை  
எஞ்சிய நேரத்தில் கனவில் கூடுகிறேன்!" 

-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment