14.06.2012.
அன்புள்ள அக்காவுக்கு,
நான் நலமுடையேன்அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.
உங்கள் கடிதம் கிடைத்தது.சுகம் அறிந்து மகிழ்ச்சி.
அக்கா, இங்கு
எம்மவர்களின் நிலைகளினைக் கேட்டு இருந்தீர்கள்.
அதனை எழுதுவதற்கு நீண்ட நாட்கள் தேவை.இருந்தாலும் சிலவற்றினைக் குறிப்பிடுகின்றேன்.
எமது தமிழ் உறவுகள் அடுத்தவர்களோடு கதைக்க ஆரம்பித்தால்
தங்கள் பழைய நிலைகளினை மறந்து தாம் தாயகத்திலே செல்வச் சீமான்களாக பரம்பரை
பரம்பரையாக வாழ்ந்தவர்களாகவே காட்டிக் கொள்ள முற்படுகிறார்கள். அதற்காக போட்டிக்கு தம் வசதியினை மிஞ்சிய பெரும் வீடுகளை வாங்கி ஒன்றுக்கு மூன்று
வேலையும் செய்துகொண்டு, வேண்டிய
வீட்டில் வாழவும் முடியாமல் பெற்ற பிள்ளைகளை சந்திக்கவும் முடியாமல் வெறும்
இயந்திரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். கனடா வந்து இருபது வருடங்களிற்கு மேலாகியும் இவர்கள்
இன்னும் வாழ சிந்திக்கவில்லை. ஆனால் இங்கே எப்படி வசதியாக வாழ்ந்தாலும் சிலரோ
பெரும் கடன் சுமையில் வாழ்வதாக நடித்து அடுத்தவர்களுக்கு உதவுவதிலிருந்து
தப்பித்துக்கொள்கிறார்கள். மேலை போகும்போது பணத்தினை கொண்டுபோகலாம் எனும் சிந்தனை
போலும்.
கொண்டாடங்களினை எடுத்துப் பார்த்தால் அதற்குள் புதிய புதிய
கேளிக்கைகளினை உருவாக்கி விழாக்குரிய நோக்கத்தினையே மறந்துவிட்டார்கள். அதற்காக
எவ்வளவுதான் விழாமண்டபத்தினர் பணத்தினை அறவிட்டாலும் அக்கொண்டாட்டத்தினை
அக்கேளிக்கைகளுடன் செய்துமுடிக்க
நம்மவர் தயாராக இருக்கின்றனர். இதன் பலனாக
குதிரையிலும், ஹெலிகொப்ரரிலும் அல்லது பல்லக்கிலும் மண மக்களையோ அல்லது நீராட்டுவிழாப் பெண்ணையோ கொண்டுவந்து இறக்குவதில் குறியாக
இருக்கிறார்கள். பலவருடங்களாக ஓடியோடி
உழைத்த பணத்தினை ஊரார் பார்த்திருக்க அதை ஒருநாளில் சிந்தி…….
மறுநாள்-கண்டபலன் என்னவென புலம்பும்
எம் உறவுகள் மத்தியில் கண்கெட்டபின் சூரிய
நமஸ்காரம் எதுக்கு என்று கேட்கும் நம்மவர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள்.
அக்கா, இன்னும் சில
சுவையான விடயங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன். இங்கு பலவிதமான தமிழ்க் கலை நிகழ்ச்சிகள்
இடம்பெறுவது வழக்கம். நிகழ்ச்சிகள்
குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கும் பழக்கம் தமிழரிடம் இல்லாததும் வழக்கமே!
இலவசமான கலைநிகழ்வுகளுக்கு நேரத்துடன் வரும் பார்வையாளர் சிலர் ஒவ்வொருவரும்
பத்துக் கதிரைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு அவர் வருவார் இவர் வருவார் என்று
சொல்லி மேலும் அங்கு வந்து இடமில்லாமல் அலையும் பார்வையாளர்களை கலை நிகழ்ச்சிகளை பார்க்கவிடாது திருப்பி
அனுப்பிவிடுவதுடன், தாமும் ஒன்று, இரண்டு
மணித்தியாலங்களில் எழுந்து சென்றிடுவார்கள்.
அதிலும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் பிள்ளைகளை, தம் பிள்ளைகளின்
நிகழ்ச்சி எத்தனையாவது என அறிந்து, அந்த நேரத்தில்
பிள்ளைகளைக் மண்டபத்திற்கு அழைத்து வந்து அப்பிள்ளையின் நிகழ்ச்சி முடிந்ததும்
அவசரமாக அப்பிள்ளைகளோடு அம்மண்டபத்தினை விட்டு வெளியேறும் புத்திசாலிப்
பெற்றோரையும் எமது சமுதாயத்தில்தான் பார்க்கிறோம். அடுத்து சிரிப்புக்குரிய விடயம் என்னவெனில்
கலைநிகழ்ச்சிகளின்போதும், பேச்சாளர்களின் தமிழ் பேச்சின்போதும்
அவற்றினைக் கவனியாது கதைத்துக்கொண்டிருக்கும் எமது மதிப்புக்குரிய மகா இரசிகர்கள்
பேச்சாளர் யாராவது ஆங்கிலத்தில் பேசஆரம்பித்தால் அனைவரும் அமைதியாகவும், ஆர்வமாகவும், கவனமாகவும் செவிமடுப்பதுபோல்
நடித்து, பேசிமுடிந்ததும் கரகோஷம் கொட்டுவாங்கள்
பாருங்கள் அதனை எழுத்தில் வடிக்க
முடியாது.
இதில் எம்மவரின் பிரச்சனை என்னவெனில் ஆங்கில அறிவு(ம்) தமக்கு இல்லை என
தனக்குப் பக்கத்தில் உள்ளவர் எண்ணிவிடக்கூடாதே என்பதேயாகும். இப்படி அர்த்தமற்ற பல பிரச்சனைகள் எம்மவர்
மத்தியில் நிரம்பி வழிகின்றன.
அக்கா,உங்கள்
சுகத்தையும் தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.
மீதி பின்னர் தொடரும்...
இப்படிக்கு
அன்பின் தம்பி
செ .ம.வேந்தன்
No comments:
Post a Comment