எதற்கும் துணிந்தவர்கள்! (ஆன்மிகம்)

உலகில், நல்லவர்கள், தீயவர்கள் என்ற இரு வகையினரும் உள்ளனர். பிறருக்கு, நன்மை செய்வதிலேயே நாட்டமுள்ளவர்களாக இருப்பர் நல்லவர்கள்; இவர்கள், பிறருக்கு சிறு உதவியாவது செய்ய விரும்புவர். பிறருக்கு என்ன துன்பம் உண்டாக்கலாம் என்றே தீயவர்கள் சிந்தித்துக் கொண்டிருப்பர்; ஒருவர், மற்றொருவருக்கு ஏதாவது நன்மை செய்வதாகத் தெரிந்தாலும், அதை கெடுப்பதற்கே முயற்சி செய்வர்.
இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார். இந்த நல்ல காரியம் நடக்கக் கூடாது…’ என்று, அவனுடைய தீய புத்திக்குத் தோன்றினால், பணம் செலவழித்தாவது அதை தடுத்து விடுவர். இந்த குணம் இன்று மட்டுமல்ல; அந்தக் காலத்தின் புராணக் கதைகளிலும் காணலாம்.

‘’பரீட்சித்து’’ மகாராஜாவுக்கு, ஒரு முனிவரின் சாபம் ஏற்பட்டது. “இன்று முதல், ஏழாவது நாள் தட்சகன் என்ற நாகம் கடித்து மரணம்!’ என்பது சாபம். இதையறிந்த ராஜா, ராஜ்ஜியத்தை விட்டு, கங்கை கரைக்கு வந்து புண்ணியம் சேர்க்க, பாகவத புராணம் கேட்டான்.  
சாபத்தின்படி, ராஜாவை கொத்திக் கொல்ல காத்திருந்தது தட்சகன் என்ற நாகம். இந்த விபரமறிந்த காசியபர் என்ற முனிவர், ராஜாவைக் காப்பாற்ற வந்து கொண்டிருந்தார். இவருக்கு எந்தவிதமான விஷத்தையும் இறக்கிவிடக் கூடிய மந்திரம் தெரியும்.அதனால், ராஜாவை காப்பாற்றி விடவேண்டும் என்று வந்து கொண்டிருந்தார்.
இவரை பார்த்து விட்டான் தட்சகன். அவரைப் பின் தொடர்ந்து வந்து, “ஓய்பிராமணரே! நீர் யார், எங்கே போகிறீர்?’ என்று கேட்டான். காசியபரும், “ராஜாவை, தட்சகன் கடிக்கப் போகிறானாம். அப்படி நடந்தால், அந்த விஷத்தை என் மந்திர சக்தியால் முறித்து, ராஜாவை காப்பாற்றப் போகிறேன்…’ என்றார்.
 “ஓய், பிராமணரேநீர் ராஜாவின் விஷத்தை இறக்கினால் என்ன கிடைக்கும்?’ என்று கேட்டான்.
நிறைய பொன்னும், பொருளும் கிடைக்கும்!’ என்றார் காசியபர். “சரி! அப்படியானால் அதைவிட பத்து மடங்கு அதிகமாக நான் பொன்னும், பொருளும் உம்மால் சுமக்க முடியாத அளவுக்கு தருகிறேன்…’ என்றான் தட்சகன்.
அதன்படியே அவருக்கு பொன்னும், பொருளும் கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டு, சாபத்தின்படி ‘’பரீட்சித்து’’ மன்னனை கடித்து விட்டான் தட்சகன். பரீட்சித்தும் வைகுண்டம் சேர்ந்தார் என்பது சரித்திரம்.

தங்கள் தீய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள எது வேண்டுமானாலும் செய்வர் துஷ்டர்கள்; எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பர். பிறர் கெட்டுப் போவதில் இவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்! இன்றும் சிலர் அப்படியே இருக்கின் றனர். இது போன்ற துர் குணம் இல்லா மல், பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நற் குணத்துடன் நாம் இருக்க வேண்டும்.
                                                                     

No comments:

Post a Comment