நெருக்கடியில் தமிழ் திரையுலகம்


இந்திய சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவுக்கு சிறப்பான இடம் உண்டு. முன்பெல்லாம் நடிகர்–நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை கொடுத்தனர். முதலாளி என்று அவர்களை அழைத்து பெருமைப்படுத்தினார்கள். அந்தக்காலத்திலும் சினிமாக்கள் வெற்றி, தோல்வியை கண்டு இருக்கின்றன. நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களுக்கு அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்து தூக்கி விட்ட நடிகர்கள் இருந்து இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து திரைப்பட தொழிலை பாதுகாத்தனர். ஆனால் இன்றைய சினிமா உலகம் அப்படி இல்லை. நீயா நானா தகராறில் மல்லுக்கட்டி நிற்கிறது. 

ஒற்றுமை, நல்லுறவு, இணக்கம், மற்றவர்கள் நலனில் அக்கறை எடுத்தல் போன்றவை குறைகிறது. 

தயாரிப்பு செலவு அதிகரிப்பு, நடிகர்–நடிகை சம்பள உயர்வு, புதிய படங்களுக்கும் நடிகர்களுக்கும் தடைபோடுதல், தியேட்டர்களில் படங்களுக்கு ரெட், தியேட்டர்களுக்கு ரெட் என்று அநியாயத்துக்கு சச்சரவுகளில் சிக்கி அல்லாடுகிறது. 

நடிகர்களில் சிலர் ஒருவரை ஒருவர் கேவலமாக விமர்சித்து சண்டை போடுகிறார்கள், திரையுலகினர் வீடுகளில் முற்றுகை போராட்டங்கள், திருட்டு வி.சி.டி.க்கள், படம் வெளியான முதல் நாளிலேயே வெளியிடும் திருட்டு இணையதளங்கள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளால் திரையுலகம் நிலை குலைந்து நிற்கிறது.

 மாறிய ரசிகர்கள்

இன்றைய ரசிகர்களின் ரசனைகள் மாறி விட்டன. கோடிக்கணக்கில் செலவு, பிரமாண்டம், பெரிய நடிகர்கள் என்பதையெல்லாம் ஒதுக்கி விட்டு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடுகிறார்கள். 

இதனால் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்கள் தோல்வி கண்டு நிற்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் சாதாரண நடிகர்களை வைத்து படம் எடுக்கும் புதுமுக இயக்குனர்கள் வெற்றிகளை குவிக்கிறார்கள். தயாரிப்பு செலவுகள் திட்டமிடப்படுவது இல்லை. வருமானத்துக்கு மிஞ்சிய செலவு நடக்கிறது.
‘‘நடிகர்–நடிகைகளுக்கு சம்பள கட்டுப்பாடுகள் இல்லாதது குறை. தயாரிப்பாளர்களே அவர்களின் சம்பளத்தை படத்துக்கு படம் போட்டி போட்டு ஏற்றி விடுவது பெரிய அவலம்.
கதை பஞ்சமும் சினிமா வளர்ச்சியில் முட்டுக்கட்டையாய் நிற்கிறது. 
முந்தைய காலங்களில் ஒவ்வொரு பட கம்பெனியும் கதை இலாகா என்று வைத்து சிறந்த திரைக்கதைகளை உருவாக்கியது. இப்போது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்து வேலைகளையும் டைரக்டர் ஒருவரே தலையில் போட்டுக்கொள்கிறார். இதனால் ஒரு படத்திலேயே டைரக்டர்கள் பலர் காணாமல் போய் இருக்கின்றனர்.
தமிழில் வெற்றி பெற்ற படங்கள் முன்பெல்லாம் ஏழெட்டு மாதங்கள், ஒரு வருடம் என்று ஓடின. தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படம் ஒரே தியேட்டரில் மூன்று தீபாவளிக்கு ஓடிய வரலாறு உண்டு. ஆனால் இன்று 3 நாட்கள் ஓடினாலே வெற்றிப் படம் என்கின்றனர்.
மால் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்கள் டிக்கெட் விலை, திண்பண்டங்கள் விலை, இரு சக்கர வாகனம் மற்றும் கார்களுக்கான கட்டணத்தை கேட்டு மயக்கம் போடும் நிலையே இருக்கிறது.
இந்த நெருக்கடிகளுக்கு சம்பந்தப்படடவர்கள் தீர்வு தேடி விரையும் வரை தமிழ் சினிமா வீழ்ச்சி தவிர்க்க முடியாதது.
                                                                                             

0 comments:

Post a Comment