பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம்"[பகுதி:05OF06]

பகுதி-05:"தாவரங்கள்" 
[Science in the Ancient Tamil Poetries  ]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]


தாவரங்களுக்கு உயிர் உணர்ச்சி உண்டு: 

நற்றிணை 172:

"விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

''நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்'' என்று,

5

அன்னை கூறினள், புன்னையது நலனே-

அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!-நீ நல்கின்,
10
இறைபடு நீழல் பிறவுமார் உளவே."

விளக்கம் :
சின்ன வயதில் நாங்கள் தோழிகளோடு சேர்ந்து மணலில் விளையாடும்போது அங்கே ஒரு புன்னை விதையைத் தவறவிட்டோம். அது தானாக முளைத்துச் செடியாக மாறியது.

அதன்பிறகு, நாங்கள் அந்தச் செடிக்குத் தேன் கலந்த இனிப்பான பாலை ஊற்றி வளர்த்தோம். இப்போது அது வளர்ந்து பெரிய மரமாகிவிட்டது.

இதைப் பார்த்த எங்களுடைய தாய்க்குச் சந்தோஷம். ‘இந்த மரம் உங்களைவிட அழகானது’ என்று புகழ்ந்து பேசினாள். ‘நீங்கள் இருவரும் இந்த மரத்தை வளர்த்ததால், இது உங்களுடைய தங்கை’ என்றாள்.

நேற்றைக்கு அந்தப் புன்னை மரத்தின் கீழேதான், நீயும் உன் காதலியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தீர்கள். உன்னுடைய காதல் பேச்சையெல்லாம் தங்கை கேட்கிறாளே என்று உன் காதலிக்கு வெட்கமாகிவிட்டது.

ஆகவே, இனிமேல் இந்த மரநிழலில் உட்காராதீர்கள். நீங்கள் பேசவும் பழகவும்தான் இங்கே வேறு பல மரங்கள், நிழல்கள் இருக்கிறதே!

ஆம் ,இப்பாடல் வழியாக  சங்க காலத்தில் மரங்களையும் உறவாக, உயிராக மதித்தமை வெளிப்படையாக நாம் அறியமுடிகிறது. 
[தொடரும்]

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉
Theebam.com: பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம் [01/06]:

1 comment:

  1. காலத்தின் தேவையுடனான ஆய்வு.நன்றிகள்

    ReplyDelete