கடவுள் இருக்கிறார் என்று யாரோ சொன்னதற்க்காக நம்புவதோ, கடவுள் இல்லை என்று யாரோ சொன்னதற்க்காக மறுதலிப்பதோ எப்படி புத்திசாலித்தனம் ஆகும்?
கடவுளை நம்புவதும் நம்பாததும் கடவுளின் பிரச்சனை இல்லை அது முழுக்க முழுக்க உங்கள் பிரச்சனை.
சிவன் வந்தாரா, ஜீஸஸ் இருந்தாரா, நபிகள் வந்தாரா என்பதா பிரச்சனை?
உங்கள் அனுபவம் என்ன?
யூதர்கள் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள். அவர்களைப் பற்றி ஒரு வேடிக்கைக் கதை.....
யூதர்களின் தலைவரான ஜோஷ்வா கோல்டுபெர்க் வருடத்திற்கொரு தடவை சொர்கத்திற்குப் போய் கடவுளுடன் அமர்ந்து விருந்து உண்ணும் உரிமை பெற்றிருந்தான்.
அப்படி ஒருமுறை கடவுளுடன் விருந்துக்கு அமர்ந்திருந்த நேரம்.... வருடா வருடம் மாற்றமில்லாமல் வறட்டு ரொட்டிகள் தான் பரிமாரப்படுவது தான் வழக்கம்.
'கடவுளே ஒரு சந்தேகம் என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது' என்று கேட்டு விட்டு ரொட்டியை கஷ்டப்பட்டு மென்றான் ஜோஷ்வா.
'கேள்,மகனே!'
'உங்கள் சாம்ரஜ்ஜியத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் நாங்கள் மட்டும் தானா? வேறு யாராவது உண்டா?' என்று அடுத்த ரொட்டித் துண்டை விழுங்கித் தண்ணீரைத் தொண்டையில் சரித்துக் கொண்டான்.
'சந்தேகமே வேண்டாம். வேறு யாருக்கும் அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் தான் உன்னை மட்டும் விருந்துக்கு அழைத்தேன்...'
ஜோஷ்வா கையில் எடுத்த ரொட்டித்துண்டை கீழே போட்டுவிட்டு எழுந்து, 'எத்தனை நாட்களுக்கு எங்களுக்கே இந்த அவஸ்த்தை? வேறு யாரையாவது உங்களுக்கு நெருக்கமானவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாதா?' என்றான் கோபமாக.
இப்படிக் கடவுளுக்கு நெருக்கமானவர்களாக சொல்லிக் கொள்பவர்களுக்குத் தானே அதிக வேதனை?
இவர்கள் கடவுள் என்பதன் உன்னதத்தை புரிந்து கொள்ளவில்லை. கடவுளைப் பற்றிய உண்மையான அனுபவத்தை பெற்றதில்லை.
ஆனாலும் கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் இடைத்தரகர்களாக இருந்து ஆதாயம் தேட, இவர்கள் போடும் நாடகங்கள் சகிக்க முடியாதவை.
கடவுளை நீங்கள் முழுமையாக நம்பி வாழ்ந்திருக்கிறீர்களா?
சிலர் இருக்கிறார்கள்... நெருக்கமானவர்களுக்கு உடல்னிலை மோசமாக இருந்தால் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள்.
அப்படியும் அவர்கள் பிழைக்கவில்லை என்றால் 'கடவுள் என்பதெல்லாம் பொய்' என்று வீட்டில் இருக்கும் படங்களை எல்லாம் கழற்றி விட்டெறிவார்கள்.
தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று கேட்டு நடக்கவில்லை என்றால், கடவுளே இல்லை என்று சொல்வார்கள்.
வளர்க்கப்பட்ட விதத்திலும், விதைக்கப்பட்ட் விதத்திலும் தானே உங்களுக்கு கடவுளை நம்பத் தெரிந்திருக்கிறது?
கடவுள் இருக்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. இல்லை என்பது இன்னொரு நம்பிக்கை. இருக்கிறாரா? இல்லையா? என்பது உஙளுக்குத் தெரியாது என்பதே பட்டவர்த்தனமான உண்மை.
எனக்குத் தெரியாது என்று எப்பொது தைரியமாக ஒப்புக்கொள்கிறோமோ, அப்போது தானே எதைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்க்கான வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்!
வெறும் நம்பிக்கைகளை வைத்துப் பின்னப்படும் கற்பனைகளை எதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்?
கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும் பற்றி அறிந்துகொள்ளும் தாகம் உண்மையிலேயே உங்களுக்கு இருந்தால், மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததை குருட்டுத்தனமாக நம்புவதை முதலில் விட்டுவிடுங்கள்.
கடவுள் இருக்கிறாரா? என்று நீங்களே தேடுங்கள்,
உங்கள் தேடலை உங்களிடமே ஆரம்பியுங்கள்.
எல்லையற்ற கடவுள் என்றொருவன் எல்லா இடங்களிலும் இருப்பது உண்மையாக இருந்தால், அந்தத் தன்மை உங்களிலும் இருக்கவேண்டுமே?
உருவமாகத் தேடாமல் கடவுள் தன்மை என்பதை முதலில் உங்களில் தேடிப் பாருங்கள்.
உங்களுக்குள் கடவுளைக் கவனித்து அனுபவமாகப் பெற்றுவிட்டால். அப்புறம் அவன் எங்கும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம், கடவுள் இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம்.
ஒரு விசயத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்குப் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தத் தெரிந்திருந்தால், கடவுள் இல்லாமலும் சுகமாக வாழலாம்.
வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளாமல், மூடத்தனமாக வாழ்பவராக இருந்தால் பூஜை அறையில் எத்தனை கடவுள் படங்களைத் தொங்க விட்டிருந்தாலும் புண்ணியமில்லை......
வாழ்க வளமுடன்!
0 comments:
Post a Comment