மது போதைக்கு சில ஆண்கள் அடிமையாவது போல குடும்பப் பெண்கள் பலர்
சீரியல் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். பெரும்பாலான சீரியல்கள் பெண்களை உலக மகா வில்லிகளாகத்தான்
சித்தரிக்கின்றன. அதைத்தான் பெண்கள் ஒரேயடியாக ரசித்து மகிழ்கிறார்கள் என்பது வருந்ததக்கது.
இத்தகைய சீரியல்களில் வரும் வில்லிகளின் கொடூரத்தனங்களைப் பார்க்கும்
பெண்களுக்கு அது அவர்களின் ஆழ் மனதில் வேரூன்ற வாய்ப்பிருக்கிறது. அதே வேளையில் நல்ல
சீரியல்களைப் பார்த்து யாரும் திருந்தியதாக வரலாறில்லை.
கணவர், பிள்ளைகளை வேலைக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் அனுப்பிவிட்டு
நாள்முழுவதும் வீட்டு வேலைகளில் இருக்கும் குடும்பப் பெண்களைக் குறிவைத்துதான் இத்தகைய
தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இவை பெண்களை மிகவும் மலிவாகவும், மட்டமாகவும் அவர்கள் ஏதோ சதி
செய்வதற்காகவே பிறந்தவர்கள் போலவும் சித்தரிப்பது மிகவும் இழிவானதொரு செயலாகும். பாமரத்தனமான
குடும்ப பெண்கள் இந்த உண்மையினை உணர்வதில்லை. யார் என்ன சொன்னாலும் இந்த சீரியல் பார்க்கும்
மோகம் பெண்களிடம் குறையவில்லை என்பது உண்மை.
தொடர்ந்து நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதால் உடல் எடை அதிகரித்து
பல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை. இத்துடன் இத்தகைய நிகழ்ச்சிகளைப்
பார்ப்பவர்களின் உள்ளங்களிலும் கோளாறு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதை மறுக்க முடியாது.
தொலைக்காட்சிகளில் நல்ல பல ஆன்மிக நிகழ்ச்சிகள், சமையல் குறிப்புகள்,
ஆரோக்கியத்துக்கான டிப்ஸ்கள், உலக நடப்பை புரிந்துகொள்ள உதவும் செய்திகளும் ஒளிபரப்பாகின்றன.
இதையெல்லாம் பார்த்து பயனுறுவதற்குப் பதிலாக சீரியல்களை பார்ப்பதால் பயன் ஒன்றும் இல்லை.
நல்ல புத்தகங்களை படிக்கலாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலை
முடிந்த பின் வார இதழ்கள், மாத இதழ்கள், நாவல்கள், வரலாற்று புதினங்கள் போன்றவற்றை
படிப்பார்கள் இப்போது உள்ள பெண்கள் சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகளில் மூழ்கி விடுகிறார்கள்.
சிலர் விளையாட்டாக சொல்வது போல் பெண்கள் சீரியல்களில் வரும்
கதாபாத்திரங்களாகவே தம்மை கற்பனை செய்து கொள்வதும், குறிப்பிட்ட கதாபாத்திரத்தை ஆபத்தை
சந்திப்பது போல் முதல் நாள் தொடரை முடித்து, மறுநாள் அந்த தொடர் ஆரம்பிக்கும் வரை அந்த
பெண்ணுக்கு என்ன ஆயிற்றோ என தம் வீட்டு பெண்ணாக நினைத்து தேவையில்லாமல் பதறுவதும் மன
நோய்க்கு வழி செய்யும் விஷயங்களாகும்.
நன்றி – சுமன்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
0 comments:
Post a Comment