கல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி

ஆடிமாதம் முடிந்ததால் மீண்டும் தமிழர் மத்தியில் திருமண விழாக்கள் கனடாவில் களை கட்ட ஆரம்பித்தன. இன்றய திருமணவிழாக்கள் அந்தக் காலம்  போலில்லை என்று ஒவ்வொரு முறையும் நாம் திருமண மண்டபம்  நோக்கி செல்கையில் பாட்டி முணுமுணுக்க மறப்பதில்லை.
திருமண ஒழுங்குகள்,நடைமுறைகள் எல்லாம் அந்தக்காலத்தில் திருமணத்தினை நடாத்திவைக்கும் பெரியோர்களிடம் / பிராமணர்களிடம் கேட்டு முதலிலேயே அறிந்து வைத்துக்கொள்வார்களாம்.  ஆனால் இக்காலத்தில்  வீடியோ காரன் சொன்னபடியே கல்யாண வைபவங்கள் நடந்தேறுகின்றன என்பதில் பாட்டிக்கு  சற்று வருத்தம் என்பது பாட்டியின் புலம்பல்களிலிருந்து உணர்ந்திருக்கிறேன்.
அடிப்படைச் சம்பளத்தில் எங்களையள் வேலைசெய்தாலும் இந்த கல்யாணவீடு/சாமர்த்திய வீடு போன்ற விழாக்களுக்கு கடன்பட்டாவது அடுத்தவன் செய்ததிலும் பெரிதாக செலவழித்து செய்து ஊருக்கு தம்பலம் காட்டி  பெருமிதம் அடைபவர்கள் எங்கடையள் என்று பாட்டி கூறுவது அவ்வப்போது நான் கேட்டிருக்கிறேன்.
ஹெலிஹொப்டர்,லிமோ-கார்,குதிரை,பல்லக்கு,சிவப்பு கம்பளம்  என்று பல தரப்படட ஆடம்பர செலவுகள் வேற, மண்டபத்திலையும் புதுப்புது முறைகளும்,புரியாத மொழி  நடனங்களும்-எல்லாம் பாட்டிக்கு புதுமையாகவும் ,கேலியாகவும்  தென்பட்டன.
கல்யாண மண்டபம் அடைந்ததும் மாமா,மாமி  வீட்டில இருந்து அவர்களுடன் வந்த அண்ணாமலைத் தாத்தாவுடன் இணைந்து கொண்டார் பறுவதம்  பாட்டி. வழமையாக அவர்கள் பேசுவதை விடுப்பு பார்ப்பதில் எனக்கு ஒரு தனி இன்பம் ஆதலால் அவர்களுடனே நானும் அமர்ந்துகொண்டேன்.
திருமணமேடையினை பலவிதமான கமராக்கள் மறைத்து நிற்க எல்லோரும் ஊர் /  உலக விடுப்புக்கள்  பேசிக்கொண்டிருந்தனர்.  கமரா காரர்களின் மறைவில் நடந்த  திருமண வைபவம் அது  முடிவடைவதினை 'இனி நாம் உணவினை உண்ணலாம்' என்ற அறிவிப்பு தெளிவுபடுத்தியது.
''பாருங்கோ!,பாருங்கோ! காய்ஞ்ச மாடுகள் கம்பில விழுந்த மாதிரி!''
''என்ன  பறுவதம் மெல்லக் கதை.ஆரன் கேட்டாலும்...''
''கேட்டாத்தான் என்ன! என்ன சாப்பாட்டுக்கு வசதியில்லா ஊரிலையே வாழினம் . லைனிலை ஏன் இடிபடவேணும்? இது மட்டுமே, அங்கை பாருங்கோ....''
''ஏன் ,என்ன சொல்லு.''
''மேசையில 10 விதமான சாப்பாடு இருந்தா அவ்வளவும் எடுக்கவேணும் எண்டு ஆரன் சட்டம் போட்டவையே? தட்டிலே மலைபோல குவிச்சுக்கொண்டு வாறது .பிறகு பெருமளவை  விருப்பமில்லை எண்டு கழிச்சு விடுகிறது.அதை சாப்பாடு எடுக்கும் போது விருப்பமானதை மட்டும் எடுக்கலாமே! உலகத்தில எவ்வளவு சனம் சாப்பாடு இல்லாம செத்துக்கொண்டு இருக்கினம்.எவ்வளவு சாப்பாட்டை இங்கை அநியாயமாக்கினம். புத்தாடை  உடுத்துக்கொண்டு 2 இங்கிலீசும் கதைச்சா அது உண்மையான நாகரீகமல்ல.அதை செயலிலை எல்லோ  காடடவேணும்.''
பாட்டி சற்று ஆவேசமாகவே குசுகுசுத்துக்கொண்டார்.

''அதுக்கு நாங்கள் 2 பேர் விளங்கி என்ன பறுவதம் செய்யமுடியும்''

''கனடாவுக்கு வந்து உடுப்பும்,மொழியும் தான் மாறியது.ஆக்கள் மாறேல்லை.'' பாட்டியின் குமுறல் தொடர்ந்தது.

''சரி,விடு பறுவதம்'' என்றவாறே தாத்தா கதையினை வேறுபக்கம் திருப்பிக்கொண்டார்.

பாட்டியும் விட்ட பாடில்லை.அம்மா,அப்பாவுடன் காரில் வீடு நோக்கி திரும்பி வரும்போது அவர்களுடன் மீண்டும் அத்தலைப்பினை ஆரம்பித்துக் கொண்டார்.
 ஆஹா! எனக்கு மட்டும் அன்று second show.
[குறிப்பு: அண்மையில் ஒரு தமிழர் திருமண மண்டபத்தில் அவர்களால் அழைக்கப்பட்டு வந்திருந்த பாகிஸ்தானிய நண்பர் ஒருவர் கூறிய கருத்துக்கள் அடிப்படையில் மேற்படி ஆக்கம் அமைக்கப்பட்ட்து]
                                                              







5 comments:

  1. ஆஹா! எனக்கு மட்டும் அன்று second show.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. we never ever change our mind

    ReplyDelete
  4. அழகான உண்மையான தொகுப்பு

    ReplyDelete