"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:17

Funeral  procession
மரணம் ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது.காலகாலமாக ஒவ்வொரு முக்கிய சமயங்களும் தத்துவங்களும்,ஆன்மீக கருத்துகளும்,இந்த மர்மத்தை கண்டுபிடிக்க முயன்றன. ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்வை தொட்டு,முழு மானிட சாதியையும் "தவிர்க்கமுடியாத மாள்வு" என்ற ஒன்றின் கீழ் இது இணைத்தது.இங்கு பணக்காரனோ ஏழையோ ஒரே மாதிரியான முடிவை மரணத்தில் அடைகிறார்கள். கருப்பனோ வெள்ளையனோ இருவரும் எந்த வேறுபாடும் இன்றி பிணக்குழிக்குள் போகிறார்கள். பெருஞ் செல்வாக்கும் சக்திமிக்கவர்களும், எளிய அடக்கமுள்ளவர்களும் இந்த உலகத்தை கடைசியில் விட்டே போகிறார்கள்.மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கையை கொடுத்துள்ளது.இது,இந்த எண்ணம்,தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும்,மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதல் கொடுப்பதுடன்,ஆனால் மற்றவர்களுக்கு: "ஏன்,எதற்கு மரணம் இருக்கிறது?" "எல்லாம் வல்ல கடவுளால் மரணத்தை இல்லாமல் செய்ய முடியாதா?" "எல்லா உயிர்களும் இயற்கையாக ஏன் சதாகாலமும் வாழமுடியாது?" போன்ற கேள்விகளுடன் ஆச்சரியமடைய வைக்கிறது.

a prehistoric burial custom of Tamils
ஒரு இனத்தின் வரலாற்றுப் பதிவு இலக்கியம் ஆகும். இவ்விலக்கியம் அந்த இனத்தின் பண்பாடு, பழக்கவழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடி என்று கூறலாம். அவ்வகையில் அக்காலத்து மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை விளக்கும் பெட்டகமாக சங்க இலக்கியத்தினைக் குறிப்பிடலாம்.இதில் பல வரலாற்றுச் செய்திகளும் வாழ்வியல் செய்திகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இம்மை,மறுமை போன்ற எண்ணங்களை சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். இங்கு சங்க கால மகளிர் இம்மை மட்டுமின்றி மறுமையிலும்,அதாவது அடுத்த பிறவியிலும் தத்தம் கணவருடனேயே உடனுறைந்து வாழ விரும்பினர் என்ற மனநிலையை குறுந்தொகை-49 போன்றவற்றால் காண்கிறோம்.

"அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே." (அம்மூவனார்,குறுந்தொகை-49.)

காண்பதற்கு அணிலின் பல்லினை ஒத்திருக்கின்ற தாது முதிர்ந்த முள்ளிச் செடி இருக்கின்ற நிலத்தினை உடையவனும் நீலமணியின் நிறத்தினை ஒத்திருக்கின்ற கடல்நீரினைக் கொண்ட கடற்கரைக்கு உரிமையுடையவனுமாகிய தலைவனே! இந்த பிறவி போய்,மறுபிறவி வந்தாலும்,நீயே என் கணவராக வர வேண்டும்,நானே,உன் மனதில் இருப்பவளே என்கிறது இந்த பாடல்.

Tenth century Hero Stone
மேலும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில்,ஆனால் குறிப்பாக தமிழகத்தில் மண் பானையில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில்,இறந்தவரை அடக்கம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.அப்படியான பண்டைய பெரிய இடுகாடு ஒன்று தமிழகத்தில்,திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் காணலாம்.ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது அங்கு வழக்கமாக இருந்து உள்ளது.அது மட்டும் அல்ல,ஈமத் தாழியில் /முதுமக்கள் தாழியில் சிறு மண்பாத்திரத்தில் தானியம் உணவு முதலியன வைத்து அடக்கம் செய்வது பொதுவாக இருந்து உள்ளதும் தெரிய வருகிறது.இந்த பண்டைய பழக்கம்,ஆதி தமிழரிடம் மறுமை பற்றிய ஒரு வலுவான நம்பிக்கை இருந்ததை காட்டுகிறது.2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கப்பாடல்கள்-புறநானுறு 228,256 -போன்றவை,இதை மேலும் உறுதிபடுத்துகிறது.குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது..

"கலம் செய்கோவே கலம் செய்கோவே
....................................................................
........................................................ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை அயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியாப் பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே?"(புறநானுறு  228)
”கிள்ளிவளவன் பூத உடலை அடக்கம் செய்வதற்கு உன்னால்
cycle of life and death
தாழி செய்ய முடியும்.ஆனால்,அவன் புகழுடம்பு மிகப்பெரியது.அதை அடக்கம் செய்வதற்கு ஏற்ற பெரிய தாழியை உன்னால் செய்ய முடியுமா?” என்று குயவன் ஒருவனைப் பார்த்து ஐயூர் முடவனார் கேட்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.புறநானூறு 4 ,இறப்பின் தெய்வம்,கூற்றுவனை/காலனை கூறுகிறது.அதாவது,யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின.அந்த யானைகள் உயிரைக் கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளிக்கின்றன என்கிறது இந்த பாடல்.

"களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;"

அது மட்டும் அல்ல புறநானூறு 214 இல்,நல்வினைகள் செய்வதால் விண்ணுலகம் செல்லலாம்;விண்ணுலகத்தில் இன்பம் நுகர்வது மட்டு மல்லாமல்,வீடு பேறும் பெறலாம்;அத்தகைய வீடு பேறு பெற்றால் மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையை அடையலாம்.ஒருவேளை மாறி மாறி பிறவாமை என்னும் நிலை ஒன்று இல்லாவிட்டாலும், [மறு பிறப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்]நல்வினைகளைச் செய்பவர்கள் குறையற்ற உடலோடு வாழ்ந்து இமயமலையின் ஓங்கிய சிகரம் போல்,தம் புகழை நிறுவி இறக்கும் பெருமையை அடைவார்கள்” என்ற கருத்துகளை கோப்பெருஞ்சோழன் கூறுகிறான்.

"செய்குவம் கொல்லோ நல்வினை!எனவே
 ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
 நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
 யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
 குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
 செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
 செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
 செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
 மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்"

"பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்" என ஆதிரை பிச்சை இட்ட காதை:84-90/மணி மேகலையும்“உறங்குவது போலுந் சாக்காடுறங்கி விழிப்பது போலும் பிறப்பு” (குறள் - 339)என குறளும் சுட்டி காட்டுகின்றது.எனவே இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது.அதனால் அறம் செய்ய வேண்டும் என்பது அறிஞர்களின் தெளிந்த கருத்தாகும்.

cremation and Hindu God of death 
இராமாயணத்தில் ஒரு கட்டத்தில்,இராமனிடம் வந்து சேரச் சொல்லி விபீடணன் கும்பகர்ணனிடம் மன்றாடுகிறான். அது முடியாது என்று சொல்லி அதற்கான காரணங்களையும் அழகாகச்  "நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னை போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்;" என்று சொல்கிறான்.அதாவது,“நீரில் வரைந்த கோலம் போன்ற குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி, என்னை இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்த போர்க்கோலத்தில் அனுப்பி வைத்த நம் அண்ணனுக்காக உயிரைத் தராமல் நான் அந்தப்பக்கம் போக மாட்டேன் ” என்கின்றான். இங்கு கம்பராமாயணம்,நிலையாமையை மிக தெளிவாக "நீர்க்கோல வாழ்வை  நச்சி/7426"- என்று வர்ணிக்கிறது. நிலையாமை ஒன்றே நிலையான உண்மை என்று கௌதம புத்தர் கூறுகிறார். “தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்கிறார் சுந்தரர்.ஆக மரணம் என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு விடயம் [சம்பவம்].ஆனால் யாரும் அதிலிருந்து எப்பவும் தப்பிக்கவே முடியாது.அது மட்டும் அல்ல,புறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன் "சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;" என்று கூறுகிறான்.அதாவது சாதலும் புதி தன்று,கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான்.மேலும்  

"நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று."

என்று நாலடியார் 4 கூறுகிறது.வாழ்க்கையில் எதை


நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது.செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும்,அதை விரைந்து செம்மையாக முடியுங்கள்,மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்,வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும்.சுருக்கமாக,மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்கிறார். 

மாணிக்கவாசகர் கூறிய,“புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி..." என்பதில் இருந்தும் உலக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கின்றன என்ற கருத்தை அறிகிறோம்.எனினும் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார்,இறந்தவர் பின் பிறப்பதில்லை என அடித்து சொல்கிறார்.

"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா, 
இறந்தவர் பின் பிறப்பதில்லை,இல்லை,இல்லை இல்லையே!"

அப்பர் என அழைக்கப்பட்ட கி.பி ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுகிறார் "நாங்கள் நல்ல மனிடபிறவியை எடுத்துள்ளோம் .அதை நாம் மதிப்போம்" என்று . "பிறவி பாவமானது அல்ல"."இது கடவுளால் தந்த கொடை." "இந்த அருமையான மானிட பிறப்பை , நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.அதற்கு இந்த பிறவி தந்ததிற்கான[எடுத்ததிற்கான] ,அவரின் நோக்கத்தை நாம் அறியவேண்டும்" என்று மேலும் கூறுகிறார். மேலும் சித்தர்கள் "காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா  [பட்டினத்தார்]  என்றும் "வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என  பாடியிருக்கிறார்கள்.     



[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

Part/பகுதி 18 Will follow /தொடரும்  


1 comment: