"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:15




மரத்தின் கீழ் சிவன்
தென் இந்தியாவின் ஆரம்ப கால அல்லது தொடக்க கால தமிழர் பண்பாடு மற்றும் இலக்கிய மரபு,அதிகமாக சங்க இலக்கியத்துடன் தொடர்புடையது.பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து,செய்யுட்கள் இயற்றிய அவையைச் ‘புணர்கூட்டு’ [சங்கம்] என்று கூறினர்.தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு அது ஆகும் என சிறுபாணாற்றுப்படை,அடிகள் 761-763 இதை உறுதிப்படுத்துகிறது. சங்கம் என்பது கூட்டம்.பொதுமைப்பட்ட  எவற்றையும் செய்வதற்கு முன்,கூடிப் பேசி முடிவெடுத்தல் என்பது இனக்குழுத் தமிழரின் தொல்வழக்கம். அதனால் தான் செய்யுளைப்  கூடிப் பேசி ஒப்புக்கொள்வதை புணர்கூட்டு என சுட்டிக் காட்டினார். தமிழ்  நாட்டைத் தமிழர்களே ஆண்ட காலம் சங்ககாலம். அக்கால அரசில் தமிழொன்றே ஆட்சி மொழியாய் இருந்தது.இதை வரலாற்றாசிரியர்கள் பொற்காலம் என்றனர்.பரிபாடல்,திரு முருகாற்றுப் படை தவிர,இது ஒரு ஆண்டவனை துதி பாடும் மத பாடல்கள் அல்ல.ஆனால்,சங்க கால மதத்தை,முக்கிய தொன்மையான  அல்லது தொடக்க காலத்தைச் சேர்ந்த கடவுள்களையும் மற்றும் வழிபாட்டு அமைப்புகளையும் அல்லது முறைகளையும் இது எமக்கு தருகிறது.இதை மிகவும் நுணுக்கமாக ஆய்வு செய்யும் போது,அங்கு பல பாடல்கள் மத சடங்குகளுடன் அல்லது குறிப்பிட்ட சில வழிபாட்டு மரபின் மூலத்துடன்
வெறியாட்டு,தாயத்து
தொடர்புடையது தெரிய வருகிறது.அங்கு ஒரு புனிதம் என்ற எண்ணமும் புலப்படுகிறது.பண்டைய காலத்தை சேர்ந்த முக்கிய மூன்று தெய்வங்களாக முருகன்,திருமால் மற்றும் கொற்றவையை சங்க பாடல்களில் காண முடிகிறது.மேலும் சங்க கால மக்கள் பேய் ஆவி ஆகிய வற்றிலும் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.சிலப்பதிகாரத்தில் இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகளாக மோகினி,இடாகினிப் பேய்,சதுக்க பூதம் என்றெல்லாம் பல நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.உதாரணமாக,“கழல்கண் கூளி”,எனவும்  ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’ எனவும் பேயைப் பற்றிக் கூறுகிறது சிலம்பு.மேலும் ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம் எனக் காவல் தெய்வக் கோவில்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது.ஐயை கோட்டம் என கொற்றவை வழிபாடு பற்றியும்,சாமியாடுதல் பற்றியும் இளங்கோ வடிகள் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தெய்வம் ஏறப்பெற்ற சாலினி கண்ணகியைப் புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி மிகச் சிறப்பானது. பொதுவாக பேய் மரத்தில்,போர்க்களத்தில்,எரியும் சுடுகாட்டில் இருப்பதாக பலர் நம்புகிறார்கள்.சிலப்பதிகாரம் மதுரை,புகார் காவல் தெய்வங்களையும் குறிப்பிடுகிறது.அவர்கள் கிராம தேவதைகளையும் நம்பினர்.சங்க இலக்கியத்தில் பிந்திய நூலான

மணிமேகலையிலேயே- 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் [27-86/87]- என்ற வரிகளில் "சைவவாதி"[சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன்] என்ற சொல்லை காண்கிறோம்.என்றாலும் சிவனை ஒரு தெய்வமாக மற்ற சங்க நூல்களில் கூறாவிட்டாலும் அவரின் பண்புகளை,குறிப்புகளை குறிப்பிட்டுள்ளார்கள்.உதாரணமாக,'ஈர்ஞ்சடை யந்தணன்' என்று கலித்தொகை,38 இலும்,'முக்கண்ணான் மூவெயிலும்' என கலித்தொகை,2 இலும்,'பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணிமிடற் றொருவன்[நீலமணி போலும் கரிய கழுத்தினை] போல' என புறம்:91 இலும், 'நன்றாய்ந்த நீணிமிர்சடை முது முதல்வன்[முழுமுதற் கடவுள்]' என புறம் 166 இலும்,'நீலநாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்[ஆலமர் செல்வன்]' என சிறுபாணாற்றுப்படை, 96-97 இலும் குறிக்கப்படுகிறார்.ஆதி காலத்தில் மக்கள் பயத்தின் காரணமாக,விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்ப, இரவு நேரத்தில் மரங்களிலேயே குடியிருந்தனர்.மரங்களில் பெருமரங்களே முதல் மனிதர்கள் குடியிருந்த இடங்களாதலால்,அப்பெருமரங்க ளிலேயே சிவனும் குடியிருப்பதாக எண்ணினர்.ஆலமரம் மற்ற மரங்களைக் காட்டிலும் பெரிதாகவும்,விரிந்து படர்ந்து விழுதுகளை இறக்கி நிலைப்பெற்றிருந்ததால்,முதல் மனிதர்கள் தாங்கள் குடியிருந்த ஆலமரதிலேயே சிவனும் குடியிருப்பதாக எண்ணி ஆலமரத்தையே சிவனுக்குரிய மரமாக கருதினர்."ஆலமர் செல்வன்" என்பதில் இருந்து மனித இனத்தின் முதல் கடவுள் சிவனே என்பது புலனாகிறது.முக்கண்ணனாகிய சிவனது கோயில் ஒன்றும் "முக்கட் செல்வர் நகர்" எனப் புறநானூற்றின் 6ம் பாடல் குறிக்கிறது.ஆகவே சைவ சமயம்,பெயர்
வேலன் 
குறிப்பிடப்படாமல், கொள்கையளவில் பண்டைய காலத்தில் தமிழர் மத்தியில் இருந்துள்ளது.அத்துடன்,சங்க கால மக்கள் கனவு,கிரகங்கள் போன்றவை மனித வாழ்வில் செல்வாக்கு செலுத்துகின்றன எனவும் நம்பினர்.மேலும் சில வற்றை,வரும் பேரிடரை அல்லது ஒரு செய்தியை முன் காட்டுகிற குறியாக கருதினர்.உதாரணமாக,காக்கையின் கரைவு,விருந்தினர் வருவதை தெரிவிப்பதாக கருதினர்.அங்கு ஆலயத்தில் கடவுள்கள் வழிபடப் படடனர்.சக்கரவாளக் கோட்டத்தில் தூணில் வாழும் காவல் தெய்வம் பற்றி மணிமேகலை கூறுகிறது.என்றாலும் பொதுவாக, இன்றுவரை தெய்வம் மரத்தின் கீழ் வைத்து வழிபடப்படுகிறது.பிணங்களைச் எரித்து அல்லது அதை வாளா இட்டும்[பிணத்தை அங்கு அழுகிக் கெட அல்லது கழுகுகள் மற்றும் நரிகளுக்கு எறிந்து விட்டு போதல்],அங்கு அடக்கம் செய்வதற்காக பிரத்யேகமாக தோண்டப்பட்ட குழியில் பிணத்தை இட்டும் சங்க கால தமிழர்கள் அடக்கம் செய்தார்கள்.மேலும் சிலவேளை தாழ்ந்த இடங்களில் அடைத்து வைத்தும் அல்லது  தாழியில் வைத்து மூடியும்[பிணத்தை நறுமணமூட்டி இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பானையுள் வைத்து அதன் வாயை மூடியும்] பல்வேறுவகையாக இறுதிச் சடங்குகள் செய்தார்கள்.உதாரணமாக மணிமேகலை(6-11-66-69) இதை ஒரு வரிசை கிரமத்தில்,கீழ் சுட்டிக்காட்டியவாறு,சொல்கிறது. 


"சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் றரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்" 

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கம் இலக்கியம்,தமிழரின் செல்வாக்கு நிறைந்த புகழ் பெற்ற தெய்வம்,முருகன் கூட,சுமேரியர்கள் போலவே,   மலையில்,உயரத்தில் வாழ்வதாகவும்,மக்கள் தமது நோயை,குறைகளை போக்க அவருக்கு காணிக்கை,படையல் செய்வதாகவும் கூறுகிறது.அப்படியான பாடல் ஒன்றை,அகநானூறு 22-கிழே தருகிறோம்.


"அணங்குடை நெடு வரை உச்சியின் இழி தரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
...............................................................
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
வள நகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகு ஆற்றுப் படுத்த....................................." [அகநானூறு 22]
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள்
தெய்வமுடைய நீண்ட மலையுச்சியினின்று விழும் கூட்டமாய அருவிகளையுடைய காடு பொருந்திய நாட்டையுடைய நம் தலைவனது .......... ...வேலனும் (மலை நாட்டுப் பூசாரி) வெறியாடும் களத்தை நன்கு அமைத்து முருகனுடைய வேலுக்கு மாலை சூடினான்.சத்தமாகப் பாடிப் பலி கொடுத்தான்.அழகிய சிவந்த தினையினை குருதியுடன் கலந்து தூவி முருகனை வருமாறு அழைத்தான் என்கிறது.அது மட்டும் அல்ல  "தாயத்து" பற்றிய செய்தியையும் சங்க பாடல்களில் காணக்கூடியதாக உள்ளது.தாயத்து ஒரு காலத்தில் தாலி அல்லது ஐம்படைதாலி  என்று அழைக்கப் பட்டது.சிறுவர்களுக்கும் மணமான பெண்ணுக்கும் தாலி கொடுக்கப்பட்டது.குறிஞ்சி நிலக் குறவர்கள் மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் ஆகியவற்றால் ஆன தாலிகளை அணிந்தனர்.பெண்கள் மங்களச் சின்னங்கள் அல்லது கடவுளரின் திருவுருவங்கள் பொறித்த தாலிகளை அணிந்தனர்.பழைய காலத்தில் அணிந்த தாயத்துக்களே இப்படி தாலி போன்ற வடிவங்களில் இன்று பயன்படுத்தப்படுகின்றன என எண்கிறேன். உதாரணமாக அகநானூறு 54:-'பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி வருகுவை ஆயின் தருகு வென் பால்.' என கூறுகிறது.மற்றும் புறநானூறு 77 உம் :- 'தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு அயினியும் இன்று அயின்றனே' ,என்று இதை உறுதிப்படுத்துகிறது.மேலும் சங்கத் தமிழ் பெண்கள் மணம் முடிக்கும் போது தாயத்து[தாலி] அணிந்தனர் என்பதை புறநானுறும் 127 மற்றும் சிலப்பதிகாரமும்[1-47 & 4-50] உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக,சங்கப் புலவன் முடமோசியார் தனது  புறம் 127  பாடலில், ‘’ உன் மனைவி கழுத்தில் உள்ள தாலி ( "ஈகை அரிய இழையணி மகளிரொடு" ) மட்டுமே கொடுக்க இயலாது.மற்ற எல்லாவற்றையும் நீ பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய் என்கிறார்.அத்துடன்,ஐங்குறுநூறு 247,நோய்க்கி மருந்தாக தாயத்து கட்டுவதை எடுத்துக் காட்டுகிறது.காதல் வசப்பட்டு வாடும் மங்கையவள் உடல் உருகி,நிறம் மாறி தவிக்கும் நிலை கண்டு,அவளின் தாய் குறிஞ்சி நிலத்தெய்வமான முருகனின் கோபத்தால் இந்த நிலையோ என எண்ணி விடுகின்றாள்.அதற்குப் பரிகாரமாக சடங்குகள் செய்து தாயத்து கட்டுவிக்கிறாள் என்கிறது ஐங்குறுநூறு 247. 

"அன்னை தந்தது ஆகுவது அறிவென்
 பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி
 முருகென மொழியும் ஆயின்
 அரு வரை நாடன் பெயர் கொலோ அதுவே."

உன்னுடைய அழகிய இல்லத்தில் புது மணல் பரப்பி,உன் கையில் தாயத்தைக்கட்டி,முருகனின் கோபத்தை தணிப்பதற்கான சடங்குகளைச் செய்ய உன் தாய் ஏன் வேலனை அழைத்தாள் என்று புரிகின்றது.ஒரு வேளை உன்னுடைய மலை நாட்டுக் காதலனின் பெயர் முருகனோ? என்கிறது இந்த பாடல்.பண்டைய மெசொப்பொத்தேமியாவிலும்,நோயில் இருந்து தம்மை விடுவிக்க,தாயத்தாக,கல் வைத்த கழுத்து மாலை அணிந்தனர். அப்படியான ஒன்று ஓமானில்[Dibba,Oman] கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அதில் உள்ள கண் வடிவ கல்லில் 'டே' 'ஜோ' 'ல'['De' 'Jo' 'La' ] என குறிக்கப் பட்டுள்ளது. 

மேலும் சங்க தமிழர்களிடம் காணப்பட்ட அல்லது எதிர்பார்க்கப்பட்ட சமூகம்,பண்பாடு[கலாச்சாரம்],சமயம்,தத்துவம் சார்ந்த முக்கிய   அம்சங்களை புறநானுறு 192 மிக அழகாக எடுத்துரைக்கிறது.

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,  
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்    
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."-புறநானூறு 192

எல்லா ஊரும் எம் ஊர்,எல்லா மக்களும் எம் உறவினரே என உலகப் பொது மானிடக் கருத்தை,சமத்துவத்தின் ஆணிவேரான பிரேரணையை முன்வைக்கிறது.அதாவது யாதும் ஊரே என்பது பொதுவுடைமைக் கருத்து,யாவரும் கேளிர் என்பது சமதர்மக் கருத்து.இதைவிட வேறு என்ன சொல்லிவிட முடியும் ஒருவனால்? ஆனால் இன்னும் சொல்லப்பட்டிருக்கிறது அந்தப் பாடலில்.ஒருவனுக்கு நேரும் தீங்கோ,நன்மையோ பிறர் தந்து வந்தது அன்று.ஒருவன் வருந்துவதும்,வருத்தம் நீங்கித் தணிவதும் அப்படிப்பட்டதுதான்.நமக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரணமும் பொறுப்புமாவோம்.தினை விதைத்தவன் தினை அறுப்பான்,வினை விதைத்தவன் வினை அறுப்பான்.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.புறக்காரணிகளை குறைகூறுவதில் பயனில்லை.நாம் என்ன செய்தோமோ,அதைப்போறுத்தே இன்பமோ,துன்பமோ நம்மை சேரும், அல்லது அற்றுப்போகும்.சாதல் புதுமை யில்லை;வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை.வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை. எனவே துன்பம் வரும்போது வருந்துவதோ,இன்பம் வரும்போது மகிழ்வதோ இங்கில்லை.வானம் மின்னி மழை பொழிந்து கல்லை உருட்டிக் கொண்டு இரைச்சலுடன் பாயும் வெள்ளத்தில் மிதந்தோடும் தெப்பம் போல நம் உயிர் மிதந்து ஓடும் என்பதையும் நாம் மிக நன்றாக அறிவோம். எனவே பெருமைமிக்கவர்களாகவுள்ள பெரியோரை பார்த்து நாம் வியப்பதுவுமில்லை,அதைவிட,சிறியோரைப்பார்த்து நாம் இகழ்வதுமில்லை. எல்லாமே ஊர்தான்,எல்லோருமே நமக்கு உறவினர்தான்! இப்படித்தான் தமிழர்கள் அன்று வாழ்ந்தார்கள்!!

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 16 தொடரும்..........




,
   

0 comments:

Post a Comment