தமிழரின் வாழ்வில் வெற்றிலை, பாக்கு!

பழங்காலத்திலிருந்து வெற்றிலை, பாக்கு தமிழர் பண்பாட்டோடு கலந்த பொருளாக இருந்துவருகிறது. தெய்வ வழிபாட்டிலும், திருமணம் முதலிய நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை, பாக்கு முக்கிய இடத்தைப் பெறுகிறது. வெற்றிலை, பாக்கு மகிழ்வுக்குரிய ஒன்றாக - இன்ப உணர்ச்சியைத் தூண்டும் ஒன்றாக தமிழரின் அகவாழ்வில் கலந்திருந்த வரலாறு அறியத்தக்க ஒன்றாகும்.

 "வெற்றிலை இந்தியாவின் பூர்வீக பயிர்வகை கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது மலேயா நாட்டிலிருந்து தமிழகம் வந்திருக்கலாம்' என்று வரலாற்றுப் பேராசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறியுள்ளார் (ஏண்ள்ற்ர்ழ்ஹ் ர்ச் ற்ட்ங் பஹம்ண்ப்ள்- ல்ஞ்.101). "வெற்றிலை, பாக்குப் போடும் பழக்கம் தமிழர்களிடையே சங்க காலத்துக்குப் பின் தோன்றியதாக இருக்கலாம்' என்று வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறியுள்ளார் (தென்னிந்திய வரலாறு, பக்.213). ஆனால், சங்க இலக்கியங்களில் வெற்றிலை, பாக்குப் போடுவது பற்றிய குறிப்புகள் நிறையக் காணப்படுகின்றன.

 பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சி வெற்றிலை சுண்ணாம்பு
விற்பவர்கள் மதுரை நகரில் இருந்தனர் என்பதை, ""நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்'' (401) என்று குறிப்பிடுகிறது. இதற்கு நச்சினார்க்கினியர் ""வளர்ந்த கொடியீன்ற வெற்றிலையினை உடையாரும், சங்கு சுடுதலால் உண்டான சுண்ணாம்பை உடையாரும்'' என்று உரை விளக்கம் தந்துள்ளார்.

 பண்டைத் தமிழகத்தில் அரசருடன் இருந்த ஒரு குழு "எண்பேராயம்' என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் குழுவில் வெற்றிலை, பாக்கு வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர். "எண்பேராயம்' என்பதற்கு விளக்கம் எழுதிய சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் ""சந்து பூக்கச் சாடை பாக்கிலை கஞ்சுக நெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்'' (இந்திர விழவூரெடுத்த காதை-157) என்று எண்வகை நபர்களைக் குறிப்பிடுகிறார். இதில், "பாக்கிலை' வைத்திருப்போரும் ஒருவர். இவரை "அடைப்பைக்காரன்' என்று குறிப்பிடுவர். இதிலிருந்து வெற்றிலை, பாக்கு தமிழர் வாழ்வில் எவ்வளவு முக்கிய பங்கு பெற்றிருந்தது என்பதை அறிகிறோம்.


வெற்றிலை, பாக்குப் போடுவது ஆண்-பெண் உறவில் இன்பத்தை மிகுவிக்கும் ஒன்றாக மிக நீண்ட காலமாகக் கருதப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் உணவு உண்டபின் கணவனுக்கு, மனைவி வெற்றிலை மடித்துக் கொடுக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தப் பழக்கம் தமிழர்களிடையே பழங்காலத்திலிருந்தே இருந்துள்ளது.

 கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்து புறஞ்சேரியில் மாதரி என்னும் இடையர் குலப் பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த இரவில் உணவு உண்டபின் கோவலனுக்கு, கண்ணகி வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுக்கிறாள். அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கின்ற கடைசிநாள் அதுதான். இதை இளங்கோவடிகள்,

 ""உண்டு இனி திருந்த உயர்பே ராளற்
 அம்மென் திரைலோடு அடைக்காயீத்த
 மையீரோதியை வருகெனப் பொருந்தி''
 (கொலைக்களக்காதை-54-56)

 என்று குறிப்பிடுகிறார். "திரையல்' என்பது வெற்றிலை, "அடைக்காய்' என்பது பாக்கு. அவர்கள் மகிழ்வாக இருந்தனர் என்பதைக் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.

 மணிமேகலையில், கச்சிமா நகர்புக்க காதையில் (241-43)

உணவளித்தபின் வெற்றிலை, பாக்குக் கொடுக்கப்பட்டது என்ற செய்தி பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. திருவாய்மொழியில் (6-7), ""உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்'' என்கிறார் நம்மாழ்வார்.

 சீவகசிந்தாமணியில், காவியத் தலைவன் சீவகன் விமலையாரிடம் புணர்ச்சி வேண்டுவதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக வெற்றிலை மடித்துக் கொடுப்பதற்காக அவளைத் தொட்டான் என்று கூறப்படுகிறது. ""பாசிலை சுருட்டி மைந்தன் கொடுகிய'' (பா-1987). இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ""வெற்றிலை மடித்துக் கொடுத்தற்கென்றது இடக்கர்'' என்று கூறுகிறார். நேரடியாகச் சொல்ல வேண்டிய செய்தி அநாகரிமாக இருக்கும் சமயங்களில் அதை மறைமுகமாகச் சொல்லும் முறையை தமிழ் இலக்கண நூல்கள் "இடக்கர்' எனக்கூறும்.

 கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அசோக வனத்தில் தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் சீதையின் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்யும் கம்பர், "ராமனுக்கு யார் வெற்றிலை, பாக்கு மடித்துக் கொடுப்பார்கள்' என்று தனது இயலாமையை எண்ணி, சீதை மனம் நொந்துபோவதாகக் கூறுகிறார்.

 ""அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும்'' (காட்சிப்படலம்-15)


ராமனைச் சேர்ந்து இன்பம் துய்க்கமுடியாத தனது நிலைமையை இச்செய்தி மறைமுகமாகவும் கூறுவதாக அமைகிறது. காவியப் புலவனின் சிறப்பு இதில்தான் அடங்கியுள்ளது. தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைச் சரியான முறையில் காவியத்திலே பயன்படுத்தியுள்ளார் கம்பர்.

 கலிங்கத்துப்பரணி போர்க்களக் காட்சியில் மிகுதியாக உண்டதால் உணவு செரிமானத்திற்காகப் பேய்கள் தாம்பூலம் போட்டுக்கொண்டன என்கிறார் செயங்கொண்டார். ""பெருக்கத் தின்றீர், தாம்பூலம் பிழைக்கச் செய்தீர்...(585)

 தமிழர் பண்பாட்டில் அகத்துறையில் வெற்றிலை, பாக்குப் பெற்றுள்ள இடம் பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது...

வெற்றிலையின் பயன்கள் 
வெற்றிலை வெப்பம் தரும்; உமிழ்நீர் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; காமத்தைத் தூண்டும்; நாடி நரம்பை உரமாக்கும்;நறுமணம் அளிக்கும்.

வெற்றிலைச் சாற்றுடன் பாலையும் கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும். குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் கஸ்தூரி, கோரோசனை ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக் கொடுக்கச் சளி, இருமல், மாந்தம், இழுப்பு குணமாகும். பல மருந்துகளுக்கு வெற்றிலை அனுபானமாகும் .
( உட்செல்லும் மருந்தோடு இதையும் உண்பதால் வீரியம் மிகும்)

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்கச் சிறிது வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.இது ஒரு சிறந்த கருத்தடை மருத்து. வெற்றிலை வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவேதான் இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கும்பகோணம் வெற்றிலையும், இசையும் பெயர் பெற்றவை .
நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும்.


அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம்
                              அதி பித்தம் இரண்டாவதூறு நீரே
கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
                              கனமதுர நான்காவதூறு மந்நீர்
மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி
                              வருநீர் களைச் சுகித்து
தடையுருப் பித்தமொடு மந்த நோயும் தளர்பாண்டு நோயும்
                              உண்டாம் தரம் சொன்னோம்.”
                                             ---   தேரையர்
இதே கருத்தை வள்ளல் பெருமானும் தமது வசனப்பகுதியில் கூறி இருக்கிறார் .

இரண்டு வெற்றிலையோடு ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி, தேங்காய்த் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு கால் லிட்டர் ஆகக் குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து  மூன்று வேளை உணவுக்கு முன்பு அருந்தினால் குணமாவதாகக் கூறப்படுகிறது.

உணவுக்குப்பின் வெற்றிலையை அளவாக  உபயோகிக்க உண்ட உணவு ஜீரணமாகும் .ஜப்பானிய டீ விருந்து  முறை போல் வெற்றிலை, பாக்கு,சுண்ணாம்பு  இவைகளைச் சேர்த்து  அந்தக்காலத்து மனிதர்கள் போடும் விதமே ஒரு தனியான கலையாகும்; இதை மிகவும் ரசித்துச் செய்வர்.

பின்புறம் இருக்கும் நரம்பை நீக்கிவிடவேண்டும்;அதில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.வெற்றிலை, பாக்குடன்  சேரும்போது சுண்ணாம்பு உண்ணத்தக்கதாக மாறிவிடுகிறது; உடலுக்குச் சுண்ணாம்பு சத்தும் கிடைத்து விடுகிறது . அந்தக்காலத்து பாட்டிகளுக்கு நாளுக்கு இரண்டு முறை பிரஷ் செய்யும் இந்தக்காலத்து நாகரிக மனிதரை விடப்பற்கள் வலுவாக இருந்தன.
....................................................................

0 comments:

Post a Comment