யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர் மீது குற்றம் சாட்டி, அதை ஊதி பெரிதுபடுத்தி இறுதியில் மனஉளைச்சலில் உழல்வது என்னவோ நாம்தான். இப்படியே குற்றம் சாட்டிப் பழகிவிட்ட நமக்கு உண்மையைப் பார்க்கும் துணிவிருக்கிறதா? சத்குரு சொல்லும் விளக்கம் இங்கே.
சத்குரு: நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போதும், கருணையோடு இருக்கும்போதும், தாராளமாக வழங்கும் மனநிலையில் இருக்கும்போதும், உங்கள் வாழ்க்கை அழகாக அமைகிறது. யாராவது குற்றம் செய்துவிட்டதாக நீங்கள் கருதும்போதோ, அந்த அழகு மறைந்து அசிங்கமாகிவிடுகிறது. உண்மையாகச் சொல்லுங்கள். நீங்கள் செய்திராத ஒன்றையா அவர் செய்துவிட்டார்?
நம் பிரச்சனை என்ன? நாம் ஒன்றைச் செய்தால், அதைப் பொருட்படுத்த மாட்டோம். வேறு யாரும் பொருட்படுத்தக்கூடாது என்றும் எதிர்பார்ப்போம். ஆனால், அதையே வேறொருவர் செய்தால் பெரிதுபடுத்துவோம். மேரி மேக்டலீன் பற்றி பிரபலமான கதை உங்களுக்குத் தெரியும். அவள் உடலை விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தாள். அவள் ஊருக்கு யேசு வந்தபோது, அவரைச் சந்திக்க விரும்பினாள். ஆனால், ‘இழிதொழிலில் ஈடுபட்டிருக்கும் என்னை உன்னதமான மனிதர் எப்படிச் சந்திப்பார்?’ என்று அவளுக்குள் ஒரு போராட்டம்.
அதிகமான கூட்டம் இல்லாதபோது, யேசுவை அவள் அண்டினாள். அவரைத் தீண்டும் தகுதி தனக்கு இல்லை என்று, அவர் உடைகளைப் பற்றிக் கொண்டு நின்றாள். “பாவிகளை நீங்கள் மன்னிப்பதாகச் சொல்கிறார்களே? என்னையும் மன்னிப்பீர்களா?” யேசு சொன்னார், “நீ ஏற்கெனவே மன்னிக்கப்பட்டுவிட்டாய்.” ‘பத்து வருடம் தலைகீழாக நின்று தவம் செய்’ என்று யேசு அவளுக்குப் பரிகாரம் எதையும் பரிந்துரைக்கவில்லை. தான் மன்னித்ததாகக்கூட சொல்லிக் கொள்ளவில்லை. அவள் நிலை மன்னிக்கப்பட்டுவிட்டது என்றார். குற்றம் என்று ஆத்மார்த்தமாக உணர்ந்த கணத்திலேயே அது மறைந்துவிடுகிறது. விழிப்புணர்வுடன் இயங்கினால், உங்களுக்கும், உங்களுடைய இறந்தகாலத்துக்கும் இடையே தானாகவே இடைவெளி விழுகிறது. குற்ற உணர்வு ஏதும் இல்லாது போகிறது. விழிப்புணர்வுடன் இல்லாதபோதுதான், இறந்தகாலத்தையும் சுமந்து கொண்டு நடக்கிறீர்கள். ஓர் அரசன், தன் நாட்டின் மீது பக்கத்து நாட்டு மன்னன் போர் தொடுக்கப் போகிறான் என்று ஒற்றன் மூலம் அறிந்தான். போரில் வெற்றிக் கொள்ள முடியாது என்பதால், உடனடியாக அமைதி உடன்படிக்கை ஒன்றைத் தயார் செய்தான். அந்நாட்டு மன்னனிடம் கொடுக்கச் சொல்லி தன் தூதுவனை அனுப்பி வைத்தான். தூதுவன் தன் நண்பர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தான். அவன் செல்லும் வழியில் சில ஊர்களைக் கடந்து போக வேண்டியிருந்தது. அங்கிருக்கும் உறவினர்களிடம் ஒப்படைக்கச் சொல்லி ஆளாளுக்கு ஒரு மூட்டையைக் கொடுத்தார்கள். அத்தனை பாரம் ஏற்றியதில், தூதுவன் பயணம் செய்த குதிரையின் வேகம் குறைந்துவிட்டது. எல்லா மூட்டைகளையும் உரியவர்களிடம் சேர்த்துவிட்டு அவன் பக்கத்து நாட்டு மன்னனைச் சென்று சந்திப்பதற்குள், நேரம் கடந்து போர் மூண்டுவிட்டது. அவனுடைய நாடே சிதைந்துபோனது. சிறையில் அடைக்கப்பட்ட தூதுவன் சொன்னான். “வாழ்வில் நம் இலக்கை அடைவதே முக்கியம். மற்றவர்கள் சுமத்தியதை எல்லாம் சேர்த்துக் கொண்டால், நம் வேகம்தான் பழுதுபடும்.” உண்மைதான். மற்றவர் மீது சுமத்துவதாக நாம் நினைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் நம் மனதில்தான் பாரமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது. நம் இயல்பையும், வேகத்தையும் அது சிதைக்கிறது. அச்சம், வன்முறை, பேராசை, குற்ற உணர்வு இவற்றின் மீது வளரும் எதுவும் மனிதகுலத்துக்கு மேன்மையான விஷயங்களைத் தரப் போவதில்லை. வாழ்க்கையை அதன் இயல்போடு ஏற்றுக் கொண்டவன் நான், எதைச் செய்தாலும் அதை விழிப்புணர்வோடு செய்து வந்திருக்கிறேன். என் வாழ்வில் எதையும் பாவமாகப் பார்த்ததில்லை.
ஏதோ பேச்சு வந்தபோது, என் மகளிடம் சொன்னேன், “வாழ்க்கையில் நீ எது வேண்டுமானாலும் விரும்பிச் செய். ஆனால் செய்வதை முழு ஈடுபாட்டுடன் மிகச் சிறப்பாகச் செய். உலகமே உனக்கு எதிராக நின்றாலும், துணிந்து அதைச் செய். ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கவனமாக இரு. உலகமே நீ செய்வதைக் கேவலமாகப் பார்க்கலாம். ஆனால், செய்ததை நினைத்து நீயே பிற்பாடு அவமானமாக உணரக்கூடும் என்று நினைத்தால், அதைச் செய்யாதே!” என் வாழ்க்கையில் இதைத்தான் கடைப்பிடித்து வந்திருக்கிறேன். நான் செய்த எவ்வளவோ விஷயங்களை என் பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, பெரியவர்களோ அங்கீகரித்ததில்லை. ஆனால் எந்தக் கட்டத்திலும், நானே கேவலமாக நினைக்கக்கூடிய எதையும் செய்ததில்லை. மிகச் சிறிய வயதிலேயே ஏதோ ஒரு கட்டத்தில் எனக்குள் இந்த முடிவு வந்துவிட்டது. இன்றைக்கு நான் வழங்கும் ஆன்மீகப் பயிற்சிகளைக் கூட உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். அவற்றை ருசித்துவிட்டவர்கள் அதனுடன் காதல் வயப்படுகிறார்கள். அதை ஆனந்தமாக ஏற்றுக் கொள்கிறார்கள். பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க முடியாதவர்களுக்கு என் அணுகுமுறை புனிதத்துக்கு எதிரானதாக, ஓர் அவமரியாதையாகக்கூடத் தோன்றலாம். ஆனால், அந்த ஆன்மீகப் பயிற்சிகள் பற்றி எனக்கே சந்தேகம் வந்தது இல்லை. எனக்குள் கேள்விகள் எழுப்பியதில்லை. உங்களுக்கும் அதைத்தான் சொல்வேன். செய்வதைத் திருந்தச் செய்யுங்கள். ஆனால், நீங்களே பிற்பாடு அவமானகரமாக நினைக்கக்கூடும் என்ற செயலை வயதின் வேகத்தில், சபலத்தில் உந்துதலில் செய்யாதீர்கள்!