"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:13

தெய்வங்களின் உழைப்பு 
உலகின் பல நாகரிகங்களில் படைப்பு பற்றிய புராணங்கள் மிகவும் பிரபலமானவை.கி மு 3000 ஆண்டு தொடக்கம் கி மு 1000 ஆண்டு வரை க்கான எஞ்சியிருக்கும் ஆதாரங்கள் மூலம், மெசொப்பொத்தேமியாவில், பல தெய்வங்கள் இயற்கையுடன் தொடர்புபடுத்தப்பட்டு இருந்த போதிலும், அங்கு எந்த தொன்மமும்[அல்லது பழங்கதையும்] மிக மிக ஆரம்ப படைப்பு பற்றிய தகவல்களை தரவில்லை என்பதை அறிய முடிகிறது .உலகம் தோன்ற முன்பே அங்கு கடவுள்கள் அல்லது கடவுள் ஒருவர் இருந்தார் என்ற ஒரு ஊகத்திலேயே படைப்பு புராணம் ஆரம்பிக்கிறது. துரதிஷ்டவசமாக,மிக சிறிய அளவிலான ஆவணங்களே அங்கு கிடைக்கப் பெற்றுள்ளன.பல முறிந்து போன அல்லது உடைந்த முத்திரைகள் பல தெய்வ வழிபாட்டிற்கு முற்பட்ட ,பூமி தேவதை- "கி",வான் தேவதை-"அன்" மட்டும் இருந்த காலத்தில் இருந்து அல்லது கடல் தேவதை நம்முவில் இருந்து தகவல்களை தருகின்றன.

சுமேரியர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் படைத்தல் புராணங்கள் போன்றவை,பண்டைய சுமேரியர்களின் நகரமான நிப்புரின், இன்றைய ஈரானின் இடிபாடுகளுக்கிடையில் தோண்டி எடுக்கப்பட்ட முத்திரைகளில் காணப்படுகிறது.உலகின் மிக முற்பட்ட எழுத்து முறைகளுள் ஒன்றான ஆப்பெழுத்துகளை முதலில் சுமார் கி.மு. 3000 ஆண்டளவில் கண்டு பிடித்தவர்கள் இந்த சுமேரியர்களே ஆகும்.மேலும், கி மு 3000 ஆண்டுக்கும் கி மு 2340 ஆண்டுகளுக்கும் இடையில் இவர்கள் தம் படைப்பு கதைகளை பதிவு செய்து உள்ளார்கள்.இதற்கு அடுத்ததான பழமையான கதைகளான பாபிலோனியன் படைப்பு கதையும்,"ரிக்" வேதத்தில் புருஷசூக்கத்தில் கூறப்படும் உலகப்படைப்பு கதையும்,இசுரேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டும் தொடக்க நூல் அல்லது ஆதியாகமம்மும் (Genesis) இதற்குப் பின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தாண்டித்தான் தோன்றின என்பது குறிப்பிடத்தக்கது.

சுமேரிய படைப்பு காவியத்தின் படி,ஒரு கால கட்டத்தில்,பூமியில்
மனிதன், Enkidu உருவாக்கம்
எந்த ஒரு மனிதரும் வாழவில்லை.அங்கு தெய்வங்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்.அது மட்டும் அல்ல,கால் நடைக் கடவுள்-லகார்[Lahar] ,தானிய தேவதை-அஷ்ணன்[Ashnan] போன்றோர் பிறக்கும் முன்பு அங்கு கால் நடையோ அல்லது தானியங்களோ இருக்கவில்லை.இதனால்,அப்பொழுது பூமியில் வாழ்ந்த ஏனைய கடவுள்கள் உண்ண பாண் இல்லாமலும் உடுக்க உடையில்லாமலும் வாழ நேரிட்டது. அதன் பின்,கால் நடை,தானிய கடவுள்கள் அவதரித்தனர் என்றாலும் அவர்கள் மீண்டும் திருப்தி அடையவில்லை. இப்ப அவர்கள் கூடுதலான வேலை செய்ய வேண்டி இருந்தது.அவர்கள் இப்ப நிலத்தை நன்கு உழுது, தோண்டி, மண்ணை விதை முளைபப்தற்க்கும்,பயிர் விளைச்சலுக்கும் ஏற்றவாறு பக்குவப்படுத்தி தயார் செய்யவேண்டி இருந்தது.அதே போல சுரங்கத்தில் இருந்து கனிமங்கள் எடுப்பதற்கும் கடும் வேலை செய்ய வேண்டி இருந்தது.இப்படி ஆரம்ப காலத்தில் ஆண் தெய்வங்கள் தமது வாழ்விற்காக தினமும் உழைக்க வேண்டி இருந்தது.அவர்கள் இதை ஒரு பெரும் சுமையாக தொடக்கத்தில் பொருட்படுத்தவில்லை.ஆனால் பெண் தெய்வங்கள் படைக்கப்பட்டதும், அவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் பொருட்டு மேலும் அவர்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது."வினையே ஆடவர்க்கு உயிரே வாண் நுதல் மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரென" குறுந்தொகை -135 உரைப்பது போல,தன்னை சார்ந்திருக்கும் அவளுக்காகவும் சேர்ந்து அவன் மேலும் பொருளீட்டும் பொருட்டு-அதாவது,முன்பு தனக்கு மட்டும் உழைத்தவன்,இப்ப சாப்பிடுவதற்கு போதுமான உணவு சேகரிப்பதற்கும்,பாண் அல்லது ரொட்டி தயாரிப்பதற்கும் மற்றும் அணிவதற்கு போதுமான உடை செய்வதற்கும் இப்ப அவர்கள் மிகவும் சிரமப்படவேண்டி இருந்தது.இதனால் அவர்கள் மிகவும் ஆத்திரப்பட்டார்கள்.பூமியில் இந்த ஆண் கடவுள்களின் வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை.அங்கு கண்டு எடுக்கப்பட்ட ஒரு முத்திரை இப்படி கூறுகிறது: 

"மனிதனைப் போன்ற கடவுளர்கள்  
வேலையில் மனச்சலிப்பு அடைந்து 
உடல் வேதனை அடையும் போது,
அவர்களின் உழைப்பு கடுமையாயிற்று,
வேலை கனமாயிற்று,துன்பம் அதிகரித்தது" 

இதனால் கடவுள்கள் தமது நிலை குறித்து வருந்தினர்.குறை தெரிவித்தனர்,தம்மை வஞ்சித்து விட்டதாக கருதினர்,தலைமை கடவுளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.அவர்களுக்கு உடனடியாக ஒரு தீர்வு தேவைப்பட்டது.தம்மை,தம் ஒவ்வொரு தேவையையும் கவனிக்க,பூர்த்தி செய்ய   தமக்கு வேலையாட்கள்- தம்மை கடும் உழைப்பில் இருந்து விடுவித்து அதை எந்த கேள்வியும் இன்றி தொடர்ந்து செய்ய ஒரு புதிய அடிமை இனம்- தேவை என இப்ப கடவுள்கள் கருதினர்.

கடவுளின் கடவுள் என கருதப்படும் "அனு" வும் இது சரியான முடிவு என ஏற்றுக்கொண்டார்.ஆகவே கடவுளின் சபையை கூட்டினார். அங்கு இவர்களின் வேலைப் பளுவை குறைக்கும் பொருட்டும்,தமது வாழ்வாதாரத்திற்கு இவர்கள் உழைப்பதில் இருந்து,முற்றாக விடுவிக்கும் பொருட்டும்,ஒரு மனித இனத்தை படைப்பது எனமுடிவெடுத்தார்கள். எனவே அனு,தனது மகன் என்கிக்கு அந்த பொறுப்பை கொடுத்தார்.எனவே என்கி,தனது தாய் நம்முவிடம் மனித வர்க்கத்தை வடிவமைப்பதற்கேற்றவாறு,பொருத்தமான மண் களியை செய்யும் படி அறிவுறுத்தினான். களி மண் ஒரு இயல்பான தேர்வு போல் தெரிகிறது.ஏனென்றால்,இதை எமக்கு தேவையான எந்த சிக்கலான வடிவிலும் இலகுவாக வடிவமைக்கலாம் என்பதாலும் இது நீருடன் சேர்ந்த கலவை என்பதாலும் ஆகும்.இதே போல, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய எல்லா ஆபிரகாமிய சமயங்களிலும் மற்றும் கிரேக்க,சீன,எகிப்திய தொன்மவியலிலும் 'மனிதன் மண்ணில் இருந்து படைக்கப்பட்டான்' என கூறுகிறது.அது மட்டும் அல்ல,ஏன் மனிதனின் வடிவம் கடவுள் மாதிரியே உள்ளது என்பதற்கும் சுமேரியன் முத்திரை விடைகொடுக்கிறது, இந்த புதிய மனிதர்கள் கடவுளின் வேலைச் சுமையை இனி சுமைக்கப் போகிறார்கள்.ஆகவே அவர்கள் கடவுள் உருவம் மாதிரியே இருக்கவேண்டும்.அப்பத்தான் அதே வேலைகளை அதே மாதிரி செய்யமுடியும்.மேலும் களி மண்ணில் இருந்து மனிதனை உயிர் உள்ளவனாக வடிவமைக்க,சில பெண்மைக்குரிய-கருவுறல் அல்லது குழந்தைப்பேறு போன்ற அம்சங்களும் தேவைப்பட்டது. ஆகவே,என்கியும் அவரின் ஒன்றுவிட்ட உடன்
பிறந்த சகோதரி[half-sister],நின்கியும்[Ninki] அல்லது நின்மாஹ்வும்[Ninmah] சேர்ந்து இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டி இருந்தது.நின்-ஹர்சக்கின்[Ninhursag] இன்னும் ஒரு பெயரே நின்கி எனவும்,இவரை என்லில்லின் சகோதரியாக அடிக்கடி கூறப்பட்டாலும் இவர் என்லில்லின் மனைவியும் ஆவார். இதற்காக,இல்லுவே என்ற ஒரு கடவுள்[god Illuwe] கொல்லப்பட்டு,அவரின் உடலும் இரத்தமும் ஆற்றின் கரையில் இருந்து எடுத்த கொஞ்ச களி மண்ணுடன் கலக்கப்பட்டது.அதை தமது கையில் உருட்ட தொடங் கினார்கள்.ஒரு தலை,ஒரு உடம்பு,கைகள்,கால்கள் தோன்றி ஒரு வடிவம் வரும் வரை உருட்டினார்கள்.பின்பு அதற்கு உயிர் கொடுத்தார்கள்.அவ்வாறே மனிதர்கள்,கடவுளின் உருவில்,ஆற்றம் கரை களி மண்ணில் இருந்து கடவுளால் தோற்றுவிக்கப்பட்டார்கள் என சுமேரிய நூல் கூறுகிறது.இப்ப,கடவுளுக்கு தேவையான உணவு,உடை,இருப்பிடம் போன்றவற்றை கொடுப்பது மக்களின் வேலையானது. இதனால், கடவுள் நிரந்தரமாக உழைப்பதில் இருந்து விடுபட்டார். மனிதனின் இந்த தோற்றுவாய் கதை அல்லது கூற்று அடிமை தொடர்பானதாக உள்ளது.அன்று நிலவிய சுமேரிய பொருளாதாரத்தில்,அரசனுக்கும் மதகுருக்கும் நன்மை பயக்க, அடிமைகளின் இடைவிடா உழைப்பு தேவைபட்டதை இது காட்டுகிறது எனலாம். 

குறைபாடற்ற,தொடக்கநிலை மனித உழைப்பாளியை செய்யும் முற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த தருவாயில்,,என்கியாலும் தாய் தெய்வம் நின்-ஹர்சக்காலும் ஊனமான மனிதர்களும் படைக்கப்பட்டார்கள் என,சுமேரியன் படைப்பு நூல் மேலும் கூறுகிறது.இது ஒருவேளை,சோதனை மற்றும் பிழை[trial-and-error] செயல் முறையில் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்ததாக இருக்கலாம்.தொடக்கத்தில் மனித இனம் தாங்களாக இனப்பெருக்கம் செய்யமுடியாமலும் இருந்தார்கள்.எனினும் என்கியும் நின்கியும் சிறிது மாற்றியமைத்து அதை சரிப்படுத்தினார்கள்.எனவே அதன் பின், மனிதன் தன்பாட்டில்,முழுமையாக செயல் படும் சுயாதீன மனிதன் ஆனான்.மேலும் ஒரு சுமேரிய பாடல்,உலகின் தொடக்க கால மனிதனின் நிலை பற்றியும் கூறுகிறது.

"மனித இனம் படைக்கப்பட்ட போது,
அவர்களுக்கு பாண்[ரொட்டி] சாப்பிடத் தெரியாது,
அவர்களுக்கு உடை உடுக்க தெரியாது,
புள் பூடு செடி கொடிகளை செம் மறியாடு போல் மேய்ந்தான் 
குளம் குட்டை ஓடையில் விலங்கு போல் நீர் அருந்தினான்"

அப்படியான மிருகம் போன்ற மனிதனைப் பற்றி கில்கமேக்ஷ்
காப்பியமும் ["Epic of Gilgamesh" ] வர்ணிக்கிறது.என்கிடு[Enkidu] என்ற ஒரு காட்டு வாசி,சமாட்[Shamhat ] என்ற ஒரு அழகான கோயில் தேவதாசியால் காம இன்பம் ஊட்டி, மயக்கி, காட்டில் இருந்தும் காட்டுமிராண்டித் தனத்தில் இருந்தும் நாகரிகம் படுத்த முன்பு,அந்த காட்டுமிராண்டி எப்படி வாழ்ந்தான் என்பதை இது சொல்கிறது.

இதற்கு மாறாக,மூத்த சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில்,உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை.மாறாக "நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று" எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பு போல் ஒன்றை, அன்றே அதாவது இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2,700) ஆண்டுகளுக்கு முன்னால் கூறுயிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் 
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"-(தொல். மரபியல் 1589)

உலகத்தின் தோற்றம் பற்றி மற்றும் ஒரு சங்க இலக்கியமான பரிபாடலும் கூறுகிறது.

"கரு வளர் வானத்து இசையின் தோன்றி
 உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
 உந்து வளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்
 செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு
 தண் பெயல் தலைஇய ஊழியும்அவையிற்று
 உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு 
மீண்டும் பீடு உயர்பு ஈண்டிஅவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்"(பரி.2:5- 12)

இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைக் கூறியுள்ளார்.இவை மட்டும் இன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது காலப்போக்கில் சிறிது சிறிதாக குளிர்ந்து பனிப்படலமாக மாறி,பின் நெடுநாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்றும் உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது.


[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம]

பகுதி 14தொடரும்.....  

No comments:

Post a Comment