"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:10


சுமேரியர்கள் எண்ணிறந்த பல தெய்வங்களை வழிபட்டார்கள் எனினும், இந்த தெய்வங்கள், எந்த வகையிலும், மாறுதலில்லாத,  ஒரேவிதமான பெயரையோ,ஆற்றலையோ,பிறப்பிடத்தையோ அதிகாரப் படிநிலை தகுதியையோ[அந்தஸ்தையோ] அல்லது பண்புகளையோ கொண்டிருக்க வில்லை.எனவே மெசொப்பொதாமியாவின் பண்பாடு இடத்திற்கு இடம்,நகரத்திற்கு நகரம் வேறுபட்டன. அப்படி அவர்கள் வழிபட்ட தெய்வங்களில் முதன்மையாக,முன்பு கூறியவாறு என்லில், என்கி, ஈனன்னா,..  போன்றவற்றுடன் மேலும் சூரிய கடவுள் உடு[Utu] அல்லது ஷமாஷ் [Shamash] மற்றும் சந்திர கடவுள் நன்னா[Nanna] அல்லது சின்[Sin] அடங்குவர். உதாரணமாக, சூரியனின் முக்கியத்துவத்தை 5,000~6000 ஆண்டுகளுக்கு முன்னரே, மெசொப்பொதாமியாவை சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்திருந்ததால், அதை,நீயாயாதிபதி தெய்வம் அல்லது நீதிக்கும் பாதுகாப்புக்குமுரிய கடவுள் என அழைத்தனர்.மேலும் சுமேரிய புராண கதைப்படி பபிலோனியன் அரசன் ஹம்முராபி சட்ட விதித் தொகுப்பை சூரிய கடவுள் ஷமாஷ் இடம் இருந்து பெற்றதாக அறிகிறோம். சூரியன் என்றால் இயக்குபவன் என்பது பொருள். சூரியனால்தான் ஒளியும் வெப்பமும்
தோன்றுகின்றன. உலக உயிர்கள் அனைத்தையும் வாழ வைப்பவன் சூரியன். ஆகவே,இப்பூவுலகில் சூரியன்தான் அதிகமாக முதல் கடவுளாக கருதப்பட்டு இருக்கலாம். மேலும் ஒரு சிறு தாவரம் உணவை உற்பத்தி செய்வது முதல், விவசாயம், துணி காய வைப்பது, வற்றல் போடுவது, போன்றவைக்கும் அவை உதவி புரிந்தன.அது மட்டும் அல்ல, வானில் சூரியன் இருந்த நிலையைக் கொண்டே தான் அந்தக்கால மக்கள், பாபிலோனியர்கள் உட்பட,நேரத்தைக் கணக்கிட்டனர். இதனால் தான், திராவிட  அல்லது தமிழ் விவசாயிகள், சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடு கின்றனர் எனலாம். சந்திரனையும் அவர்கள் வழிபட்டனர். இதை நன்னா[Nanna] என அழைத்தனர். இவர் பொதுவாக En-zu,என குறிப்பிடப்பட்டார். இதன் கருத்து அறிவுத் தெய்வம் ஆகும். மேலும் இவரை இரவின் நீதிபதியாகவும் கருதப்பட்டது. இவர் “காரன்’’[ Harran] மற்றும் “ஊர்’’[Ur] போன்ற நகர்களில் சிறப்பாக வழிபடப்பட்டார். ஒவ்வொரு மாத முடிவிலும் சந்திரக் கடவுள் அவர்களுக்கு காட்சி கொடுத்து, அவர்களுக்காகத் தீர்மானம் எடுப்பார் என நம்பினர். எனினும் ஹம்முராபி பாபிலோனியா
பேரரசை உருவாக்கிய போது நிப்பூர் நகரத்தில் இருந்து பாபிலோன் நகரத்திற்கு எல்லாவற்றையும் மாற்றினார். பல கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் உருவாக்கி மர்டுக் [Marduk]எனும் கடவுளை பிராதனப்படுத்தி ஒரு சாதாரண நகரத்தை மாபெரும் நகரம் ஆக்கிய பெருமை இவருக்கு உண்டு. எப்படியாயினும் பபிலோனியாவின் கடைசி அரசன் நபோனிடஸ்[Nabonidus] கி பி 556–539, பதவி ஏற்றதும் மர்டுக் கடவுளை கௌரவப்படுத்தும் திருவிழாக்களை புறக்கணித்து, அதற்குப் பதிலாக சின் என்ற சந்திர கடவுளிற்கு ஆலயம் கட்டி,அதற்கு தலைமை பெண் குருவாக தன் தாயையும் மகளையும் நியமித்தார். இதனால் இவர் சர்ச்சைக்கும் உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கடவுள் மகிழ்வற்று சினங்கொள்ளும் போது,மக்கள் துன்பமும்,பாதிப்பும் அடைகிறார்கள் என சுமேரியர் நம்பினர். உதாரணமாக,டைகிரிசு ஆறு (Tigris) வெள்ளப்பெருக்கெடுத்து முழு கிராமமும் அழிவடைந்தால்,அதை,தாம் கடவுளை மகிழ்ச்சியாக வைத்திருக்க தவறியதன் விளைவே இது என தம்மையே நொந்து கொள்கிறார்கள். எனவே கடவுள் எதை விரும்புகிறார்,எதை வெறுக்கிறார் என்பதை நன்கு அறிந்த ஒருவர் தமக்கு கட்டாயம் தேவை, அப்பதான் தமக்கும் தமது நகர மாநிலத்திற்கும் விமோசனம் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. இந்த தேவையின் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலேயே மதகுரு உருவானார். மத குருக்கள் சடங்குகள் செய்வதில் விசேடத்துவம் பெற்றார்கள். அத்துடன் அவர்கள் கடவுளின் விருப்பத்தை அறிந்து அதை முன்கூட்டியே தெரிவிக்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். மேலும் கடவுள் மகிழ்வற்று இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படி கடவுளின் ஆதரவை பெறலாம் என்பதையும் அறிந்து இருந்தார்கள். இது சுமேரியர்கள் மத்தியில் மத குருமாருக்கு மிகவும் முக்கியமான
இடத்தை கொடுத்தது. ஆகவே அவர்கள் சுமேரிய சமுதாயத்தில் மிகவும் வலிமையான மற்றும் முக்கியமான நிலையை பெற்றார்கள்.இந்த மத குருமாரின் அந்தஸ்து, சுமேரியர்களின் சமூகப் படிநிலையில் அவர்களை உயர் நிலையில் வைத்தது. உண்மையில் அவர்கள் அரசனுக்கு அடுத்த நிலையை பெற்றார்கள். சுமேரிய அரசர்கள்,தாம் கடவுளால் நாட்டையும் குடியையும் அரசாள தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்று கூறினர். மத குருமார்களுக்கு கீழ்,சிறப்பு கைத்தொழிலாளர்கள் [skilled craftspeople], வியாபாரிகள்,மற்றும் வர்த்தகர்கள் இருந்தார்கள். இவர்களுக்கும் கீழ்,விவசாயிகள் மற்றும் பொது தொழிலாளர்களும், ஆக அடியில் அடிமைகளும் இருந்தனர். அங்கு,பொதுமக்கள் பொதுவாக தெய்வங்களை நேரடியாக அணுக முடியாதிருந்தது.இச் செயல்களை,அதிகாரம் வாய்ந்த,இந்த புரோகிதர்கள்,குருக்கள் ஊடாக செய்தனர். கடவுளை மகிழ்வாக வைத்திருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பொது மக்களுக்கு மத குருக்கள் கூறி ஆலோசனையும் வழங்கினர். தெய்வங்கள் சில வேளை  இரக்கமாக இருந்தார்கள், சில வேளை  கொடூரமாக இருந்தார்கள். இதில் எதனிலும் கடவுள் செய்வதை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என சுமேரியர் நம்பினார்கள். உண்மையில் தாம் கடவுளின் அடிமைகள் என்று சுமேரியர் நம்பினர்.மேலும் தாம் பூமியில் பிறந்தது, கடவுளுக்கு பணி புரியவும் கடவுளை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என
கருதினர். எனவே அவர்கள் தெய்வங்களுக்குப் படைப்பதிலும் பலியிடுவதிலும் மற்றும் அவரை இரந்து வேண்டுதலிலும் ஈடுபட்டனர். கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடி யார்களுள் ஒருவரான அப்பர் திருநாவுக்கரசு நாயனாரும் "தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான், தன்க டன்னடி யேனையுந் தாங்குதல், என்க டன்பணி செய்து கிடப்பதே." என்று கூறுகிறார்.ஒருவர் திருநாவுக்கரசர் என்று கூறும் போது,எமது கண்களில் தானாகத் தோன்றும் காட்சி,அவர் உழவாரத்தை தோலில் சுமந்து நிற்கும் காட்சியே ஆகும். இவர் இந்த "உழவாரம்' என்ற விவசாயக் கருவியின் மூலம் கோயில்களில் முளைத்திருந்த புல்பூண்டுகளை களைந்து கோயிலைத் தூய்மையாக்கினார். அத்துடன்,இது அடியவர்களின் வேலை.அது திருத் தொண்டு புரிவது என்கிறார். அது மட்டும் அல்ல,கடவுள் மகிழ்ச்சியாய் இருந்தால் எல்லாம் நல்லபடி அமையும் எனவும் நம்பினார்கள். அதாவது நிறைய உணவு உற்பத்தியும்,ஆற்றின் வெள்ளப் பெருக்கு சீராகவும் முன்கூட்டியே அறியக் கூடியதாகவும், பூமி நடுக்கம் இன்றியும்,கடும் மணல் புயல் இன்றியும், மற்றும் இயற்கை அனர்த்தங்கள் இன்றியும்,வாழ்வு மிக இன்பகரமாக அமையும் எனவும் கருதினார்கள். சில நேரங்களில் வாழ்வு மிக மகிழ்ச்சி யாகவும் மற்றும் சில நேரங்களில் துக்கமாகவும் அமைகிறது என்று எமக்கு நன்றாக தெரியும். சுமேரியாவில் அப்படி வாழ்வு ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது,அவர்கள் தங்களை தாங்களே பழிசுமத்தி கொண்டார்கள். அதாவது தாமே கடவுளை எரிச்சலடைய வைத்ததாக தம் மேல் பழியை சுமத்துகிறார்கள். கடவுள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால்,அவர் இலகுவாக கோபம் அல்லது எரிச்சல் அடைகிறார் அதனால் அவர் அதை மக்களிடம் காட்டுகிறார் என நம்பினர். சுமேரியர் படைத்தல் புராணம் இது ஏன் என விளக்கமாக சொல்கிறது. சுருக்கமாக,சுமேரிய சமுகத்தில் மதம் மிக முக்கிய பங்கு வகுத்தது.உண்மையில்,சுமேரியர்களின் தனிப்பட்ட அல்லது பொது வாழ்க்கையின் ஒவ்வொரு  நிலையிலும் சமயம் ஆதிக்கம் செலுத்தியது.பல வழிகளில்,சமயமே சுமேரிய சமுகத்தின் அடிப்படையாக இருந்தது மட்டும் அல்ல அதுவே சுமேரிய சமுகத்தை உரு அமைத்ததும் ஆகும்.

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 11  தொடரும்  

1 comment:

  1. இதன் சமுதாய கட்ட அமைப்பு முறைக்கும் தமிழருடைய , இந்துகளுடைய சமுதாய கட்டமைபுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

    ReplyDelete