ரஜினிகாந்தின் ‘கபாலி’ படம் தணிக்கைக்கு தயாராகிறது. அடுத்த மாதம் 4 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.
கபாலி
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து குரல்பதிவு, இசைசேர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில்
இரவு–பகலாக நடக்கின்றன. ரஜினிகாந்த் ஏற்கனவே இரு வாரங்கள் ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டு அமெரிக்கா சென்று விட்டார்.
‘கபாலி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் மலேசிய நடிகர்கள் அதிகம் பேர் நடித்து உள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்துள்ளது. அந்த நாட்டில் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். எனவேதான் மலாய் மொழியிலும் படத்தை திரைக்கு கொண்டு வருகின்றனர்.
தணிக்கை
கபாலி படத்தின் தமிழ் பதிப்புக்கான
தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளது. எனவே அடுத்த வாரம் படத்தை தணிக்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலாய் மொழிகளில் கபாலி படம் தணிக்கை செய்யப்படுகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 1–ந் தேதி கபாலி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தெலுங்கு, இந்தி, மலாய் மொழி பதிப்புகளுக்கான தொழில்நுட்ப பணிகள் முடியாததால் இரண்டு வாரம் தள்ளிப்போகிறது.
ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து இந்த மாதம் இறுதியில் சென்னை திரும்ப இருப்பதாகவும் அவர் வந்த பிறகு கபாலி வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஜூலை 15–ந் தேதி கபாலி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் வரவேற்பு
இந்த நிலையில், ‘கபாலி’ பாடல்கள் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல்களில் இடம்பெற்றுள்ள ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம், நெருங்குனா பொசுக்குற கூட்டம்,’ ‘உலகம் ஒருவனுக்கா உழைப்பவனுக்கா விடை தருவான் கபாலிடா,’ ‘நாங்க எங்க பிறந்தா அட உனக்கென்ன போடா தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்தான்டா,’ ‘மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள
கேட்காது,’ போன்ற வரிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன.
இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கதாபாத்திரத்தில்
வருகிறார். வெளிநாட்டில் வில்லன்களால் அடிமைப்படுத்தப்பட்டு துன்புறும் தமிழர்களை மீட்க அவர் நடத்தும் அதிரடி போராட்டமே படத்தின் கதை. இந்த படத்தை பா.ரஞ்சித் டைரக்டு செய்துள்ளார். எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
No comments:
Post a Comment