எந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா!

சேலம் -தமிழ்நாடு
சேலம் (ஆங்கிலம்:Salem), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது.
சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் நகரின் ஊடாக செல்கிறது. சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று ஆகியவை சேலத்தை சுற்றி அமைந்த சில மலைகள்.
2001 கணக்கெடுப்பின்படி சேலம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சேலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேலத்தின் மக்கள் தொகையில் குறிப்பிடத் தக்க அளவு கன்னடம் பேசும் மாத்வா மற்றும் தேவாங்கர் இன மக்களும், சௌராஷ்டிர மொழி பேசுவோரும் உள்ளனர்."
இம்மாவட்டத்தில் பெருமளவு வீர வன்னியர்களும். பிள்ளைமார்களும் வேளாள கவுண்டர்களும், மற்றும் வேட்டுவ கவுண்டர்களும் வாழ்கின்றனர். தாரமங்கலம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், சேலம் கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் நெசவுத் தொழில் செய்யும் செங்குந்த முதலியார்கள் அதிகளவில் உள்ளனர். எத்தாப்பூர், புத்திரகவுண்டன் பாளையம், பெத்த நாயகன் பாளையம் ஆகிய பகுதிகளில் தெலுங்கு நாயக்கர்களும், சேலத்தின் தென்பகுதி, எளம்பிள்ளை, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் கன்னட சாதியினரும்மகுடஞ்சாவடி தாதகாப்பட்டி கிச்சிப்பாளையம் ஓமலூர் தாரமங்கலம் மல்லூர் மேட்டூர் ஆத்தூர் தலைவாசல் ஏத்தாப்பூர் புத்திரகவுண்பாளையம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் பிள்ளைமார்சமூகத்தினர் அதிக அளவு வசிக்கின்றனர்.மாவட்டத்தின் ஆதிவாசி மக்கள் சேர்வராயன் மலைத் தொடரில் வாழ்ந்து வருகின்றனர்.
வரலாறு
சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மருவியது எனவும் கூறுவர்.

இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது.

சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.

சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தர்மபுரி அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே 1792இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு 'பாரமஹால் மற்றும் சேலம்' மாவட்டம் 1792இல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டு பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பார மஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808இல் .ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும்கூட, 1860இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996 மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
நகரச் சிறப்புகள்
சி.வி. ராஜகோபாலசாரியார், சேலம் சி. விஜயராகாவாச்சாரியார், ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.
1937ல் சேலம் மாவட்டத்தில் தான் முதன் முதலில் மதுவிலக்கு அமுலுக்கு வந்தது.
பொதுவாக மாம்பழத்துக்கு பெயர் போன நகரம் என்பதால் இங்கு அதுவும் பிரசித்தி.
சேலம் என்ற பெயரில் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும்கூட நகரங்கள் உண்டு.
கைத்தறி, வணிக நிலையங்கள் நிறைந்தது இவ்வூர்.
சேலம் நகரத்தில் வாணிக வளத்தைப் பெருக்கும் இடம் 'லீபஜார்' என்னும் கடைவீதியிலுள்ள மொத்த வியாபார நிலையங்களாகிய பல்வேறு மண்டிகள், இந்நகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறுகின்ற வாரச் சந்தை வியாபாரம் மிகவும் பெரியதாகும். இந்த வாரச் சந்தைக்கு இம்மாவட்த்திலிருந்தும் அடுத்த மாவட்டங்களிலிருந்தும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் வந்து கூடுவார்கள்.
இந்தியாவிலேயே மிகவும் நீளமான - பெரிய இரயில்வே பிளாட்பாரம் சேலம் சந்திப்பு நிலையப் பிளாட்பாரமே ஆகும்.
சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது. வெள்ளி விடுமுறை.
சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள்: இராமகிருஷ்ணமடம், 5 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10 கி.மீ. தொலைவிலுள்ள கந்தராஸ்ரமம், திப்புசுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், சேலம் ஸ்டீல் பிளாண்டை அனுமதியுடன் பார்க்கலாம். 10 கி.மீ. தொலைவிலுள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா - இது சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்
சேலம் பல்வேறு கனிமவளங்கள் நிறைந்த இடம். இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி இந்திய நடுவன் அரசின் செயில் (SAIL) நிறுவனம் சேலம் இரும்பாலையை அமைத்துள்ளது, இது தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும்.
இந்தியாவில் மாக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா & தமிழக அரசின் டான்மாங் (TANMAG - TAMILNADU MAGNESITE LIMITED) நிறுவனங்கள் மாக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைத்துள்ளன.

சேலம் உருக்காலை
உருக்காலை
அதிக அளவில் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.
இது தவிர நூற்பாலை, வாகன உதிரிபாக ஆலை, சேகோ (சவ்வரிசி) ஆலை ஆகியவையும் உள்ளன.
இந்த மாவத்த்தில் கோழிப் பண்ணைகளும் அதிக அளவில் உள்ளன.
இங்கு உள்ள லீ-பஜார், மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த சந்தைக்குப் பெயர் பெற்றது.
விரைவில் இங்கு ஒரு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமையவிருக்கிறது.
சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
சுற்றுலா இடங்கள்
ஏற்காடு (மலைவாழிடம் - கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம்), மேட்டூர் அணை, தாரமங்கலம் கோயில், சேலம் உருக்காலை, சேலம் கந்தாஸ்ரமம், குருவம்பட்டி உயிரியல் பூங்கா.

குறிப்பு:ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் எங்கள் ஊர் தொடர்பான கட்டுரைகள் இடம்பெறும்.உங்கள் ஊரின் பெருமைகளை பறை சாற்ற எழுதி அனுப்புங்கள்-                                         s.manuventhan@hotmail.com

No comments:

Post a Comment