"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]''/பகுதி:05

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

திராவிடன் என்றால் என்ன?இது ஒரு பண்பாடா?,மொழியியல் குடும்பமா?அல்லது ஒரு இனமா?இது எங்கு தோன்றியது?பிறைச் சந்திரன் வடிவில் அமைந்த வளமான நிலத்திலா[Fertile Crescent]? அல்லது தென் இந்தியாவிலா?எப்பொழுது தோன்றியது?30,000 ஆண்டுகளுக்கு முன்பா,10,000 ஆண்டுகளுக்கு முன்பா அல்லது 4,000 ஆண்டுகளுக்கு முன்பா?திராவிடர்களின் அல்லது தமிழர்களின் தோற்றுவாய் ஒரு குழுப்பமான,சிக்கலான ஒன்றாகவே வரலாற் றாசிரியர்களுக்கு இன்னும் இருக்கிறது.அண்மைக் காலத்தில் வெளிவந்த ஆதாரம்,தடயம் வரை,தமிழர்களின் வரலாறு,வரலாற்றிற்கு முந்திய காலமான கிறிஸ்துக்கு முன்1000- 500 ஆண்டு அளவில்,சங்க இலக்கிய சான்றுகளின் படி,ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டது. ஆனால்,தென் இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த,பாரக்கல் சார்ந்த தொல்லியல் களங்கள்[ megalithic sites],அரிக்கமேடுவில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டத்தின் துண்டுகள்,பொம்மைகள் போன்றவைகள் மற்றும் இலங்கை புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு அகழ்வு,மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரைவெளி[அல்லது கதிரவெளி],மிகப் பழைய குடியேற்றப் பகுதியான இலங்கை,சுன்னாகம் பகுதியில் உள்ள கதிரமலை[கந்தரோடை] பகுதி போன்றவை தமிழ் திராவிடர்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும்  ஏறத்தாழ 4000 ஆண்டுகளாக தொடர்ந்து வாழ்கிறார்கள் என்பதை எடுத்தக்காட்டுகிறது.தொல்பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கள் மற்றும் கலைப்பொருட்களில் காணப்பட்ட கல்வெட்டுகளை ஆய்வு செய்து இதை உறுதிப்படுத்தி உள்ளார்கள். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 25 கிலோமீட்டர்[15 மைல்] தொலைவில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்து 169 இறந்தவர்களை வைத்துப் புதைக்கப்பட்ட சுட்ட களிமண்ணினாலான முதுமக்கள் தாழிகள் அல்லது ஈமத்தாழிகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.இத் தாழிகளில் மனித மண்டைஓடுகள்,எலும்புக்கூடு,உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள்,மற்றும் நெல்,உமி,தானியம்,கருகிய[தீய்ந்த] அரிசி,வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கோடரி/ மண்வெட்டி,பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன.இவை,ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்,புதிய
கற்காலத்தைச்[Neolithic period] சார்ந்தவை என உறுதி கூறுகிறது.ஆனால் இது தவறு. தமிழர்கள் இதிலும் கூடிய காலம் வாழ்ந்து உள்ளார்கள் என்பதே உண்மை.ஆகவே இதற்கு முன் எங்கு வாழ்ந்தார்கள் என்பதை நாம் அறியவேண்டும்.பொதுவாக தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்த பழமையான குடிகளின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என சில அறிஞர்கள் வாதிட்டாலும்.சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில் வேறு சில அறிஞர்கள் திராவிடர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக இந்தியாவிற்கு வந்தவர்கள் என வாதாடுகின்றனர்.பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்தில் இன்று பெருமளவில் புழங்கி வரும் பராஹவி மொழி (பிரஹுயி/ Brahui language] ஒரு திராவிட மொழி ஆகும்.அதாவது தமிழர் மத்திய ஆசியா[சுமேரியா],வட இந்தியா[சிந்து சம வெளி] நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள்.எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று ஆகும்.அத்துடன் ஆரியர்கள் இந்தியாவிற்குள் பிரவேசிக்கும் முன்பே,கிட்டத்தட்ட கி மு 1700 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்தார்கள் என்பது நன்கு-ஏற்றுக் கொள்ளப்பட்ட  , நன்கு-உறுதிபடுத்தப்பட்ட கருது கோளாகும்.ஸ்பென்சர் வெல்ஸ்[Spencer Wells] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்"[Indian marker] என அழைக்கப்படும் M 20,திராவிடர்களின் மூதாதையர் வழி  L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி,30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்தியாவில் உள்ளது என்பதை அறியமுடிகிறது.இவர்கள் மத்திய கிழக்கு,தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின்[Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து,அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின்[Vindhya Range] தெற்கு பகுதிக்கு
சென்றார்கள்.இந்த மலைத் தொடர் இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது.அங்குதான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன,இந்த முன்னைய மூதாதையரை/மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-dravidian] என அழைக்கலாம்.இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு,தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட  ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது.இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன்[pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம்,முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்தன.இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு பிறந்தது.மரபுக் காட்டி M 20 கூடுதலாக தெற்கு மக்களிடம் மட்டும் காணப்படுவதுடன் சிலவேளை 50 வீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கிறது.ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இங்கும் அங்கும்மாக மட்டுமே காணப்படுகிறது.அதே வேளையில் மரபுக் காட்டி M 130 இந்தியாவில் தெற்கில் மட்டுமே முதன்மையாக காணப்படுவதுடன் அதுவும் 5 வீதம் அளவிலேயே காணப்படுகிறது.இது இந்த இரண்டு மரபுக் காட்டிகளின் கலப்பில் கரையோர மக்கள் கூட்டத்தின் ஆண் வழி பங்களிப்பு குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.ஆகவே தென் இந்தியா புகுந்த மரபுக் காட்டி M 20 கூட்டத்தினர்,அங்கு ஏற்கனவே குடியிருந்த மரபுக் காட்டி M 130 கூட்டத்தினரிடம் இருந்து தமக்கு மனைவிமாரை அல்லது ஒரு வாழ்க்கை
துணைவியை பெற்றனர் என நாம் இலகுவாக ஊகிக்கலாம்.இவர்கள் கரையோர ஆண்களை பெரும்பாலும் துரத்தி,அல்லது கொலைசெய்து, அல்லது அவர்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. அத்துடன் இமயமலை இந்தியா உபகண்டத்தை வட மத்திய ஆசியாவில் இருந்து பிரிக்கிறது.ஆகவே இது ஆதி தென் இந்தியா மக்களின் வடக்கிற்கான நடமாட்டத்தை கடினமாக்கிறது. அதே போல,சிந்து நதியும் தார் பாலைவனமும்[Indus River and the Sind desert],மேற்கிற்கான இயற்கை தடையாக உள்ளது.அரக்கன் மலைத் தொடர்கள்[Arakan Mountains] இந்தியா உப கண்டத்திற்கும் தென் கிழக்கு ஆசியாவிற்குமான பயண முட்டுக் கட்டையாக உள்ளது.இதனால் ஏற்பட்ட நீண்ட கால தனிமை, நாளடைவில்,தனித்துவமான திராவிட இனத்திற்குரிய பண்புகள் தோன்ற வழிவகுத்தது எனலாம்.ஒவ்வொரு இனமும் தமக்கே உரித்தான தனித்துவமான அடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. கலை,கலாச்சாரம்,பண்பாடு இவை யாவற்றிற்கும் மேலாக மொழி என்பது ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும்.ஒவ்வொரு முறையும் ஒரு மனித கூட்டம் இடம் பெயரும் போது,அங்கு முன்னமே வாழ்ந்து கொண்டு இருக்கின்ற குடிமக்களுடன் திருமணம் செய்து கொள்வதும் அதே நேரத்தில் அவைகளுக்கு இடையில் முரண்பாடு நிகழ்வதும் வழமை என வரலாறு காட்டுகிறது.இதனால் வெற்றி கொண்டவர்கள் சண்டையால் மேலாதிக்கம் கொள்வதும் பின்
நாளடைவில் பெருபாலான வேளைகளில் ஒற்றுமையாகி ஒன்றாவதும் உண்டு. இதனால் படிப்படியாக பழங்குடியினரும் புது குடியினரும் ஒரு குடியினராக மாறுகின்றனர்.இப்படித்தான் மரபுக் காட்டி எம் இருபதும்[M 20] எம் நூற்றி முப்பதும்[M 130] ஒன்றாகி இன்றைய திராவிட இனம் தோன்றியது எனலாம்.மேலும் இன்று கிடைக்கும் சான்றுகளும் இலக்கியமும் சுமேரியர்கள் திராவிட தமிழர்கள் என அடையாளம் காட்டுகிறது.அப்படியாயின் தமிழரின் சமயம்,கட்டாயம் சுமேரியாவுடனும் சிந்து சம வெளியுடனும் அதிகமாக தொடர்பு கொண்டதாக இருக்கலாம்.எனவே நாம் தமிழர் சமய வரலாற்றை சுமேரியாவில் இருந்து சிந்து சம வெளி,சங்க காலம் ஊடாக பயணித்து ஆய்வு செய்ய வேண்டும்.அப்பத்தான் அதை முழுமையாக நாம் அறிந்து கொள்ளலாம்.


பகுதி-06 அடுத்த வாரம் தொடரும்..                                                                        


0 comments:

Post a Comment