சாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]

இன்னும் 18 [ஆண்டு 2029 இல்] ஆண்டுகளில்   மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.

கணணி துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: கணணி, ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால் கணணி துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கணணிகளை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள்.

இது மெல்ல மெல்ல மாறி புது கணணி உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கணணிகளே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு மனிதனின் உதவி இல்லாமல் கணணிகள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும்.

அந்த அளவுக்கு கணணி தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கணணி ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029-ல் உண்டாகும் என்று தெரிகிறது.

எல்லா ஆராய்ச்சிகளிலும் கணணியே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும்.

இதன்மூலம் சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் கணணியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கணணிகள் குறுக்கிடும்.

அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கணணியின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால் நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும்.
ஏற்கனவே 2011 ஜனவரி தீபம் மின்னிதழில் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் செ.சந்திரகாசன்  எழுதிய  தொழில்நுட்பம் தொடர்பான வருங்கால நோக்கு எனும் கட்டுரையில் வெளிவந்த தகவல்களில் இக்கருத்தும் ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment