அட்சய திருதியை நாளில் தங்கச் சங்கிலி வாங்கச் சென்ற அங்கம்மாளின்
கழுத்து நகை களவு போனது
என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிகைகளில் வருவது வழக்கமாகிவிட்டது. அங்கம்மாக்களின் பெயர்கள்தான் மாறுகின் றனவே அன்றி, செய்தி இன்னும் தொடரத்தான் செய்கிறது.
பழைய மூடநம்பிக்கைகள் காலாவதியாகிப் போக புதிய மூடநம்பிக்கைகள் உருவாக்கப் படுகின்றன. வளர்ந்துவிட்ட அறிவியல் ஊடகங்கள் காசு பண்ண இதனை மேலும் மேலும் வளர்த்துவிடுகின்றன. நாய் விற்ற காசு குரைப்பதில்லையே.
நல்ல நாளில் தங்கம் வாங்கப்போகும் ஒருவித மூடநம்பிக்கை நம் சமூகத்தில் நீண்ட நாட்களாவே உண்டு. அதனால் செவ்வாய், சனிக்கிழமைகளில் நகைக்கடைகள் கூட்டமில் லாமல் இருக்கும். மக்கள் தொகை பெருகப் பெருக கடைகளும் அதிகரித்தன. அவர்கள் தமது வணிகத்தைப் பெருக்க நகைச்சீட்டு சேர்க்கும் திட்டம் போல சில கவர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவரத் தொடங்கினார்கள்.
பின்னர் திருமண சீசன் இல்லாத காலங்களில் வணிகம் செய்ய கிராமுக்கு இவ்வளவு குறைவு என்றோ, சில அன்பளிப்புகளை அளித்தோ வாடிக்கை யாளர்களை ஈர்த்தார்கள். சென்னையில் ஒரு புகழ் பெற்ற தங்க நகை அங்காடியின் வார விடுமுறையே செவ்வாய்க் கிழமைதான்.
ஆனால், இன்று அந்தக் கடை பல கிளைகளைத் திறந்தும் கூட்டம் அலைமோத, வார விடுமுறை இல்லாமலேயே அந்தக் கடைகள் இயங்குகின்றன. வாடிக்கையாளர்களும் நாள் நட்சத்திரம் பார்க்காமல் நகை வாங்குகிறார்கள்.
இத்தகைய சூழலில்தான் 10 ஆண்டுகளுக்கு முன் அட்சய திருதியை என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள் தங்க வணிகர்கள். அந்த நாளில் நகை வாங்கினால் வீட்டில் வளம் கொழிக்கும் என்றெல்லாம் புரளி கிளப்பினார்கள். ஒரு குண்டுமணித் தங்கமாவது வாங்கிவிடுவது என பெண்கள் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது. இப்போது முன் நாட்களிலேயே அட்வான்ஸ் புக்கிங்கில் போய்க்கொண்டிருக்கிறது.
ஒரு நாள் அட்சய திருதியை என்பது கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை வாரமாகிவிட்டது. (எப்படி ஆனதோ?) அட்சய திருதியை ஆஃபரெல்லாம் வந்துவிட்டது.
நாளிதழ்களில் வெளியான ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டது. `கடவுளின் பெயரில் ஏமா(ற்)றலாமா? என்பது அதன் தலைப்பு. ``அட்சய திருதியை நாளை முன்னிட்டு கிராமுக்கு இவ்வளவு தள்ளுபடி, இலவசப் பரிசு, அட்சய திருதியை ஆஃபர் என்பதைக் கண்டு ஏமாறாதீர்கள். எங்கள் கடையில் அப்படியெல்லாம் இல்லை என்கிறது அந்த விளம்பரம்.
அட்சய திருதியையைப் பயன்படுத்தி நகைக்கடைகள் செய்யும் தில்லு முல்லுகளை ஒரு நகைக்கடையே போட்டுக் கொடுத்துவிட்டது.
தங்கம் வாங்கும் போது அதன் தரத்தைப் பார்க்க வேண்டுமே தவிர, நல்ல நாள்,- நேரம்,-அட்சய திருதியை போன்றவற்றைப் பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம்தானே! நகை வாங்கும் போது எதைக் கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய நுகர்வோர் அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணா. அவர் 2013 மே 8 -10 நக்கீரனில் கூறியுள்ள தகவல்கள் இதோ:
காய்கறிக்காரரிடம் அடித்துப் பிடித்து சண்டை போட்டு கறாராக அய்ம்பது பைசா ஒரு ரூபாய் என விலை குறைத்து காய்கறிகள் வாங்கும் திறமை கொண்ட பெண்கள்... பல்லாயிரங்களைக் கொடுத்து, நகை வாங்குவதில் ஏமாந்துவிடுகிறார்கள். பலரும் நகை வாங்கும்போது... அதுல இந்திய தர நிர்ணய அமைப்பான பி.அய்.எஸ். (Berua of Indian
Standard) நகைகளுக்கு வழங்கும் ஹால் மார்க் (Hall Mark) முத்திரை இருந்தாலே 24 கேரட் தங்கம் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
ஆனால், 24 கேரட் தங்கம் என்பது நகைகளாக வடிவமைக்கும்போது 22 கேரட்தான் இருக்கும். ஆக, ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட 22 கேரட் தங்க நகை 916 அளவு துல்லியம் இருக்கும். அதேபோல் 21 கேரட்- 875 துல்லியம். 18 கேரட் - 750 துல்லியம், 17 கேரட்-708 துல்லியம், 14 கேரட்- 585 துல்லியம் என குறைந்த க்வாலிட்டி நகைகளுக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பினரால் (பிஅய்.எஸ்.) ஹால் மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. ஆனால், இதைப் பலரும் கவனிப்பதில்லை. லென்ஸ் மூலம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
விலை குறைய குறைய அந்த நகையின் துல்லியமும் குறைந்திருக்கும். அதனால்தான் ஒரு கடையில் வாங்கிய நகையை இன்னொரு கடைக்குக் கொண்டு போய் விற்கும்போது அதே ரேட்டுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அதனால் வெறும் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருக்கிறதா என்று பார்க்காமல் எவ்வளவு துல்லியம் என்பதையும் பார்க்க வேண்டும். அடுத்து நகைக்கடைக்காரர்களின் சேதாரம் என்ற சீட்டிங் என்று கூறியுள்ளார்.
பகுத்தறிவு என்பது நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வின்போதும் உரசிப்பார்க்கும் உரைக்கல். பகுத்தறிவு என்றவுடன் கடவுள் மறுப்பு மட்டுமே பலரது நினைவுக்கு வருகிறது. கூட்டமில்லாத நாளில் கடைவீதிக்குச் சென்று பொருள் வாங்குவதுகூட பகுத்தறிவுதான். தங்கத் தின் மதிப்பை உலகம் உயர்த்தி வைத்துள்ளதால் அது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது.
அதனால், இப்போது ஆபரணத்துக்காக தங்கம் வாங்குவோரைவிட முதலீட்டுக்காக தங்கம் வாங்குவோர் அதிகமாகிவிட்டனர். இச்சூழலில் தான் அட்சய திருதியை போன்ற மூடநம்பிக்கை களை தங்க நகை வணிகம் செய்வோர் பயன் படுத்துகின்றனர்.
அட்சய திருதியை நாள் உருவாக்கப்பட்டதிலிருந்து நகைக் கடைக் காரர்களுக்கு வேண்டுமானால் பணம் குவியுமே தவிர நகை வாங்கியவனுக்குக் குவியுமா? கடந்த 10 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் நகை வாங்கியோரெல்லாம் கோடீசுவரர்கள் ஆகிவிட்டார்கள் என்று சொல்லமுடியுமா? அந்த நாளில் கூடிய கூட்டத்தில், உள்ள நகையையும் பறிகொடுத்தவர்களுக்கு அட்சய திருதியை அந்த நகையைத் திருப்பிக் கொடுக்குமா?
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அட்சய திருதியை மூடநம்பிக்கை என்பது இல்லை. அப்போதும் மக்கள் நகை வாங்கிக் கொண்டுதானிருந்தார்கள். அவர்களுக்கு வளம் இல்லாமல் போய்விட்டதா? அல்லது வளம் பெருகாமல் போய்விட்டதா?
தமிழகத்தின் பிரபல கோவில் பட்டர் ஒருவர் ஆருடம் கூறியிருக்கிறார். அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட 3 மணிநேரத்தில் நகை வாங்கி ஆண்டவன் முன் வைத்து வணங்கி னால் வளம் பெருகுமாம். அந்த 3 மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் வாங்கினால் என்னாகும் என்று ஏனோ அவர் சொல்லவில்லை.
உழைப்புதான் மனிதனை உயர்த்தும்; அறிவுதான் மனிதனைக் காக்கும் என்பதை உணரும் காலம் வரும் வரை இந்த மூடநம்பிக்கைகளால் மக்கள் தமது செல்வத்தை இழந்துகொண்டுதான் இருப்பார்கள்.
- அன்பன்
இங்கு ஒரு நகைக்கடை முதலாளியின் மனைவி இறந்துவிட்டார்.அதிலிருந்து வாடிக்கைகாரர் அங்கு நகை வேண்டுவதை நிறுத்திவிட்டனர்.எனவே கடையும் பூட்டப்பட்டு விட்டது.இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ!
ReplyDeleteஅட்சயம்["அட்சயா" என்ற சமஸ்கிருத சொல்லிற்கு] என்ற சொல்லுக்கு வளர்தல் அல்லது பெருகுதல் அல்லது எப்போதும் குறையாதது என்று பொருள். அன்று எதை வாங்கினாலும் அச்செல்வம் மேலும் மேலும் பெருகும் என்ற ஒரு மூட நம்பிக்கை. அதனால் தான் மிக விலை உயர்ந்ததாக கருதப்படும் தங்கத்தை அதை நம்புகிறவர்கள் வாங்குகிறார்கள்.
ReplyDeleteமேலும் மகாபாரதம்,பாண்டவர்கள் கையில் அட்சய பாத்திரம் இருந்தது என்றும் ,எத்தனை பேருக்கும் உணவு தரும் அமுதசுரபியாக இருந்த இதனை, திரெளபதி பயன்படுத்தினாள் என்கிறது.
வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனவும் கூறுகின்றது.
அது போல அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள் என்றும் நம்பப்படுகிறது
இப்படியான பல மூட நம்பிக்கைகளின் தொகுப்பே இந்த நாளுக்கு பெருமிதம் கொடுத்து ஒரு சிறந்த,ஒரு உயர்ந்த நாளாக மாற்றப்பட்டுள்ளது.
இது தமிழ் மாதமான வைகாசியில் தேய்பிறையில் பௌர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.