வீரனும் அறவழி போரும்:

உலகில் எந்த ஒரு பெண்ணும்/தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள்,உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட,விவாஹ சுக்தம்-மண்டலம் 10,சுக்தம் 85 பாடல் 44 இல்"Not evileyed-,no slayer of thy husband,bring weal to cattle,radiant, gentle hearted;Loving the Gods, delightful,bearing heroes,bring blessing to our quadrupeds and bipeds."இப்படி கூறுகிறது.அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி,இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்:
“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”["சத்ரபதி சிவாஜி"/பாரதியார்]
என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார்.அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000/2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது,சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது.இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்:"O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight." "குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய்.ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு!(கீதை 2-37)"மேலும் போரில் மடிந்த,பெரும் வீரர்களை புதைத்த இடத்தில்,அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப்பட்டதும்,போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வதும் ஒரு வழமையாக இருந்ததுள்ளது சங்க பாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி,எதிரி படையை கலங்கடித்து, இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை,எம் மூதாதையர்கள்,தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள். அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது.எனினும் அறம் சார்ந்த வீரமே அங்கு பெருமை உடையதாய் கருதப்பட்டது.அந்த நிலை இன்று அருகிப் போயிற்று.இதை நாம் கண்டு,கேட்டு,அனுபவித்தும் உள்ளோம்.
சங்க காலம் என்பது கி.மு.700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும்.இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு.அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றுகள் உள்ளன.எனினும்,முழுமையான தரவுகள் இல்லை.அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன.சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து,பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார்.இதனால்,புறநானூற்றில் இனக்குழுத்தலைவர்கள்,குறுநில மன்னர்கள்,பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் கிடைக்கின்றன.
அதில் அரசர்களின் வீர செயல்கள்,தன் நாட்டிற்காக,தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு,அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு,அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை,இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம்.இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று.இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை.போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள்.குழந்தைகள்,முதியோர்கள், பெண்கள்,தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள்.அது மட்டும் அல்ல வைத்தியசாலை,பாடசாலை,பாதுகாப்பு இல்லங்கள்/இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன.சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள்.போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள்.இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப்பெற்றுள்ளது.அது தான் அந்த முக்கிய தகவல்.அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும்,தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம்.இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும்(Epic of Gilgamesh) இது காணப்படுகிறது.[Brien Hallett,The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக்கால மெசொப்பொத் தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும்.போர் தொடுக்கப்போகிறேன்.ஆனிரை[பசுக் கூட்டம்],ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள்[பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர்,மக்கட்செல்வம் இல்லாதவர்,ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம்.இதோ அந்த பாடல்:
"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!"

பசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும்,பெண்களும், நோயுடையவர்களும்,இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/"இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்]பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்!நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது.அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது.அதுதான் யுத்த தருமமாகும்.பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது.இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி,"பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக”என மேலும் அவனை வாழ்த்துகிறது.பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின்
பெயர்.பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment